இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு.ன்று (29.10.2022) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைத் தீர்மானத்தின்படி கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. கே. கணேசராஜா மற்றும் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி. ஏ.எப்.எம். அஷ்ரஃப், கலாநிதி. எம்.ஏ. எஸ்.எப். சாதியா பௌஸர் ஆகியோர் பேராசிரியர்களாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்.
இம்மூவரையும் பல்கலைக்கழகம் சார்பாகவும், கலை கலாசார பீடம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

கலாநிதி. கே. கணேசராஜா
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி கே. கணேசராஜா இன்று நடைபெற்ற (29.10.2022) பல்கலைக்கழக பேரவைக்கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய 18.11.2020 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகிறார்.
காரைதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தனது ஆரம்ப பாடசாலைக் கல்வியை காரைதீவு R.K.M. ஆண்கள் பாடசாலையிலும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் தனது உயர்கல்வியை பேராதனைப்பல்கலைக்கழகத்தில் மெய்யியல் விஷேட துறையிலும் பெற்றுக்கொண்டார்.
மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமாணிப்பட்டத்தையும் பெற்ற இவர் தனது கலாநிதிப்பட்டத்தை தமிழ் நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் நிறைவுசெய்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2006 தொடக்கம் 2009 காலம் வரை சமூக விஞ்ஞானத்துறையின் தலைவராகவும் மற்றும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ள இவர் அளவையியல், மெய்யியல், உளவளத்துணை போன்ற துறைகளில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு பல தேசிய, சர்வதேச ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றி தனது ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளதுடன் தனது துறைசார்ந்த பல நூல்களையும் எழுதியுள்ளார்.
மேலும் 25.10.2022 அன்று நடைபெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது ஸ்தாபகர் விழாவில் நிரந்தர விரிவுரையாளராக 25 வருடங்களைப் பூர்த்திசெய்தமையையிட்டு தென்கிழக்குப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தரினால் கௌரவிக்கப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
கலாநிதி. ஏ.எப்.எம். அஷ்ரஃப்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான ஏ. எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் மொழித்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகின்றார்.
அப்துல் பரீட் - சித்தி பளீலா ஆகியோரின் புதல்வரான இவர், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சீனக்குடாவை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது திருகோணமலையில் வசித்து வருகிறார்.
இவர் தனது பாடசாலைக் கல்வியை தி/ வெள்ளைமணல் அல்- அஸ்ஹர் மகா வித்தியாலயம், கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.
தமிழ்த்துறையில் முதல் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் (1998), முதுதத்துவமாணிப் பட்டத்தையும் (2007) பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் (2011) பெற்றுக்கொண்ட இவர், மொழிபெயர்ப்பு, மொழியியல், நவீன இலக்கியம், திறனாய்வு போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகின்றார். தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை தனது துறைசார்ந்து முன்வைத்து வருகின்றார்.
03.01.1999 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை உதவி விரிவுரையாளராக முதல் நியமனம் பெற்ற இவர், பின்னர் நிரந்தர விரிவுரையாளரானார். பல்கலைக்கழகத்தில் வெளிவாரிக் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும், விடுதிக் காப்பாளராகவும், கலைப்பீட பட்டப்பின் கற்கைகள் நிறுவகத்தின் ஸ்தாபக இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஈழத்து நவீன கவிதை முன்னோடிகள் : மஹாகவியும் நீலாவணனும், தமிழ்மொழி ஓர் அறிமுகக் கையேடு, மொழிபெயர்ப்பியல், இருபதாம் நூற்றாணாடு ஈழத்து இலக்கிய ஆளுமைகள் என்பன இவரது நூல்களாகும். பித்தன் கே.எம்.ஷாவின் சிறுகதைகள் என்ற நூல் இவரால் தொகுக்கப்பட்டதாகும். அறுவடைக் காலமும் கனவும் என்ற கவிதை நூலும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது.
2020.12.28 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் மொழித்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெற்ற இவரை பல்கலைக்கழக சமூகம் வாழ்த்தி வரவேற்கிறது.

கலாநிதி. எம்.ஏ. எஸ்.எப். சாதியா பௌஸர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான திருமதி எம்.ஏ.எஸ்.எப்.சாதியா பௌஸர் அவர்கள் மொழித்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகின்றார்.
முஹம்மது அப்துல் சலாம் - சபீனத்தும்மா ஆகியோரின் புதல்வியான இவர், கண்டி மாவட்டத்தில் உள்ள கெலிஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
களுகமுவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கம்பளை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியான இவர், தனது பட்டக் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். அங்கேயே முதுகலைமாணி (2001), முதுதத்துவமாணி (2008), கலாநிதி (2018) ஆகிய பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
மலையகக் கவிதைகள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பன இவரது பிரதான ஆய்வுத் துறைகளாக இருப்பதோடு மொழியியல், நவீன தமிழ், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் என்பவற்றில் ஆர்வம் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.
இவரது ஆய்வுகள் பலவும் தேசிய மற்றும் சர்வதேச ஆய்விதழ்களில் பிரசுரம் கண்டுள்ளன.
1999 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை உதவி விரிவுரையாளராக முதல் நியமனம் பெற்ற இவர், 2003 இல் நிரந்தர விரிவுரையாளரானார். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும், விடுதிக் காப்பாளராகவும், மாணவர் வழிப்படுத்துநராகவும் கடமையாற்றியுள்ளதோடு, தற்போது மொழித்துறையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சிந்தனைகள், பாரம்பரிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் போக்குகள், ஆய்வடங்கல் (இஸ்லாமிய தமிழ் இலக்கியம்), புதுகுஷ்ஷாம் : வரலாறும் புனைவும், சீறாப்புராணம் : வரலாறும் புனைவும், மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும், மலையகக் கவிதைகளும் மக்களும் என்பன இவரது நூல்களாகும். தவிர பல்வேறு நூல்களின் பதிப்பாசிரியராகவும், இணைப் பதிப்பாசிரியராகவும், நூற்தொகுதிகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் வரிசையில் முதல் முஸ்லிம் பெண் பேராசிரியை என்ற பெருமையைப் பெறும் இவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பெண் பேராசிரியை ஆவார்.
இவரது முயற்சிக்கு தமிழ்மொழி ஆசிரியர்களான பெற்றோர் ஊக்குவிப்பு வழங்கியதைப் போல இவரது கணவரான ஏ.எல். பௌஸர் அவர்களும் பக்க துணையாக இருந்து வருகின்றார்.
2021.02.09 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் மொழித்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகின்றார்.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :