“ஒலுவில் துறைமுகம் குறித்து மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பெயர் தவறாக இணைக்கப்படுவது கவலைக்குரியது”



முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் (மு.பா.உ.) அவர்களின் விரிவான ஊடக அறிக்கை

ஒலுவில் துறைமுகம் மற்றும் கல்முனை உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் ஏற்பட்டுவரும் கடலரிப்பு பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பெயர், ஒலுவில் துறைமுகத் திட்டத்துடனும் அதனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் கடலரிப்பு பிரச்சினைகளுடனும் தொடர்புபடுத்தப்பட்ட விதம் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஜனாதிபதி அவர்கள், “இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சர் ஆனதால், போதுமான விஞ்ஞான ஆய்வுகள் இன்றி ஒலுவில் துறைமுகம் கொண்டு வரப்பட்டது; அதன் விளைவாக கடலரிப்பு அதிகரித்துள்ளது”
என்ற கருத்துப்பட உரையாற்றியதாக அறியப்படுகிறது.

இந்தக் கருத்து, குறிப்பாக மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் பாரம்பரியத்தை மதித்து போற்றும் மக்களிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், வரலாற்று உண்மைகளும், ஒலுவில் துறைமுகத் திட்டத்தின் உண்மையான பின்னணியும் இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் பொருந்தாதவை.

உண்மையில், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கிழக்கின் அபிவிருத்தியைப் பற்றிய தெளிவான தொலைநோக்குப் பார்வையுடைய தலைவர். ஒலுவில் பகுதியில் துறைமுகம் அமைப்பது குறித்து அவர் சிந்தித்திருந்தது உண்மைதான். ஆனால் அது வெறும் அரசியல் ஆசையோ உணர்ச்சி சார்ந்த முடிவோ அல்ல. மாறாக, விஞ்ஞான ரீதியாக சாத்தியமானதா, பொருளாதார ரீதியாக பயனுள்ளதா, எதிர்கால சுற்றுச்சூழல் பாதிப்புகள் உண்டாகுமா, மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கம் ஏற்படுமா என்பன அனைத்தையும் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.

அதற்கான முக்கிய சான்று என்னவென்றால், ஒலுவில் துறைமுகம் தொடர்பான ஆரம்பகட்ட சாத்தியவள ஆய்வு (Feasibility Study) முழுமையான சாதகமான முடிவுகளை வழங்காத காரணத்தால், அவர் தனது காலகட்டத்தில் துறைமுகத்தின் பிரதான உட்கட்டமைப்பான அலைத்தடுப்பு அணை (Breakwater) அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கவில்லை. இதுவே அவர் எவ்வளவு பொறுப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டார் என்பதை வெளிப்படுத்துகிறது.

அதற்கு பதிலாக, கிழக்குப் பிராந்திய இளைஞர்கள் தொழில்நுட்ப அறிவைப் பெற வேண்டும் என்ற நோக்கில் துறைமுக அதிகார சபையின் கீழ் மஹாபொல தொழில்நுட்ப கல்லூரியை நிறுவ நடவடிக்கை எடுத்தார். மீனவ சமூக நலனுக்காக ஒலுவில் வெளிச்சவீட்டை அமைத்தார். கிழக்கிற்கு வருகை தரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கான தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்தினார். இவை அனைத்தும் அந்தப் பிராந்தியத்தின் நீண்டகால அபிவிருத்தியை நோக்கிய திட்டமிட்ட அணுகுமுறைகளாகும்.

அவருடன் நெருக்கமாக பணியாற்றிய அதிகாரிகள், ஒலுவில் பிரதேச புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அக்கால அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இதனை நன்கு அறிவார்கள். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் ஒலுவில் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் எந்த கட்டுமானப் பணிகளோ அல்லது ஆரம்ப நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

அவர் விரும்பியிருந்தால் துறைமுக அதிகார சபையின் நிதியைப் பயன்படுத்தி உடனடியாக திட்டத்தை ஆரம்பிக்க முடிந்திருக்கிறது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, தேசிய பொருளாதார வளர்ச்சிக்காக திருகோணமலையில் “அஷ்ரப் டெர்மினல்” என அறியப்படும் புதிய துறைமுக Terminal அமைப்பதற்கான பல்லாயிரம் மில்லியன் ரூபாய் மதிப்பிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். இது அவரது தேசிய நோக்கையும், திட்டமிட்ட அபிவிருத்திச் சிந்தனையையும் காட்டுகிறது.

ஒலுவில் துறைமுகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது 2008ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான். ஆகையால் இன்று உருவாகியுள்ள கடலரிப்பு உள்ளிட்ட சிக்கல்களுக்கு முழுப்பொறுப்பையும் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்மீது சுமத்துவது வரலாற்று உண்மைகளுக்கு முரணானதோடு, ஒரு மறைந்த தலைவரின் அரசியல் பங்களிப்பை தவறாகப் புரிந்துகொள்ளச் செய்யும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், என்னுடன் பலமுறை மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களைப் பற்றிப் பாராட்டி உரையாடியுள்ளார். குறிப்பாக பாராளுமன்றத் தேர்தல் முறையில் 12 வீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை 5 வீதமாகக் குறைத்த அரசியல் மாற்றத்திற்கு தலைவர் அஷ்ரப் முக்கிய பங்காற்றியதாகவும், அதன் மூலம் ஜே.வி.பி. உள்ளிட்ட பல கட்சிகளுக்கு பாராளுமன்றப் பிரவேச வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, அவர் அம்பாறைக்கு அரசியல் நிகழ்வுகளுக்காக வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் சிந்தனை, சமூகப்பணி, தேசியப் பங்களிப்பு தொடர்பாக என்னிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்துள்ளார். பல பொதுக்கூட்டங்களிலும் அவர் தலைவர் அஷ்ரப் அவர்களின் தொலைநோக்குப் பார்வையையும் அரசியல் முதிர்ச்சியையும் பாராட்டிப் பேசியுள்ளார். இப்படிப்பட்ட பின்னணியுடைய ஒருவர், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்வாறான கருத்து வெளியிட்டதாக அறியப்படுவது எனக்கு தனிப்பட்ட முறையிலும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள், கல்வி முன்னேற்றம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய ஒற்றுமைக்காக தன்னலமின்றி பணியாற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைவர். அவரின் பெயருடன் தொடர்புபடுத்தப்படும் எந்த குற்றச்சாட்டும் வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் அணுகப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே, இவ்விடயத்தில் உருவாகியுள்ள தவறான புரிதல்களை நீக்குவதற்கும் உண்மை நிலையை தெளிவுபடுத்துவதற்கும், முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து, ஒலுவில் துறைமுகத் திட்டத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணியையும் மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்களின் உண்மையான நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்த வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகிறேன்.


சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் (மு.பா.உ.)
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :