பெரியநீலாவனை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் நீண்ட காலமாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தோடு ஈடுபட்டு வந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் (25) கைது செய்துள்ளனர்.
மருதமுனை பிரதான வீதியில் உள்ள துவிச்சக்கர வண்டி மற்றும் அதன் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் பிரபல வியாபார நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த குறித்த சந்தேக நபர் தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி உதிரிப் பாகங்களை தூர இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து,
பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜி துஸார கிழங்கு திலங்க ஜெயலால் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக இந்த வியாபார நிலையத்தில் இருந்து துவிச்சக்கர வண்டி உதிரி பாகங்களை கொள்ளையடித்து கொக்கட்டிச்சோலை, சாய்ந்தமருது, மருதமுனை போன்ற இடங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்தது. இதனை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபரால் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சைக்கிள் உதிரி பாகங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டு கைது செய்யப்பட்டுள்ள 22 வயதுடைய குறித்த இளைஞன் இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment