நூருல் ஹுதா உமர்-
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் அவர்கள், ஒலுவில் அக்/அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரிக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி பாடசாலை சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
அக்/அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரியின் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர்கள் ஒன்றியமும், பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து முன்னெடுத்த முதற்கட்ட வேலைத்திட்டங்களில் ஒன்றாக பாடசாலை புறச்சூழலில் இரவு நேரங்களில் நிலவிய வெளிச்சமின்மை மற்றும் சுத்தம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் அவர்கள் பாடசாலைக்கு நேரில் விஜயம் செய்து, தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதிபர் எஸ்.எம்.பி.எம். அறூஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் LED Focus Light பொருத்துதல், வளாகக் குப்பைகளை அகற்ற JCB இயந்திர வசதி செய்தல் மற்றும் பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட சில மலசலகூடங்களைப் பழுது பார்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்படி, தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனது சொந்த நிதியின் மூலம் LED Focus Light, மின்வயர்கள் உள்ளிட்ட பொருட்களை உடனடியாக வழங்கியதுடன், பிரதேச சபையின் JCB இயந்திரத்தையும் அனுப்பி வைத்து வளாக சுத்திகரிப்பு பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
மேலும், பாடசாலையின் ஏனைய தேவைகள் தொடர்பிலும் உதவிகள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக பழைய மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் ஒன்றியம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை சமூகத்தினர் சார்பில் பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், JCB இயந்திர வசதியைப் பெற்றுத்தருவதில் முக்கிய பங்களிப்பு வழங்கிய பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். ரினாஸ் அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

0 comments :
Post a Comment