அடுத்த வருடம் முதல் தரம் ஒன்றிலிருந்து அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி கல்வி போதிக்கப்படும் என்ற அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கருத்து மிகவும் பாராட்டத்தக்கது என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.இது பற்றி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் அனைவருக்குமான மூலக்கல்வி ஆங்கில மொழியாக ஆங்கில மொழியை பிரகடனப்படுத்துவதன் மூலம் நாட்டில் மொழிப்பிரச்சினை தீர்வதுடன் சர்வதேச தொழில் வாய்ப்புக்களை இலகுவில் பெற முடியும் என்பதை எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளது. இப்போது எமது கோரிக்கை நிறைவேறவுள்ளதானது நல்லதொரு நிலையை தோற்றுவிக்கும்.
பொதுவாக நமது நாட்டின் செல்வந்தர்களின் பிள்ளைகள் ஆங்கில மொழி மூல கல்வி கற்று நல்ல பதவிகளில் வெளிநாடுகளில் பணி புரியும் போது ஏழைகளின் பிள்ளைகள் ஜி.சி.ஈ உயர்தரத்தின் பின்னரே ஆங்கில மொழியை தனியாக தேடிப்படிக்கும் நிலை உள்ளது. ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்துக்காக பலரும் மிக சாதாரண தொழில்வாய்ப்புக்களை வெளிநாடுகளில் பெறுகின்றனர்.
நமது நாட்டில் ஜி சி ஈ இறுதி வகுப்புக்களில் கற்பிக்கப்படும் ஆங்கிலம் என்பது மாணவர்களுக்கு சாதாரண ஆங்கில அறிவை தருகின்றதே தவிர சரளமாக பேசும், எழுதும் அறிவு இல்லை. இதனால் ஆரம்ப வகுப்பிலேயே ஆங்கில மொழியை போதிப்பது அவர்களுக்கு மிக இலகுவாக அமையும். இது எதிர்காலத்தில் அனைத்து பாடசாலைகளினதும் முதல் மொழியாக ஆங்கில மொழியை ஆக்கும் நல்லதொரு நிலையை உருவாக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தசாப்த காலத்துள் கல்வி அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்த மட்டுமே பல நல்ல விடயங்களை கல்வியில் செய்துள்ளார். இந்த வகையில் இது விடயத்தையும் அர்ப்பணிப்புடன் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை எமது கட்சிக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment