நூருல் ஹுதா உமர்-
மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தின் 2015/2016 பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், பாடசாலை பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “அதிபர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ. நளீர்” நினைவுக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று பொலிவேரியன் ஹிஜ்ரா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
06 அணிகள் கலந்து கொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் “ஹுசைன் ஜீனியஸ்” மற்றும் “ஹுசைன் சார்க்ஸ்” அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹுசைன் ஜீனியஸ் அணி 06 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்களை குவித்தது. இதில் 20 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்ற றிபானின் அதிரடி ஆட்டமும், சப்ரின் 13 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
103 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹுசைன் சார்க்ஸ் அணி 06 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 42 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இதன் மூலம் ஹுசைன் ஜீனியஸ் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று நினைவுக்கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.சி.எம். நளீம் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எஸ்.எம். முபாரக் மற்றும் விசேட அதிதியாக மறைந்த அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களின் மகன் ஏ.என்.எம். ஆபாக் கலந்து கொண்டனர். மேலும் பாடசாலையின் பல பழைய மாணவர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர்.
போட்டித்தொடரை சிரேஷ்ட பழைய மாணவர்களான யூ.எல்.என். ஹுதா, எஸ். பஸ்லூன், எம்.எஸ்.எம். ரிஸ்னி, ஏ.ஆர்.எம். சர்பின் ஆகியோர் தொடக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment