வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்றுமுன்தினம் (11 )வியாழக்கிழமை மதியம் 11.30 மணியளவில் ஆலயத்திற்கு முன்னால் உள்ள சமுத்திரத்தில்
மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்களின் தலைமையில், ஆலயத்தில் சுன்னம் இடித்து, கிரியைகள், அபிசேகம் பூஜைகளுடன் ,வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு தீர்த்தோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..
மூன்று வருட இறுக்கமான சூழ்நிலைக்கு பின்னர் நடைபெற்ற தீர்த்தோற்சவம் என்பதால், வரலாறு காணாத வகையில் மூவினங்களையும் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் அடியார்கள் கலந்து கொண்டனர்.
காடு கடல் மலை எல்லாம் அடியார்கள் மிகவும் நெருக்கமாக நின்றார்கள். அலைகடலில் அலைமோதி லட்சம் அடியார்கள் தீர்த்தமாடினர்.
கடந்த யூலை மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று வந்தன..
எம்பெருமான் ஊர்வலம் தேவார பாராயணங்கள் பாடி, மங்கல வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான அடியார்கள் சகிதம் ஆலய வலம் வந்து சமுத்திரத்தை அடைந்தார்.
அங்கு விசேடமாக அமைக்கப்பட்ட வேப்பிலை பந்தலில் முருகப் பெருமானுக்கும் ,வேலுக்கும் விசேட பூஜை வழிபாடுகள், அபிசேகம் நடைபெற்றன.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் ,உதவிக்குரு சிவசிறி கோபிநாத சர்மா உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கிரியைகளை சிறப்பாக நடாத்தினார்கள்.
ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சங்கல்பத்தில் இருந்தார்.
தொடர்ந்து அடியார்கள் புடை சூழ வேத,நாத, மேளங்களுடன் அடியார்களின் அரோகரா கோசங்களுடன் கோலாகலமாக சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
பொலிசார் சிறப்பாக தமது பாதுகாப்பு முறைமைகளை மேற்கொண்டார்கள்.
0 comments :
Post a Comment