அல்லற்படும் பலஸ்தீன் மக்களுக்காகவும் ஆளாக்கிய தாய்க்காகவும் பட்டத்தை பரிசளித்த ஓட்டமாவடி யஸீர் அறபாத்தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா கடந்த 10, 11ம் திகதிகளில் நடைபெற்றது.

அன்றைய தினம் (11) 5வது அமர்வில் தனது கலைமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.என்.எம். யஸீர் அறபாத், பட்டமளிப்பு விழா மேடையில் பலஸ்தீன சால்வையை அணிந்து தோன்றியமை பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

தனது பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் போது பலஸ்தீன சால்வையை அணிந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், பட்டமளிப்பு முடிந்த கையோடு, அவர் விழா மேடையில் ஏறி பலஸ்தீன சால்வையை அணிந்து கொண்டார்.

இது தொடர்பில் அவர் கருத்துத்தெரிவிக்கையில்,

"கல்வி ரீதியாக ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் இந்த நாள் எனக்கு மகிழ்ச்சிகரமானது. என்றாலும், பலஸ்தீனத்தில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்படுவதை நினைக்கையில், இந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை" எனக்குறிப்பிட்டிருந்தார்.

எனவே தான், பலஸ்தீன மக்களுக்கான தனது ஆதரவையும் இஸ்ரேலுக்கான எதிர்ப்பையும், இது போன்றதொரு பெரிய மேடையில் வெளிப்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்பதற்காகவே பலஸ்தீன கொடியை தான் சால்வையாக அணிந்து அம்மேடடையில் தோன்றியதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தனது இரண்டரை வயதில் தாயை இழந்த யஸீர் அறபாத் தனது தாயின் மூத்த சகோதரி மரியம் பீவியின் பராமரிப்பில் வளர்ந்து கல்வியையும் பெற்று பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் பட்டத்தைப் பெற்ற பின்னர் தன்னை வளர்த்து, தன் கல்விக்கு பக்கபலமாக இருந்து மரணித்த பெரியம்மாவின் புகைப்படத்தை கையிலேந்தி தன் பட்டத்தோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இது ஏனைய இளைஞர்களுக்கு ஒரு செய்தியை எடுத்துக்காட்டியுள்ளது. கல்வியில் பட்டம், பதவிகளைப் பெற்ற போதிலும் உயர்த்தி விட்டோரை மறக்கலாகது என்பதுடன், இன்னொரு சகோதரன் அல்லற்படும் போது நமது சந்தோசங்கள் அவனது கண்ணீரை மறைத்து விடக்கூடாது எனும் தகவலையும் பதிவு செய்கின்றது.

தற்காலத்தில் பல பிள்ளைகள் உயிரோடு இருக்கும் பெற்றோரை மறந்தும், புறக்கணித்தும் வாழும் போது, சிறுபராயத்தில் தாயை இழந்த தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயை தற்போது உயிரோடில்லாத நிலையிலும், தன் கல்விக்கு பக்க பலமாக இருந்த அன்னாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் தான் தான் பட்டப்படிப்பைத் தொடர்ந்து இன்று ஒரு பட்டதாரியாக முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது.

இவ்வாறான நிகழ்வைப்பார்க்கும் போது நமது உறவினர்கள் மற்றும் குடும்பங்களில் இருக்கும் ஆதரவற்ற பிள்ளைகள் மீது கரிசனை காட்டும் போது சமூகத்திற்கு நல்ல பிள்ளைகளை உருவாக்குவதோடு, நாம் மரணித்தாலும் அவர்கள் நம்மை மறக்காது நம் பெயரை காத்து நிற்பார்கள் என்பது இச்சகோதரனின் செயல் சான்று பகிர்வதை உணர முடிகின்றது.

இவ்வாறு சிறுபராயத்தில் தாயை இழந்து இழப்புகளைச்சந்தித்து அதன் வலிகளை உணர்ந்ததனால் தான் இன்று பலஸ்தீனத்திலே கொத்து கொத்தாக உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக இந்த இளைஞன் தன் உணர்வை வெளிப்படுத்தினான் என்பது தெளிவாகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :