“தாய்மொழி எங்கள் அடையாளமும் பாரம்பரிய பெருமையும் ஆகும்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, தாய்மொழியின் செழுமை, பண்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்தது.
மொழித்துறையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து, கவிதை, நாட்டார் பாடல்கள், உரைகள், “கவ்வாத்துக்கத்தி” என்ற நூல் அறிமுகம், மேலும் “தாய்மொழி வழிக்கல்வி இன்றைய காலத்துக்கு அவசியமா – அவசியமில்லையா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஆகியவை இடம்பெற்று விழாவை களைகட்டச் செய்தன.
வரவேற்புரையை எம். அப்துல் றஸ்ஸாக், தலைமையுரையை பேராசிரியர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரஃப், பிரதம அதிதி உரையை பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் ஆகியோர் நிகழ்த்தினர். பட்டிமன்றத்துக்கு சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். அய்யூப் நடுவராகப் பணியாற்றினார். நன்றியுரையை மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என். சுபராஜ் வழங்கினார்.
பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் தனது உரையில், தாய்மொழியின் முக்கியத்துவம், அடையாளம் மற்றும் சமூக வளர்ச்சியில் அதன் பங்கு குறித்து விரிவாக விளக்கினார். மொழி மனித சிந்தனையின் அடிப்படை ஊடகமாக விளங்குவதாகவும், எண்ணங்கள், உணர்வுகள், கருத்துகளை வெளிப்படுத்தும் பிரதான கருவி மொழியே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாய்மொழியில் கல்வி கற்பது சிந்தனைத் திறனை வளர்க்கும் என்பதுடன், அறிவியல் முன்னேற்றத்துக்கும் தனிமனித ஆளுமை மேம்பாட்டுக்கும் அடித்தளமாக அமைகிறது என்றும் குறிப்பிட்டார். சீனா, ஜப்பான், இந்தியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தங்களது தாய்மொழிகளை பாதுகாத்து வளர்த்ததன் மூலம் உலகளாவிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன எனவும் எடுத்துரைத்தார்.
மேலும், மொழி அடையாளம் தொடர்பான போராட்டங்களே பங்களாதேஷ் உருவாவதற்கும், இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப் போருக்கும் காரணிகளில் ஒன்றாக அமைந்தன என்றும் நினைவூட்டினார். இதனால் மொழி என்பது வெறும் தொடர்பாடல் கருவி அல்ல; அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களிலும் ஆழமான தாக்கம் செலுத்தும் சக்தி எனவும் வலியுறுத்தினார்.
பேராசிரியர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரஃப் தனது தலைமையுரையில், சர்வதேச தாய்மொழி தினத்தின் முக்கியத்துவம் இளைய சமூகத்தினரிடம் போதியளவில் உணரப்படாமல் இருப்பது கவலைக்குரியது எனக் குறிப்பிட்டார். மொழி மற்றும் பண்பாட்டு தினங்கள் சமூக அடையாளத்தை பாதுகாக்கும் முக்கியமான நிகழ்வுகளாகும் என்றும், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு கல்விச் சமூகத்திற்கே உரியது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ் மொழியை மதத்துடன் கலக்கக் கூடாது என்றும், தமிழ் அனைத்து சமயங்களையும் தழுவிய பொதுவான பண்பாட்டு மொழி என்றும் விளக்கினார். மொழியின் மேன்மை அதைப் பேசும் சமூகத்தின் அறிவு, செயற்பாடு மற்றும் முன்னேற்றத்தைப் பொறுத்தது என்றும் கூறினார்.
மொழித்துறையின் நான்காம் ஆண்டு மாணவர் ஆர்.எம். மனாஸ் எழுதிய “கவ்வாத்துக்கத்தி” என்ற நூல் இந்நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. நூல் விமர்சனத்தை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான், பேராசிரியர் கலாநிதி எம்.எ.எஸ்.எவ். சாதியா, சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ஆர். பாத்திமா சீபா, விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னா, புவியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். அய்யூப் உள்ளிட்ட பல கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

0 comments :
Post a Comment