இறக்காமம் பிரதேசத்தில் 13500 க்கும் மேற்பட்ட மின்சாரப் பாவனையாளர்கள் இருந்துவருகின்றனர். மட்டுமல்லாது பல்வேறுபட்ட அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரிசி மற்றும் மர ஆலைகள் வணக்கஷ்தலங்கள் என மின்சாரப் பாவனையை அத்தியவசியமாகக் கொண்ட பல அமைப்புக்கள் காணப்படுகின்றன.
இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்தேர்ச்சியாக நீண்ட காலமாக இருந்துவரும் பிரதேசத்திற்கான தனியான மின்சார சபையின் உப அலுவலகம் ஒன்றின்மையானது, மின்சார சபையின் உட்சபட்ச சேவையினை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை பாவனையாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக முன்னறிவித்தலற்ற மின் தடை, திருத்தவேலைகளுக்கான காலதாமதம், மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை கவனத்திற்கொள்ளாமை, காலதாமதமான சேவை போன்ற பல பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே இறக்காமம் பிரதேசத்திற்கான தனியான மின்சார சபை உப அலுவலகம் ஒன்றினை அமைப்பது தொடர்பாகவும் பொதுமக்களுக்கு மின்சார சபையின் சேவையினை சிறந்த முறையில் வழங்கவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை கடந்த 2022.09.05 ஆம் திகதி திங்கள் கிழமை அம்பாரை பிராந்திய பிரதம பொறியியலாளர் காரியாலத்தில் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையானது, அம்பாரை பிராந்திய பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் அவர்களுக்கும் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர் தலைமைலான குழுவுக்குமிடையல் நடைபெற்றது.
இதன்போது மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்துவதாகவும் பிரதேசத்திற்கான தனியான மின்சார சபை உப அலுவலகம் ஒன்றினை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் அவர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மின் பாவனையாளர்களுக்கு அசௌகரியம் அற்ற வகையில் மின்சார சபையின் சேவைகளை வழங்குவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர் தலைமைலான பிரமுகர் குழுவில், இறக்காமம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஏ.கே.அப்துல் ரஊப் (மௌலவி), வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹாமிது லெப்பை (மௌலவி), முன்னாள் கிழக்கு மாகாண பஸ் போக்குவரத்து முகாமையாளர் எம்.ஆர்.எம். நஸீர், மின்சார சபை கணக்காளர் எம்.எல். மீரா சாஹிப், தொழிலதிபர் ஏ. மர்சூக், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment