சாய்ந்தமருது மாளிகை காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு அரசியல் தலையீடுகளற்ற நிரந்தர நிர்வாகம் அவசியம்- வொய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் செயலாளர் ரம்ஸான்



வக்ஃப் சபையின் செயற்பாடுகளுக்கு வொய்ஸ் ஒப் மருதூர் கடும் கண்டனம்
சாய்ந்தமருது மாளிகை காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலில் கடந்த பத்து வருடங்களாக நிலவி வரும் நிர்வாக வெற்றிடத்தை முடிவுக்குக் கொண்டு வர, அரசியல் தலையீடுகள் அற்ற, சுயாதீனமான நிரந்தர நிர்வாகம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என வொய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில், வொய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் செயலாளர் ஏ.எம். ரம்ஸான் விரிவாக கருத்துத் தெரிவித்தார்.

2014 முதல் தொடரும் நிர்வாக சிக்கல்


2014 ஆம் ஆண்டிலிருந்து சாய்ந்தமருது மாளிகை காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நிரந்தர நிர்வாகம் இன்றி இடைக்கால நிர்வாகங்களின் கீழ் மட்டுமே நிர்வாகம் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு வை.எம். ஹனிபா அவர்களின் மறைவுக்குப் பின்னர், ஹிபத்துல் கரீம் தலைமையில் நிர்வாகம் செயல்பட்டாலும், இதுவரை நிரந்தர நிர்வாகம் அமைக்கப்படாத நிலை ஊர்மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

84 ஏக்கர் வக்ஃப் காணிகள் – நிர்வாகமற்ற சொத்துகள்


சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்குச் சொந்தமானதாக சுமார் 84 ஏக்கர் வக்ஃப் காணிகள், கடைகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன.
ஆனால் அவை தொடர்பான அடிப்படை ஆவணங்கள் கூட தற்போது செயற்படும் இடைக்கால நிர்வாகத்திற்குத் தெளிவாகத் தெரியாத நிலை காணப்படுவதாக ரம்ஸான் குற்றம் சாட்டினார்.

நிரந்தர நிர்வாகம் இல்லாததால்,
சொத்துக்களின் பாதுகாப்பு
வருமான முகாமைத்துவம்
ஊர் அபிவிருத்தி
என எந்தவொரு நடவடிக்கைகளையும் திட்டமிட்டு முன்னெடுக்க முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் அழுத்தத்தில் உருவான இடைக்கால நிர்வாகம்

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி, அரசியல் அழுத்தத்தின் காரணமாக 42 பேரைக் கொண்ட இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்பட்டதாகவும், அது மக்கள் எதிர்பார்த்த விதத்தில் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்குள் நிரந்தர நிர்வாகத்திற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள் முரண்பாடுகள் காரணமாக முறிந்ததாகவும், தலைவர், செயலாளர் உட்பட சிலர் தமது பதவிகளில் இருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற உத்தரவை மீறியதாக வக்ஃப் சபை மீது குற்றச்சாட்டு


நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவின் படி, “முந்தைய இடைக்கால நிர்வாகத்தில் இடம்பெற்ற எவரையும் புதிய நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யக்கூடாது” என அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும்,
 தற்போது 29 பேரைக் கொண்ட புதிய பட்டியல் (உத்தியோகப்பற்றற்ற) வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் 20க்கும் மேற்பட்டோர் முந்தைய இடைக்கால நிர்வாக உறுப்பினர்களே எனவும் ரம்ஸான் சுட்டிக்காட்டினார்.


மேலும், அந்தப் பட்டியலில் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய நபர்கள் இடம்பெற்றிருப்பது, நிர்வாகத்தில் அரசியல் பின்புலம் வெளிப்படையாகச் செயல்படுகிறது என்பதற்கான சான்றாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டநடவடிக்கைக்கு மக்கள் தயார்


இந்த விடயம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) விண்ணப்பங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றம்
உயர் நீதிமன்றம் என சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு மக்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

29 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகம் அமுல்படுத்தப்படும் பட்சத்தில், தடை உத்தரவு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பள்ளிவாசல் அரசியலுக்கான மேடை அல்ல


பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான தகுதிகளை விளக்கிக் கூறிய ரம்ஸான்,

“அல்லாஹ்வுக்குப் பயப்படுதல், தொழுகையை நிலைநாட்டுதல், சக்காத் வழங்குதல், அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பயப்படாமை ஆகிய பண்புகள் உள்ளவர்களே நிர்வாகத்துக்கு வர வேண்டும்”
என வலியுறுத்தினார்.

அரசியல் மற்றும் பணபலம் கொண்டு பதவிகளை நாடுபவர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்திற்குத் தகுதியற்றவர்கள் என்றும் அவர் கடுமையாகக் கூறினார்.

சகாத் வழங்கல் வீழ்ச்சி – நிர்வாகமின்மையின் விளைவு

ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான மூடைகள் நெல்லாக சகாத் வழங்கப்பட்ட சாய்ந்தமருது பள்ளிவாசலில், தற்போது 17 மூடைகள் மட்டுமே கிடைத்துள்ளமை மிகுந்த கவலைக்குரிய விடயமாகக் குறிப்பிடப்பட்டது.

நிரந்தர, நம்பகமான நிர்வாகம் இல்லாததே மக்களின் நம்பிக்கை குறைவதற்கான முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

15 மஹல்லாக்களையும் உள்ளடக்கிய நிரந்தர நிர்வாகம்

சாய்ந்தமருதில் உள்ள 15 மஹல்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, கல்விமான்கள், புத்திஜீவிகள், மீனவர் சமூகம், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு சுயாதீன நிரந்தர நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மட்டத்துக்கு முறையீடு

இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பத் தேவையான அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ளதாகவும்,
அரசாங்கமும் ஜனாதிபதியும் தலையிட்டு வக்ஃப் சபைக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

வொய்ஸ் ஒப் மருதூர் தொடர்ந்து குரல் கொடுக்கும்

சாய்ந்தமருது மக்களின் உரிமைகள் மற்றும் ஊரின் நலன் சார்ந்த விடயங்களில், வொய்ஸ் ஒப் மருதூர் இனியும் தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :