இந்நிகழ்வு பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாஉத்தீனின் முன்னிலையில் சிரேஷ்ட உதவி நூலகர்களான கலாநிதி எம்.எம். மஸ்றூபா, எம்.சி.எம்.அஸ்வர், ஏ.எம். நஹ்பீஸ், எஸ்.எல்.எம். ஸஜீர் மற்றும் நூலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக “சர்வதேச ஜனநாயகம்” என்ற தொனிப்பொருளில் நூல் கண்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு “Empowering Your Voice: Exhibition of Books on Democracy” எனும் தலைப்பில் ஜனநாயகத்தைப் பற்றிய நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இங்கு மாணவர்களுக்கு நூலக வளங்களை அறிமுகப்படுத்தும் அறிவியல் விளக்கக் காட்சியும் இடம்பெற்றது. இதில் அச்சு நூல்கள், மின்னூல்கள் (eBooks), மற்றும் ஒன்லைன் கல்வித் தரவுத்தளங்கள் காண்பிக்கப்பட்டன.
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஜனநாயகத்தின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இது அமைந்திருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற சிறப்புப் பேச்சு அமர்வில், “ஜனநாயகம்” என்ற தலைப்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பதில் பீடாதிபதியும் அரசியல் விஞ்ஞான துறைத்தலைவருமான கலாநிதி எம். ஏ. ஜப்பார் சொற்பொழிவாற்றினார்.
கலாநிதி ஜப்பார் தொடர்பான அறிமுக உரையை சிரேஷ்ட உதவி நூலகர் எம்.சி.எம்.அஸ்வர் நிகழ்த்தினார்.
இங்கு உரையாற்றிய கலாநிதி எம். ஏ. ஜப்பார், ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகள், குடிமக்களின் பங்கு, பொறுப்புகள் மற்றும் கல்வியறிவோடு விமர்சன சிந்தனை இணைந்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன் இங்கு “Civil Society and Democracy in Sri Lanka: Past Lessons, Present Realities, and Future Prospects for Accountability and Citizen Participation” என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு உரை அமைந்திருந்தது.
இலங்கையின் பல சிவில் சமூக அமைப்புகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்து, குடிமக்களின் சுதந்திரங்களையும் உரிமைகளையும் காக்கும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளன. மேலும், பொது கொள்கைகளை வடிவமைப்பதிலும், குடிமக்களில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவற்றின் பங்களிப்பு முக்கியமானது.
ஆனால் நிதி வளங்களின் பற்றாக்குறை, ஆயுதப் படைகளிடமிருந்து இடையிடையே வரும் அச்சுறுத்தல்கள், மற்றும் அரசியல் சார்பின்றி இயங்க வேண்டிய அவசியம் போன்ற சவால்களும் உள்ளன என்றும் அவர் எடுத்துரைத்தார். சிவில் சமூகம் ஜனநாயகத்தை வலுப்படுத்த தொடர்ந்து செயற்பட, சட்டப்பூர்வ உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும், நிதி சுதந்திரமாகக் கிடைக்க வேண்டும், மேலும் அரசியல் சார்பின்றி இயங்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்நாளில் மறைந்த எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் நினைவு நாளையும் குறிப்பிட்டு, சிறுபான்மை சமூகங்களுக்காக அவர் ஆற்றிய அரசியல் மற்றும் சமூக பங்களிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அஷ்ரப் அவர்களின் அரசியல் சிந்தனைகள், உரிமைகள், சமத்துவம், சுதந்திரம் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை முன்னிறுத்திய விதம், இலங்கையின் ஜனநாயக வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.
அஷ்ரப் தனது வாழ்நாளை முழுமையாக இலங்கை மக்களுக்காகவும், ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாப்பதற்காகவும் அர்ப்பணித்தமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த கலாநிதி எம். எச். எம். அஷ்ரப் அவர்கள் சிறுபான்மை சமூகங்களின் (குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின்) ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அனைவரையும் உள்ளடக்கும் ஆட்சிமுறையை முன்னேற்றுவதிலும் ஆற்றிய பங்களிப்புகளை சிறப்பாக சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், இலங்கையில் சிவில் சமூக அமைப்புகள் (Civil Society Organizations) ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் விழிப்புணர்வை உருவாக்கவும், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை போன்ற முறையான நிறுவனங்களுக்கு துணையாக செயல்படவும் பெரும் பங்கு வகிப்பதைக் குறிப்பிட்டார்.
அதேபோல, உலகளாவிய அரசியல் சிந்தனையாளர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, சிவில் சமூகங்களின் பங்கு மற்றும் இலங்கையில் அவற்றின் தாக்கத்தை கலாநிதி ஜப்பார் விளக்கினார். குறிப்பாக, 2018 பாராளுமன்ற நெருக்கடியும், 2024 அரசியல் மாற்றத்திலும் சிவில் சமூகங்கள் ஆற்றிய பங்களிப்பு முக்கியத்துவம் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வியியல் சமூகத்தைச் சேர்ந்தோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்வை நூலக சிரேஷ்ட உத்தியோகத்தர் சி.எம்.ஏ. முனாஸ் நெறிப்படுத்தினார்.
முடிவில், இந்த நிகழ்வு ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளையும் எழுத்தறிவின் சமூக முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்திய மற்றுமொரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

0 comments :
Post a Comment