வடக்கு முஸ்லிம்கள் அகதிகளாகி அநாதைகளாக உருண்டோடிய 32 வருடங்கள்.சத்தார் எம் ஜாவித்-
மிழர் சுய உரிமைக்கான போராட்டம் என்ற வடிவில் தமிழ் இளைஞர்களால் 1980க்கு பின்னரான காலத்தில் வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நாளடைவில் ஆயுதப் போராட்டமாக விருட்சமடைந்து அது கிழக்குவரை உள்ள தமிழ் இளைஞர்களையும் ஒன்றினைத்து வடகிழக்கு போராட்டாமக உருவெடுத்து அது அரச படைகளுக்கு எதிராக ஆரம்பமானது.
குறிப்பாக 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் இளைஞர்கள் பல்வேறுபட்ட குழுக்களாக பிரிந்து பல இயக்கங்களாக ஆயுதம் ஏந்தி செயற்பட்டனர். இவ்வாறான நிலையில் இக்குழுக்களுக்கு எல்லாம் பெரிய குழுவாக தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.இ) பலம் பொருந்தியவர்களாக அரச படைகளுக்கு எதிராகவும், பொலிஸ், இராணுவ மற்றும் கடற்படை, விமானபப்டை தளங்களை இலக்கு வைத்தும் தாக்கும் அவர்களது போராட்டம் வலுப்பெற்று வந்தது.

இந்த பாரிய யுத்த நிலைமைகளுக்குள் வடகிழக்கில் உள்ள சகல சமுகங்களும் சிக்குண்டு சின்னாபின்மாக்கப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் வார்த்தைகளாளோ அல்லது வேறு வடிவிலோ சொல்ல முடியாது அந்தளவுக்கு அதன் கோரத்தாண்டவம் அந்த மக்களை பாதித்தது எனலாம். இந்த ஆயுதப் போராட்டத்திற்குள் சிக்குண்டு பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியது மட்டுமல்லாது இரண்டு தரப்பினராலும் அவர்களுக்கு எதிராக செயற்பட்ட மற்றும் சந்தேகத்தின் பெயரிலும் பல பொதுமக்களும் வழுக்கட்டாயமாக கைது செய்யபப்ட்டு கொல்லப்பட்டமை வரலாற்றில் மறக்கவோ மறைக்கவோ முடியாத வடுக்கள் என்றே சொல்லலாம்.

இவ்வாறான யுத்த கால ஓட்டத்தில் வடக்கின் இரு சமுகங்களும் பல உறவுகளை இழந்ததோடு மட்டுமல்லாது உடமைகளும்கூட பறிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் மக்கள் அங்கும் இங்கும் தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தாண்டவமாட வேண்டிய ஒரு தும்பகரமான நிலைமைகளுக்கு உள்ளானார்கள்.

இவ்வாறு வடகிழக்கு மக்கள் யுத்தத்தின் பிடிக்கள் சிக்குண்டு நாளாந்தம் உணவு இல்லாவிட்டாலும் பறவாயில்லை உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றவகையில் பதுங்கு குழிகளிலும், காடுகளிலும், மதஸ்தளங்களிலும் தஞ்சமடைந்து தமது துன்பியல் வாழ்வை கொண்டு சென்று கொண்டிருக்கையில் வடபுலத்து மக்களுக்கு 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நெஞ்சிலே நெருப்பை வார்த்தமாதிரி விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்ட செய்திதான் வடபுலத்தை விட்டு சகல முஸ்லிம்களும் ஒட்டுமொத்தமாக தாம் உடுத்திய உடையுடன் வெளியேற வேண்டும் என்ற செய்தி.

ஒருசில பகுதிகளில் ஓரிரு நாட்களிலும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் சில மணித்தியாலங்களுக்குள்ளும் தமது சொந்தப் பூமியை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும் என்ற அறிவித்தலாகும். அது மட்டுமல்லாமல் செல்ல மறுப்பவர்களை கொலை செய்வோம் என்ற எச்சரிக்கையும் அந்த மக்களை கிளி கொள்ளச் செய்து விட்டது.
ஏன் இந்த அறிவித்தல் என்ற கேள்விக்கு விடைய தெரியாது அதற்கான காரணத்தை கண்டறியக்கூடிய கால அவகாசம் இல்லாத நிலையில் மக்கள் பதறியடித்துக் கொண்டு கண்ணீரும் கம்பளையுமாக எங்கு செல்வது? எவ்வாறு செல்வது என்ற பதட்டத்தில் மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் தமக்குத்தமக்கு தெரிந்த விதத்தில் காடுகளாலும் கடலாலும் தமது பூர்வீகங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
இந்த மக்களுக்கு தாம் செய்த தப்பு என்னவென்று தெரியாத நிலையில் கலிமாச் சொன்ன முஸ்லிம்கள் என்ற வகையில் இவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதே யதார்த்தமான உண்மை என அரசியல் ஆய்வாளர்களும், சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
மிகவும் வேதனையான அந்தச் சந்தர்ப்பம் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும்போல் காலாகாலமாக இருந்து வந்த தமிழ் முஸ்லிம் உறவுக்கு விடை ஒரே அழுகுரல்தான் என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும், பிரிய முடியாதவர்களாகவும் அழுது புலம்பி கண்ணீர்விட்ட அந்தத்தருணம் உண்மையில் ஒவ்வொருவர் மத்தியிலும் மயிர்சிலிர்த்து கூசவைத்த வடுக்களாகவே பதிவானது.
தமது வெளியேற்றத்தை நிறுத்த முடியாதா? என்ற கனவுகளுடன் முஸ்லிம்களும் முஸ்லிம்கள் வெளியேறுவதை எப்படியாவது தடுக்க முடியாத சிக்கல் நிலையில் தமிழ் மக்களும் காணப்பட்டனர் என்பதே யதார்த்தமான உண்மைகள்.
அந்த 1990 ஒக்டோபர் இறுதிப்பகுதியின் அவலக் குரல் அதனை அனுபவித்த அல்லது அந்த துன்பியல் தாண்டவத்திற்கு உள்ளானவர்களின் அந்த நினைவுகள் என்றுமே மனதை விட்டகலாத ஒரு வடுவாகவே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. யாராவது தமக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை தடுத்து நிறுத்த மாட்டார்களா? என்ற ஆதங்கமும் வேதனையும் ஈற்றில் 32 வருடகால வேதனைக்கும், அவலத்திற்கும் வித்திட்டது என்பதே உண்மை.
இவ்வாறு வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு இன்றுவரை பூரணமான இழப்பீடுகளோ அல்லது பூரணமான மீள் குடியேற்ற விடயங்களோ மேற்கொள்ளப்படாது மாற்றாந்தாய் மனப்பாங்கில் அவர்களின் வெளியேற்றம் மறக்கடிக்கப்பட்டு வருகின்றது.
உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளினாலோ வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் நீதி, அவர்களின் மீள் குடியேற்றம் அவர்களுக்கான இழப்பீடுகள் பற்றியோ யாரும் பேசுவதும் இல்லை, பேசுவதற்கு முன்வருவதும் இல்லை என்பதே வேதனையான விடயமாகும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படுவர் என்ற பேச்சுக்கள் மட்டுமே அந்த மக்களுக்கு கிடைத்த செய்தி ஆனால் இன்று வரை அதற்கான ஒரு திட்டமிடலோ அல்லது அதற்கான ஒரு ஆணைக்குழுக்களோ ஏற்படுத்தப்பட வில்லை. மாறாக அவர்களின் வெளியேற்றம் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகின்றது.
குறிப்பாக வெளியேற்றப்பட்டவர்களில் கூட தமது வெளியேற்றம் என்ற செய்தி மறந்து வரும் ஒன்றாக காணப்படுகின்றது. யுத்தம் முடிவடைய முன் வடக்கிழக்கு பகுதிகளுக்கு முஸ்லிம் மக்கள் செல்ல முடியாத ஒரு அவல நிலை காணப்பட்டது. என்றாலும் 2009 யுத்த வெற்றிக்குப் பின்னர் வடக்கு முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்லலாம் என்ற அறிவித்தல் அரசாங்கத்தால் விடப்பட்டபோதிலும் வடக்கில் ஒருசில இடங்களைத் தவிர ஏனைய சகல முஸ்லிம் பகுதிகளிலும் அவர்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள், பாடசாலைகள், மதஸ்தளங்கள், சமய நிறுவனங்கள் என சகலதும் அழிக்கப்பட்டு காடுகள் முளைத்தும், வனாந்திரமாகவுமே காட்சியளித்தன. இதன் காரணமாக அதிகமான முஸ்லிம்கள் மீள் குடியேற முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அகதிகளாக இருக்கும் இடங்களிலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டின் பல பாகங்களிலும் இன்றுவரை அகதிகளாக அகதிகள் என்ற நாமத்துடன் வாழும் பல ஆயிரக்கணக்கான வடபுலத்து முஸ்லிம்கள் தமது பூரணமான மீள்குடியேற்றத்தையும், முழுமையான இழப்பீடுகளையுமே எதிர்பார்த்துள்ளனர். குறித்த முஸ்லிம் சமுகத்தின் அரசியல் காவலர்கள் என்று கூறும் அரசியல் வாதிகளும், அரசாங்கமும்கூட கைவிட்டுவிட்டது என்ற ஆதங்கத்திற்கு அப்பால் சர்வதேசம்கூட வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவிகளையோ அல்லது ஆதரவுகளையோ வழங்கவில்லை என்ற வேதனையோடே இன்றுவரை 32 வருடங்களை கடந்து 33வது வருடத்திற்குள் அகதிகள் என்ற முத்திரையுடன் கால்பதிக்கின்றனர்.
எனவே இனியும் வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சம் காட்டாது இந்த மக்களின் மூன்று தஸாப்த கால அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களின் சொந்த இடங்களில் அவர்கள் சகல உரிமைகளோடும், உரிய முறையில் வீடுவாசல்களைப் பெற்று சுயமாக வாழ வழி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதுடன் முஸ்லிம்களின் காவலர்கள், முஸ்லிம்களின் தலைமைகள், முஸ்லிம்களின் சமயத் தலைவர்கள் என்று மார்தட்டும் பேர் வழிகள் பாதிக்கப்பட்டவர்கள் விடயத்தில் இனியாவது கரிவனை செலுத்தி அவர்களின் மனங்குளிர வழி சமைப்பார்களாக?.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :