இடைக்கால சபையின் செயலாளர் எஸார் மீராசாஹிபின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பள்ளிவாசல் இடைக்கால சபைத் தலைவர் அல் ஹாஜ் முபாறக் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள், உலமாக்கள் புத்திஜீவிகள் மற்றும் ஹிஜ்ரா பள்ளிவாசலின் தலைவர் முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இங்கு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் தலைவர் மற்றும் ஹிஜ்ரா பள்ளிவாசலின் தலைவர் ஆகியோர் தங்களது நியாயங்களை முன்வைத்தனர்.
பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளியின் நிர்வாக சபைத் தலைவரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தனது உரையின் போது சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் வசிக்கும் மக்களின் நலன் கருதி அங்குள்ள ஹிஜ்ரா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை ஆரம்பிப்பதற்காக, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிடம் நீண்ட காலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும்
ஹிஜ்ரா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை சாதகமாக பரிசீலித்து, அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து அதற்கான காரணங்களையும் முன்வைத்தார்.
இங்கு உரையாற்றிய அல் ஹாஜ் முபாறக், “இந்தச் சந்திப்பு யாரையும் எதிர்ப்பதற்கோ, வேறுபாடுகள் காட்டுவதற்கோ அல்ல; அல்லாஹ்வுக்காக யோசிக்கும் மனநிலையில் அனைவரும் ஒன்றிணைவதே நோக்கம்,” என்று கூறினார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசமும் மக்களும் நீண்டகாலமாக தங்களுக்கிடையே அன்னியோன்யத்தை பேணிவருவதாகவும் கொள்கைகள் ரீதியாகவோ அல்லது பள்ளிவாசல்கள் ரீதியாகவோ அவரவரது கடமைகளை ஆற்றுகின்றபோதிலும் பெரும்பான்மையானவர்கள் தாய்ப்பள்ளிவாசலான சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து செயற்படுவதாகவும் இப்போது பொலிவேரியன் கிராமத்தில் வசிக்கும் மக்களின் சார்பில் அங்குள்ள ஹிஜ்ரா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் முன்வைத்துள்ள காரணங்களை அடிப்படையாக வைத்தும் கலந்துரையாடலில் பங்குகொண்டுள்ள உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வைத்தும், ஹிஜ்ரா பள்ளிவாசல் நிர்வாகத்தாரின் கோரிக்கைகள் தொடர்பில் பள்ளிவாசலினதும் புத்திஜீவிகளினதும் கருத்துக்களுக்கு அமைவாக கோரிக்கை தொடர்பில் சாதகமாக பரிசீலித்து உலமாக்களின் கருத்துக்களுக்கு அமைவாக சட்டரீதியான அனுமதியைப் பெறுவதற்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த முபாறக் ஹாஜி,
“இந்தச் சந்திப்பில் ஒவ்வொருவரும் தங்கள் மனதின் உண்மையான நோக்கங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அல்லாஹ் அனைவருக்கும் நோயற்ற நீண்ட ஆயுளையும், ஜன்னத்தில் சிறப்பான வாழ்வையும் அருள்க,” என்று பிராத்தித்தார்.
அல்ஹாஜ் முபாறக், முன்னாள் பிரதேச செயலாளர் சலீம் குறித்து குறிப்பிடுகையில்,
“அவர் ஒரு சிறந்த நிர்வாகி. அவரது சேவை நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம். அவரை ஹிஜ்ரா பள்ளிவாசல் சமூகம் அவர்களது சபையில் இணைத்தது செயற்படுவது ஒரு பாக்கியம்,” என்றும் பாராட்டினார்.
அத்துடன் மஸ்ஜிதுகளை முன்னேற்ற ஆலோசனைகள் பலவற்றையும் முன்வைத்தார்.
கூட்டத்தில் பள்ளிவாசலின் வளர்ச்சி மற்றும் சமூகச் செயற்பாடுகளை முன்னேற்றும் நோக்கில் சில நடைமுறை ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவை:
1. மஸ்ஜிதின் நிர்வாகத்தை வலுப்படுத்தி, பெண்களையும் மதச் செயற்பாடுகளில் சீராகச் சேர்த்துக்கொள்ளுதல்.
2. உலமாக்கள் கலந்து கொள்ளும் வகையில் மாதத்திற்கு குறைந்தது இரண்டு நாள் சமயம் தொடர்பான பயிற்சி அல்லது அறிவுரைக் கூட்டங்களை நடத்துதல்.
3. அந்த நிகழ்ச்சிகளுக்கு எளிமையான, ஆனால் ஒழுங்கான உணவு மற்றும் ஏற்பாடுகளைச் செய்யுதல்.
4. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவித்து பள்ளிவாசல் பணிகளில் பங்கேற்கச் செய்வது.
என்பன போன்ற கருத்துக்களையும் அல் ஹாஜ் முபாறக் அவர்கள் முன்வைத்து வலியுறுத்தினார்:
ஜும்ஆ தொழுகை விடயத்தில்“அவசரப்படாமல், திட்டமிட்ட முறையில் செயல்படுங்கள் என்றும் உண்மையான சேவை அல்லாஹ்வுக்காகவே செய்யப்பட வேண்டும்; எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் அல்ல.” என்றும் தெரிவித்தார்.
ஹிஜ்ரா பள்ளிவாசலின் நிர்வாகத்தினர் மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு இடைக்கால சபை உறுப்பினர்கள் இணைந்து உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைகளுடன் ஜும்ஆ தொழுகை அனுமதியைப் பெருவதற்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய சமூக பிரதிநிதிகள்; ஊரின் முக்கிய விடையங்கள் கடந்தகாலங்களில் மூடிய அறையில் சிலர் மட்டும் முடிவு எடுக்கும் ஒன்றக இருந்ததாகவும் தற்போது .ஊரின் முக்கியமானவர்கள், கல்விமான்கள், உலமாக்கள் ஆகியோருடன் இணைந்து திறந்தவெளியில் ஆலோசிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: “இவ்வாறான ஆலோசனைகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும். தலைவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில், கல்விமான்கள் மற்றும் உலமாக்கள் ஆலோசகர்களாக இணைந்தால், எதிர்காலத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் சமூக நலனுக்கான சிறந்த முடிவாக அமையும்.” என்றும் தெரிவித்தனர்.
நிகழ்வில் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுக்கு மேலதிகமாக மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா, மௌலவி யூ.எல்.எம். முபாரக், மௌலவி எம்.எம். சலீம், ஓய்வுபெற்ற சிரேஷ்ட கல்வி அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம். முக்தார் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி. ஆதம்பாவா, ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத், ஓய்வுபெற்ற அதிபர் யூ.எல். நஸார், ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல். ஜுனைதீன், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரஸ்ஸாக், சிரேஷ்ட ஆசிரியரும் சட்டத்தரணியுமான எம். றிபாய், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல்-ஜவாஹிர் உள்ளிட்ட பல புத்திஜீவிகளும் பங்கு கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பு சாய்ந்தமருது சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்தி, ஜும்ஆ தொழுகை அனுமதி வழங்கல் தொடர்பில் பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் சிறப்பாக நிறைவடைந்தது.
























0 comments :
Post a Comment