இந்த நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் புவி தகவல் நுட்ப குறுங்கால பாடநெறியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.எல். ஐயூப் வரவேற்புரையினை நிகழ்த்தினார். புவியியல் துறை தலைவர் கலாநிதி ஐ.எல்.எம். சாஹிர் தலைமை உரையாற்றினார்
புவியியல் பாடப்பிரிவின் தலைமை பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். கலீல் புவியியல் துறை தொடர்பில் உரையாற்றினார். கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் விஷேட உரை ஒன்றினை நிகழ்த்தினார்.
இங்கு விரிவுரையாளர் எம்.என். நுஸ்கா பானு நன்றியுரை நிகழ்த்தினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக் கலாசாரப் பீடத்தின் புவியியல் துறை சார்பாக நடத்திய Geo-Informatics குறுங்கால பாடநெறி கடந்த 2025 செப்டம்பர் 13 முதல் ஒக்டோபர் 4 வரை ஏழு தொடர்ச்சியான வார இறுதி நாட்களில் தகவல் தொழில்நுட்பத் துறையின் கணினி ஆய்வகத்தில் இடம்பெற்றிருந்தது..
இங்கு சிறப்புரையாற்றிய உபவேந்தர் ஜுனைடீன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் பல துறைகளில் புதுமையுடன் முன்னேறி வரும் ஒரு சிறப்புப் பீடமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று அவர் இவ்வாறு உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது:
“கலை மற்றும் கலாசார பீடம் பல்கலைக்கழகத்தின் பழமையானதும், வலுவானதுமான பீடம் ஆகும். இது மற்றய பீடங்களை விட விரிவாக வளர்ந்துள்ளது. பல துறைகளில் புதிய கோணங்களில் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பது பெருமைக்குரிய ஒன்று. புவியியல்துறை, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (ICT) போன்ற துறைகள் இணைந்து செயல்படுவது பீடத்தின் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துகிறது,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
“பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் இமானுவேல் க்கிறைக் உடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை முன்னெடுத்திருப்பது பெரும் சாதனையாகும். இது நமது பல்கலைக்கழகத்தின் திறனையும், சர்வதேச இணைப்புகளுக்கான திறப்பையும் காட்டுகிறது. இப்படிப்பட்ட பன்னாட்டு தொடர்புகள் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்,” என அவர் குறிப்பிட்டார்.
உபவேந்தர் தொடர்ந்து பேசுகையில்:
“நாம் இன்று அடைந்துள்ள முன்னேற்றத்தால் பெருமை கொள்ளலாம்; அதேவேளை நம்முடைய இலக்கை மேலும் உயர்த்தி தொடர்ந்து முன்னேற வேண்டும். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஒரு இடத்தில் நின்றுவிடக் கூடாது. திறமைகள் வளரச் செய்யும் புதுப்பிக்கப்பட்ட பாடநெறிகளும், பொதுப் பாடங்களும் அனைத்து பீடங்களுக்கும் பரவலாக வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் துறைகளுக்கு இடையிலான இணைப்புகள் அவர்களின் சமூக மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும்,” என்றார்.
தனது உரையின் இறுதியில் அவர், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக தேவையான வசதிகள் — குறிப்பாக கணினி ஆய்வக வசதிகள் மற்றும் மென்பொருள் வசதிகள் — மேம்படுத்தப்பட வேண்டுமென்றும், தனது பதவிக்காலத்தில் அதனை நிறைவேற்ற உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பீடாதிபதி, பேராசிரியர் எம்.எம். பாஸில் ஆற்றிய உரை கல்வி, சமூக மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதிய நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய வேகமான தொழில்நுட்ப உலகில் “Geo-Informatics சிஸ்டம் (GIS)” எனப்படும் துறை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதான உரையாற்றிய அவர், “இன்றைய உலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் கவனத்தில் கொண்டுள்ள ‘தன்னிலையியக்க வளர்ச்சி இலக்குகள்’ (Sustainable Development Goals - SDGs) நோக்கங்களை நிறைவேற்றுவதில் Geo-Informatics முறைமை (GIS) முக்கிய பங்காற்றுகிறது” என்றார்.
அவர் மேலும் தொடர்ந்தபோது, “மனிதனால் உருவாகும் மற்றும் இயற்கையால் நிகழும் அனர்த்தங்களை முகாமை செய்வதிலும், அவற்றைத் தடுப்பதிலும் GIS பெரும் பங்காற்றுகிறது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த துறை மாணவர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்கி வருகின்றது,” எனவும் குறிப்பிட்டார்.
அவரது உரையில் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தையும் நினைவுகூர்ந்த பேராசிரியர் பாஸில், “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை Geo-Informatics துறையில் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. இங்கு கல்வி கற்ற பல விரிவுரையாளர்கள் இப்போது நாட்டின் முன்னணி ஜியோஸ்பேஷியல் நிபுணர்களாக விளங்கி வருகின்றனர். தற்போது எங்கள் துறையில் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது கூட, எங்கள் துறைக்கு தனித்துவமான தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், Geo-Informatics துறையின் தொடக்கத்திலிருந்து அதனை வலுப்படுத்திய துறைத் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்களிப்பையும் பாராட்டிய அவர், “றினோஸ், ஷாஹிர், நிஜாமீர், ஐயூப் ஆகியோர் நாட்டில் குறிப்பிடத்தக்க GIS நிபுணர்களாக உருவாகியுள்ளனர். இவர்களின் பங்களிப்பினால் இந்த துறை இன்று பெருமைமிகு நிலையில் உள்ளது,” எனக் கூறினார்.
இங்கு உரையாற்றிய தலைமை பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். கலீல் அவர்கள், பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் வளர்ச்சி வரலாற்றை நினைவூட்டினார்.
“புவியியல் பாடம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1996ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இன்று அதற்கு 30 ஆண்டுகளுக்கு நெருக்கமான பெருமைமிகு பயணம் அமைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“அந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் இரு பீடங்களே இருந்தன — வர்த்தக பீடமும் கலைப் பீடமும். அப்பொழுது ஒரே ஒரு கணினி பிரிவு (Computer Unit) மட்டுமே இருந்தது. ஆனால் கலைப் பீட மாணவர்களின் கணினி திறன்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கலைப் பீடத்திற்காக தனி கணினி பிரிவு ஒன்றை உருவாக்கியோம். இன்று அது ஒரு சிறப்புத் துறையாக வளர்ந்துள்ளது என்பது பெருமை.”
அவர் மேலும் தெரிவித்ததாவது, புவியியல் மற்றும் பூமி அறிவியல் (Earth Sciences) இணைந்த கல்வி துறையை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக செனட் நிலை வரை முன்மொழிவு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார்.
“இந்த பிராந்திய பல்கலைக்கழகமான தென்கிழக்குப் பல்கலைக்கழகம், தற்போது Geo-Informatics துறையில் நாட்டின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது நால்வர் ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பது, இந்த துறையின் வளர்ச்சிக்கு சான்றாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், புவியியல் துறையில் மாணவர்களின் ஈடுபாடு மற்றும் முன்னேற்றத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
“கலைப் பீடத்தில் இருந்து விஞ்ஞான அடிப்படையிலான கல்வியை இணைத்து பட்டம் வழங்குகின்ற சிலபல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் ஒன்று என்பது பெருமை,” என முதன்மைப் பேராசிரியர் கலீல் தெரிவித்தார்.
அவரது உரை, பல்கலைக்கழகத்தில் புவியியல் மற்றும் Geo-Informatics கல்வி வளர்ச்சியின் வரலாறையும், அதன் எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியங்களையும் வலியுறுத்தியதாக இருந்தது.
நிகழ்வில் உரையாற்றிய புவியல் துறைத் தலைவர் கலாநிதி சாஹிர்:
புவியியல் மற்றும் Geo-Informatics கல்வி, “இன்றைய உலகில் நிலவியல் சிந்தனை மற்றும் புவிச்சார்பு தொழில்நுட்பங்கள் நகரமைப்பு, சூழல் முகாமைத்துவம், பேரிடர் அபாயக் குறைப்பு, இயற்கை வள முகாமைத்துவம், போக்குவரத்து, வேளாண்மை, பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
“இந்தப் பாடநெறி மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை மட்டுமல்லாது, நிலவியல் தரவுகளைப் புரிந்துகொள்வதற்கான ஆழ்ந்த சிந்தனையையும் வழங்குகிறது. இதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கும் நிலைத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கலாம்,” எனக் கூறினார்.
“Geo-Informatics என்பது எப்போதும் வளர்ந்து வரும் துறையாகும். மாணவர்கள் பெற்றுள்ள அறிவை சமூக நலனுக்காகப் பயன்படுத்துங்கள்,” எனவும் மாணவர்களை ஊக்குவித்தார்.
கற்கைநெறியின் இணைப்பாளர் ஐயூப் தெரிவித்தபடி, Geo-Informatics துறை வேகமாக வளர்ந்து வருகின்றது. ஜியோடேட்டா சேகரிப்பு, பரிசீலனை மற்றும் பகுப்பாய்வு உள்ளிட்ட திறன்களை மாணவர்கள் கற்றுக்கொண்டனர். இந்த பாடநெறி மாணவர்களுக்கு அரசாங்க, தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையில் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்கும் திறன் வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இணைப்பாளர் ஐயூப் தனது உரையில், Geo-Informatics இன் எதிர்கால வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கால பணியிடங்களில் பெறக்கூடிய வாய்ப்புகள் குறித்து வலியுறுத்தினார். மாணவர்களை தொடர்ந்து கற்றலும் ஆராய்ச்சியையும் செய்ய ஊக்குவித்து, அவர்களின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்களும் மாணவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

.jpeg)

.jpeg)
.jpeg)







.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
0 comments :
Post a Comment