தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இப்புகையிரதச் சேவையை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருமாறு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் அவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் அவர்கள்,
02.07.2025 அன்று நடைபெற்ற வீதி, பெருந்தெருக்கள், விமானப் போக்குவரத்து மற்றும் புகையிரதச் சேவை தொடர்பான விசேட கூட்டம்,
06.01.2026 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்,
09.01.2026 அன்று நடைபெற்ற விசேட நாடாளுமன்ற விவாதம்
ஆகிய சந்தர்ப்பங்களில், துறைசார் அமைச்சுகளுக்கும் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக அழுத்தமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 08.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட ‘மீனகயா’ கடுகதி புகையிரதத்தில், வழக்கமாக இணைக்கப்படும் 10 பெட்டிகளுக்குப் பதிலாக 6 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. இதில், படுக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட (AC) வகுப்புப் பெட்டிகள் நீக்கப்பட்டதுடன், சாதாரண படுக்கை வசதிப் பெட்டிகளும் குறைக்கப்பட்டிருந்தன. சிற்றுண்டிச்சாலை பெட்டியுடன் சேர்த்து மொத்தமாக 6 பெட்டிகளாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதனால் மட்டக்களப்பு மாவட்ட பயணிகள் மட்டுமன்றி, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பயணிகளும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். போதிய எண்ணிக்கையிலான மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் இல்லாததால், நடுத்தர வர்க்கப் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த முறைப்பாடுகளை அடுத்து, நேற்று (24.02.2026) இரவு 08.15 மணிக்கு புறப்பட்ட புகையிரதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத், சக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் ஆகியோருடன் மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், பயணிகளின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவையில் பெட்டிகளின் எண்ணிக்கையை வழமை போன்று அதிகரித்து, அனைத்து வகுப்புச் சேவைகளையும் முன்னெடுப்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் துறைசார் அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

0 comments :
Post a Comment