திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தியை அண்மித்த பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் நேற்று (08) திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டது. சுமார் 64 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடத்தை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ராஜித ஸ்ரீ டமிந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
பல வருட காலமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில் புதிய கட்டிட நிர்மாணத்தின் பின் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் எந்நேரமும் தங்களது சேவைகளை திறம்பட வழங்கும் நடவடிக்கையினை முன்னோக்கிச் செல்லும் வகையில் பொலிஸ் சேவை இதன் ஊடாக மேலும் வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது வருட தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும் தம்பலகாமம் பொலிஸ் நிலையம் பல திட்டங்களை நடை முறைப்படுத்தியுள்ளது.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் பண்டார, பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார , பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதிகள், திணைக்கள, வங்கி அதிகாரிகள் , சிவில் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment