வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற நூறு நாட்கள் செயல்முனைவின் ஓரங்கமாக இன்று (16) வெள்ளிக்கிழமை திருக்கோவில் வினாயகபுரத்தில் 47 வது நூறுநாள் உரிமை போராட்டம் நடைபெற்றது.
இதன் கருப்பொருள் "கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்" என்பதாகும்.
அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வினாயகபுர பிரதேசத்தில் பவனியாக வருகை தந்த மக்கள் இவ்வாறான கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
1) நாங்கள் நாட்டை துண்டாக்கவோ தனியரசு கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கிறோம் .
2)வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் .
3) 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகார பரவலாக்கலுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது .அத்தோடு காலாகாலமாக சிங்கள தலைமைத்துவங்கள் பல்வகையான ஒப்பந்தங்களை தமிழ் தலைமைத்துவங்களோடு செய்து கொண்டாலும் இன்றுவரை அவை எங்களுடைய மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது .
அந்த அடிப்படையில், மக்கள் ஒன்றிணைந்து தங்களுக்கான வாழ்வியல் உரிமையை கேட்கின்ற நிகழ்வாக இந்த நிகழ்வு நூறு நாள் செயல்முனைவின் 47நாளான இன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றது .
சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களை சேர்ந்தவர்கள் ,விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர் விளையாட்டுக் கழகத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
0 comments :
Post a Comment