மல்வத்த விவசாய தொழில்நுட்பவியல் பூங்காவில் இடம்பெறுகின்ற அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் அதிகாரிகளை நேரடியாக சந்தித்துக் தகவல்கள் தெரிந்து கொள்ளும் நோக்கில் திடீர் விஜயமொன்றை உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடாதிபதி யூ.எல்.எம்.மஜீத் தலைமையில் மல்வத்தை விவசாய தொழில் நுட்பவியல் பூங்கா கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில்,
விவசாய தொழில் நுட்பவியல் பூங்காவின் நாளாந்த செயற்பாடுகளை அவதானித்த உபவேந்தர், தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பீடாதிபதி மற்றும் துறைத்தலைவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
மாணவர்களுக்குரிய பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவை நிறுவனத்தின் முக்கிய செயற்பாடுகளாகும். ஆகவே இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும்போது, தேவையை மாத்திரம் கவனத்தில்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய உபவேந்தர், எதிர்காலத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களை தாமதிக்காமல் மிக விரைவாக செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பல்கலைக்கழக தொழில்நுட்பவியல், விவசாய பீட மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான மேலதிக வசதிகளையும் இந்நிலையம் வழங்க வேண்டும் எனவும் உபவேந்தர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கும் விவசாயிகளுக்கான தேவையான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை ரீதியான அறிவை வழங்குவதற்குமான செயல் விளக்கப் பண்ணை ஒன்றும் நடத்தப்படுகின்றது. இதனூடாக விவசாயிகளை அறிவூட்ட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொழில்நுட்பவியல் பூங்கா பண்ணையைப் பார்வையிட்ட உபவேந்தர், அங்கு இடம்பெறும் சேதனப்பசளை, உர உற்பத்தி உள்ளிட்ட சேவைகளை விரிவுபடுத்துமாறும் பீடாதிபதி மற்றும் துணைத்தலைவர்களிடத்தில் பணிப்புரை விடுத்தார்.
இந்நிகழ்வில் தொழில்நுட்ப பீடாதிபதி, துறைத் தலைவர்கள், பல்கலைக்கழக நிர்வாக உயரதிகாரிகள் மற்றும் விவசாய பண்ணை மேற்பார்வையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment