காரைதீவில் தந்தை செல்வாவின் 49வது நினைவு தினமும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 ஆண்டு நிறைவு நிகழ்வும்


வி.ரி. சகாதேவராஜா-

லங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 49வது நினைவேந்தல் நிகழ்வும், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 வது ஆண்டு விழா நிகழ்வும் நேற்று (26.04.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் , காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கி.ஜெயசிறில் தலைமையில் தலைமைக் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

தமிழரின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிகழ்வுகளை முன்னிட்டு நினைவு நிகழ்வு மரியாதையுடன் நடைபெற்றது. தமிழர் அரசியல் உரிமைகளுக்காக ஆயுள் முழுவதும் போராடிய தந்தை செல்வாவின் 49வது நினைவு தினமும், வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் ஒட்டி இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதான உரையாற்றிய காரைதீவு தவிசாளர்..

தந்தை செல்வா தமிழர் அரசியல் உரிமைப் போராட்டத்தின் சின்னமாக திகழ்ந்தார் என்றும், அவர் எடுத்துச்சென்ற அமைதிப் போராட்டப் பாதை இன்று கூட தமிழர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழர் அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது என்றும், அது தமிழர் தன்னாட்சி குறித்த அரசியல் கோரிக்கையை உலக அரங்கில் வலியுறுத்திய முக்கிய ஆவணம் எனவும் விளக்கினார்.

இன்றைய சூழலில், தந்தை செல்வாவின் கொள்கைகள் மற்றும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படை நோக்கங்களை நினைவுகூர்வது மட்டுமல்லாமல், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒற்றுமை, பொறுப்பு உணர்வு ஆகியவை தமிழர் சமூகத்தில் வலுப்பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் அரசியல் மற்றும் சமூக பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அவரின் சேவைகளையும் தமிழர் அரசியல் வரலாற்றில் அவருடைய பங்களிப்பையும் நினைவுகூறும் உரைகள் இடம்பெற்றன.

இந்த நினைவு நிகழ்வு, தமிழர் அரசியல் விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்ததுடன், எதிர்கால தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடங்களை எடுத்துச் செல்லும் முக்கிய தருணமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :