களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் 50வது ஆண்டு இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது



அஷ்ரப் ஏ. சமத்-
ளனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் 50வது ஆண்டு நினைவை முன்னிட்டு நேற்று (24) பல்கலைக்கழகத்தின் பிரதான கூட்ட மண்டபத்தில் மாபெரும் இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு, இஸ்லாமிய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் லுக்மான் சுகைப் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்ட மண்டபம் முஸ்லிம்களின் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு, முஸ்லிம் மாணவர்களுடன் இணைந்து நட்புறவுடன் கலந்துரையாடி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, சிங்கள மாணவர்கள் உதவி ஒத்தாசை புரிந்ததும் காணக்கூடியதாக இருந்தது.

நோன்பு கஞ்சி, ஈத்தம் பழம், சமோசா, பெட்டீஸ், பழவகைகள், வட்டிலப்பம் உள்ளிட்ட இப்தார் உணவுகள் வழங்கப்பட்டு, பங்கேற்றோர் ரசித்து உண்டு மகிழ்ந்தனர். மேலும், ஆத்தூர் வாசனைப் போத்தல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இம்மண்டபத்தில் குர்ஆன் ஓதல், பாங்கு, ஹம்து, ஸலவாத்து ஆகியவை அமைதியான ஆன்மீக சூழலில் ஒலித்தன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, 1974ஆம் ஆண்டு முஸ்லிம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் ஸ்தாபகத் தலைவராக பணியாற்றிய பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் என்.எம். அமீன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு, பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் உபவேந்தருமான பேராசிரியர் நிலந்தி டி சில்வா மற்றும் பேராசிரியர் எம்.ஜே.எம். ராசிக் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

உபவேந்தர் உரையாற்றுகையில், களனி பல்கலைக்கழகம் 150 ஆண்டுகளை கொண்டாடிய வேளையில், 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸின் மலரை பார்வையிட்டதாகவும், அதில் என்.எம். அமீன் அவர்கள் தலைவராக இருந்ததை நினைவுகூர்ந்தார்.

பிரதம அதிதி என்.எம். அமீன் அவர்கள் உரையாற்றுகையில், முஸ்லிம் மஜ்லிஸின் முதல் மலரின் அட்டைப்படம் சிங்கள மன்னன் ராஜசிங்கன் தொடர்பான வரலாற்றுச் சம்பவத்தை பிரதிபலிப்பதாக விளக்கினார். போர்த்துக்கேயர்களிடமிருந்து தப்பிய மன்னனை மறைத்து பாதுகாத்த ஓர் முஸ்லிம் பெண்ணின் தியாகம் குறித்து குறிப்பிட்டு, இச்சம்பவம் இன்று வரை மையங்கனைப் பகுதியில் நினைவுகூரப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து மறைந்த கலாநிதி சுக்ரி அவர்கள் நூலாக எழுதியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களில் பயிலும் தமிழ், சிங்கள, கிறிஸ்தவ மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் பல்வேறு பீடங்களில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டது.

ஏனைய பல்கலைக்கழகங்களின் முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகள், களனி பல்கலைக்கழக பௌத்த பீட தேரர்கள், கிறிஸ்தவ அமைப்புகள், தமிழ் மன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும், அஷ்ஷேக் அம்கர் அமர்ரு டீன் அவர்கள் சிங்கள மொழியில் சிறப்புரையாற்றி, நோன்பின் முக்கியத்துவம், முஸ்லிம் சமூகத்தின் ஒழுக்கப் பண்புகள், தேசிய ஒற்றுமை மற்றும் சமாதானம் கட்டியெழுப்புவதில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு குறித்து விளக்கினார். இதன் தொடர்ச்சியாக, மண்டபத்தில் கூட்டுத் தொழுகையும் இடம்பெற்றது.

இந்த இப்தார் நிகழ்வு, தேசிய ஐக்கியம், மத நல்லிணக்கம் மற்றும் மாணவர்களுக்கிடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் சிறந்த மேடையாக அமைந்தது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :