தூயவழிப் போராட்டங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை; இலங்கை மக்களின் எழுச்சிப் போராட்டம் உணர்த்தும்!அஸ்ஜயீன் வாஹிட்-
நாட்டின் எதிர்காலத்திற்காக போராடினால் நிச்சயம் நாட்டின் எதிர்காலத்திற்காக போராடினால் நிச்சயம் வெற்றி இருக்கும் என்பதை இந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் உணர்த்தும் இருக்கும் என்பதை இந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் உணர்த்தும்

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை ஒரு அழகிய நாடாக சர்வதேச அரங்கில் காட்சியளித்தது; எனினும் காலத்திற்க்குக் காலம் அரசியல் கதிரையில் அமர்ந்தவர்களால் இலங்கையின் அழகு அழுக்காக மாறியுள்ளது.

இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக கடந்த காலத்தில் இருந்தாலும் தற்போது உலகின் பணவீக்க வீதம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நாட்டில் ஒரு போதும் இல்லாத அந்நியச் செலாவணி வீதம் குறைவடைந்ததால், இறக்குமதி குறைவடைந்து, அத்தியாவசிய பொருட்கள் தொடக்கம் ஆடம்பர பொருட்கள் வரை விலை உயர்வடைந்து பொதுமக்கள் நடுத்தெருவில் வாழ்நாளை கழிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் வரிசைகளில் உயிரிழக்கின்ற நிலையை காண்கின்றோம். மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு அவர்களுடைய எதிர்காலம் நடுத்தெருவிற்கு வந்துள்ளது. நாடு நாளுக்கு நாள் அனைத்து துறையிலும் பின் தள்ளப்படும் போதும் தனக்கு என்ன ஆகப்போவது என்றவாறு அரசியல்வாதிகள் இருப்பதை காண முடிகின்றது. இதற்கெல்லாம் என்ன தீர்வு என்பது தான் ஒட்டுமொத்த மக்களுடைய இன்றைய கேள்வி.

மக்களின் உரிமைகளை வென்றெடுக்க மக்கள் தற்போது அவதாரம் எடுத்துள்ளதை நாளுக்கு நாள் சூடு பிடித்துள்ள போராட்டங்கள் உணர்த்துகின்றன. காலி முகத்திடலை மையமாக வைத்து உருவாகியுள்ள "கோட்டா கோ கம" போராட்டக் களம் இலங்கையின் சமூக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பு முனையாக அமைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் இவ்வாறான ஒரு மக்கள் எழுச்சி போராட்டம் இடம்பெற்றதாக சரித்திரத்தில் இல்லை. இந்த மக்கள் உரிமைப் போராட்டம் இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்பது தெளிவானது.
நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளுகை கட்டமைப்பில் ஏற்பட்ட தொடர் குறைபாடுகளும், பலவீனமான அரசியல் தலைவர்களுமே காரணமென மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர் .இதுவரை காலமும் கோட்பாடு ரீதியாக இருந்த ஜனநாயகம் இன்று புதிய பாதையை நோக்கி நகர்கின்றது. போராட்ட களத்தின் நடைமுறைகள், ஒழுங்கு விதிகள், ஒழுக்கம் பண்பாடு ,பரஸ்பர மரியாதை, பன்மைத்துவம், பெண்ணுரிமை, மதசகிப்புத்தன்மை போன்ற அனைத்து காரணிகளோடு இனவாதம் அற்ற இலங்கையை ஜனநாயகத்தோடு நோக்குவதற்குமான ஒரு பரந்த வாய்ப்பினை அளித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தின் மீதும் இலங்கை சிறுபான்மை மக்கள் மீதும் பாரிய அளவிலான இன்னல்களை அரங்கேற்றினார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் ஆய்வாளர்களும், முழு சர்வதேசமும் அவதானித்ததோடு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனாலே இன்று நாடு படுகுழியில் விழுந்துள்ள நிலையில் எந்த ஒரு சர்வதேச நாடுகளும் உதவிக்கு முன்வருவதில்லை. பதவியேற்ற உடனே நாட்டில் உள்ள பெரும்பான்மையை வைத்து சிறுபான்மையினரை அழிக்க பல்வேறு திட்டங்களை போட்ட ஜனாதிபதியாக கோட்டா இருக்கின்றார் .இதனாலே அன்று அவருக்கு ஆதரவு வழங்கிய 69 இலட்சம் மக்களினாலேயே கோ கோட்டா என துரத்தி அடிக்கப்படுகின்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் பதவிக்கு வந்து 23 மாதங்களில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்ட ஒரே ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ஷ பதிவாகியுள்ளார்.
இவரை பதவிக்கு கொண்டுவர பெரும்பான்மை சிங்கள மக்களும், பௌத்தப்பிக்குகளும் பிரதானமானவர்களாக இருந்தார்கள். இந்த நாட்டில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முஸ்லிம்களும் ,தமிழ் மக்களும் மாத்திரமே காரணம் எனவும் இந்த நாட்டை சிறுபான்மையினரின் ஆதிக்கத்திலிருந்து கட்டுப்படுத்த தூய பௌத்த இனத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக வரவேண்டும் என கோட்டாபயவை தேர்வு செய்தனர். கடந்த 30 வருட கால யுத்தத்தை வெற்றி கொண்ட ஒரே காரணத்தை வைத்து பெரும்பான்மை மக்கள் இவரை வாக்கிட்டு தெரிவு செய்தனர். பெரும்பான்மை இனத்தை சேர்ந்த எத்தனையோ பேரை இந்த கோட்டா பாதுகாப்பு அமைச்சராக இருந்த வேலையில் கொலை செய்ததற்கு ஆதாரங்கள் உண்டு எனினும் மீண்டும் இவரையே பெரும்பான்மை மக்கள் ஆதரித்தார்கள்.இதன் மூலம் பெரும்பாண்மை சமூகம் ஒரு முட்டாள் சமூகம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

இலங்கை சுமார் 90 ஆண்டுகளாக பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை அனுபவித்து வந்தாலும் இடையில் இனவாதம் காற்றோடு காற்றாக பரவியதால் மக்கள் இன்னும் ஜனநாயகத்தின் பெருமதியினை சரியாக உணரவில்லை என்பதே உண்மை. தற்போது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ராஜபக்ச குடும்ப ஆட்சியை ஆதரித்த பெரும்பான்மை மக்கள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றார்கள். எனவே இந்த பாரிய நெருக்கடிக்கு ராஜபக்ஷ குடும்பத்தினரும் அவர்களை ஆதரித்த பெரும்பான்மை சமூகமுமே பிரதான காரணம் என்பது தெட்டத் தெளிவானது.
தொடர் போராட்டங்களில் படித்த மத்திய தர வகுப்பு, நகர்ப்புற இளைஞர், யுவதிகள், கிராமிய இளைஞர், யுதிகள், விவசாயிகள் தொழில் வல்லுனர்கள், ஆசிரியர் சமூகம், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிறுபான்மையினர் என அனைவரும் பங்கெடுத்து வருவதை காண முடிகின்றது.

"போராட்டங்களில் மக்களின் குரல் மழுங்கடிக்கப்படுகின்ற பொழுது அல்லது அலட்சியம் செய்யப்படுகின்ற பொழுது எழுச்சி பெறுகின்றது என மாட்டின் லூதர் கிங் தெரிவித்துள்ள கூற்றை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாகும் என நினைக்கிறேன்.
தான் தோற்றுப் போன ஜனாதிபதியாக வெளியேற மாட்டேன் என கோத்தா தெரிவித்திருந்தார். எனினும் நாட்டின் நிர்வாக செயல் திறன் பற்றி எந்த விதமான அக்கறையும் இல்லாமல் ராஜபக்ஷ குடும்பத்துக்கு என்ன என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து முடித்தார். உயர்ந்த பதவிகளை ராஜபக்ஷர்களுக்கு வழங்கினார். 19வது திருத்தம் இல்லாது ஒழிக்கப்பட்டு இருபதாவதை கொண்டு வந்தார். சர்வதேச கொள்கை பற்றிய ஒரு தெளிவான கொள்கையற்ற ஆட்சியாக கோட்டாவின் ஆட்சி அமைந்துள்ளது. இந்தியாவும் ,சீனாவும் தன்னுடன் கைகோர்த்து இருக்கும் வரை தமக்கு தோல்வி இல்லை என ராஜபக்சர்கள் கனவு கண்டிருந்தனர். தேரர்களின் ஆலோசனைகளை நம்பி மோசம் போனார்கள். தன்னைப் போன்ற வேறு எந்த ஆட்சியாளனும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என்ற தலைக்கனத்துடன் பதவியேற்று தன்னைப் போன்று வேறு எந்த ஆட்சியாளனும் இந்த நாட்டை அழித்திருக்க முடியாது என்ற நிலைக்கு நாட்டை தள்ளியுள்ளார். இவ்வாறான இனவாத கொள்கையே கோத்தாவின் ஆட்சி தோற்றுப் போக காரணமாக அமைந்தது என்பது கசப்பான உண்மை. இனி ராஜபக்சர்கள் இந்த அரசியலுக்கும் வேண்டாம் ,நாட்டுக்கும் வேண்டாம் என்ற நிலையில் மக்கள் அவர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். தான் பற்றவைத்து குளிர் காய்ந்த நெருப்பே தனக்கு எதிராக எரிவதையும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தான் அழிந்து கொண்டிருப்பதை இந்த ராஜபக்ஷர்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மிக விரைவில் புரிந்து கொள்வார்கள்.அந்த நாள் மிக விரைவில்.
ஒரு ஜனநாயக அரசியல் முறைமையில் எதிர்க்கட்சி என்பது இன்றியமையாத ஒன்று. எதிர்க்கட்சி என்பது சில சமயங்களில் மாற்று அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது எந்த ஒரு சமயத்திலும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நாட்டை நிர்வகிக்கும் தயார் நிலையில், நிழல் அரசாங்கம் ஒன்றை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நாட்டில் ஜனநாயகம் தழைக்கும்.

எதிர்க்கட்சியின் பிரதான பொறுப்புகளில் ஒன்று அரசின் தவறான கொள்கை மற்றும் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி, நாட்டை சீரான வழியில் இட்டுச் செல்வதற்கான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும். அரசு மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளையும் எதிர்த்து, எவ்வாறாயினும், எவ்வழியிலேனும் ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற மனநிலை, எதிர்க்கட்சியின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்; மக்கள் மத்தியில் செல்வாக்கையும் இழந்துவிடும்.

ஓர் அரசாங்கத்திற்கு எவ்வாறு பொறுப்புணர்ச்சி மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளனவோ அதேபோல் எதிர்க்கட்சிக்கும் உண்டு என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை மிக மிக அவசியம்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்றுள்ளதா என்று நினைக்க தோன்றுகிறது. நேற்று எதிர்க்கட்சியில் இருந்தவன், பதவிக்காக, இன்று அரசுடன் இணைந்து கொள்கிறான். ஜனநாயகத்தில் இது அனுமதிக்கப்பட்டதே என்றாலும், நம்பி வாக்களித்த மக்களின் விருப்புக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பது தெளிவு.

இலங்கையைப் பொறுத்தமட்டில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றுக்கு இடையே கொள்கை வித்தியாசத்தை காண்பது அரிது. ஒவ்வொரு தேர்தலிலும் முகங்கள் மாறுகின்றனவே அன்றி சிஸ்டம் மாறுவதுகிடையாது.
சுதந்திர இலங்கையில் உண்மையிலேயே ஒரு பாரிய பொருளாதார முறைமை மாற்றம் ஏற்பட்டது என்றால் அது 1978 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை எனலாம். இதனை கடுமையாக எதிர்த்த அன்றைய எதிர்க்கட்சி, அதன் பின் பல முறை ஆட்சியை கைப்பற்றி, நாட்டின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு அந்த திறந்த பொருளாதாரக் கொள்கையே காரணம் என்று தொடர்ந்தும் குற்றம்சாட்டிய போதிலும், அந்த முறைமையை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இன்றளவிலும் அதே பொருளாதார சிஸ்டம் தான் நடைமுறையில் உள்ளது.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், எதோ இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு எதிர்க்கட்சி உள்ளதே அன்றி, உண்மையில் அவ்வாறான ஒன்று இல்லை என்பதே யதார்த்தம்.
இன்றைய போராட்டங்கள் பல முக்கியமான விடயங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. அந்தவகையில், மரபு ரீதியான அரசியல் தலைமைத்துவம் மீதான அவநம்பிக்கை, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீதான அதிருப்தி, ஊழல் மோசடிகள் நிறைந்த அரசியல் கலாசாரம் மீதான விரக்தி போன்ற பல விடயங்களை அவதானிக்க முடியும். இன்று அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளும் முற்றாகவே நம்பிக்கையை இழந்துள்ளன.

ஆகவேதான் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீடு செல்ல வேண்டும் என்ற கோ கோம் கோட்டா எழுச்சி பெற்றுள்ளது. அரசாட்சியில் பொதுமக்களின் நம்பிக்கை என்பது அடிப்படையானதாகும்.

மக்களின் ஒரே கோரிக்கை இந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களான ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியை விட்டு வெளியேறி செல்ல வேண்டும் என்பது தான்.இதனையே மக்கள் தொடர் போராட்டங்களின் மூலம் உணர்த்துகின்றனர்.கடந்த மே 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ குழுவினரால் போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கப்பட்டு நாட்டின் அனைத்து பகுதியிலும் கலவரம் வெடித்தது நாம் அறிவோம்.அதன் பின்னர் பிரதமர் பதவியை மஹிந்த மற்றும் நிதி அமைச்சர் பதவியை பெசில் ராஜபக்ஷ உட்பட துறந்தனர்.எனினும் கோட்டா வெளியேறு என்பதே மக்களின் கோஷம் எனவே கடந்த 9 ஆம் திகதி திரண்ட மக்கள் நாட்டில் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.மக்களின் தியாக போராட்டத்திற்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளது. கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை மற்றும் 13 ஆம் திகதி பிரதமர் அலுவலகம் கைப்பற்றப்பட்டன, போராட்டக்காரர்களினால் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. அதில் குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் உடன் பதவி விலக வேண்டும் என்பதே பிரதானமானது. சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கட்சி கலந்துரையாடலில் தான் 13 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியை துறப்பாக ஜனாதிபதி அறிவித்தார். ஆனால் அது ஒரு சூழ்ச்சியின் தற்காலிக அறிவிப்பு என்பதை மக்கள் இப்போது உணர்ந்து உள்ளனர். இலங்கை 1947 இற்கு பின்னர் இரண்டாவது முறையாக சுதந்திரம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.இந்த பாரிய மாற்றம் எதிர்கால அரசியலில் எவ்வாறான மாற்றங்களை கொண்டு வரும் என்பது அனைவரினது எதிர்பார்ப்பாக உள்ளது.இன,மத,கட்சி ,பேதங்கள் இன்றி நாட்டின் எதிர்காலத்திற்காக போராடினால் நிச்சயம் வெற்றி இருக்கும் என்பதை இந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் உணர்த்தும் பாடமாக உள்ளது.

மக்களின் ஒரே கோரிக்கை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் நிம்மதி இந்த நாட்டில் நிலைநாட்டப்பட வேண்டும் என.அதற்காகவே அவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.எனவே எதிர்க்கட்சி பலமாக மாறும் போது தோல்வியடைந்துள்ள இந்த மொட்டு அரசை வீழ்த்தி நாட்டை கட்டியெழுப்ப முடியும்.எது எவ்வாறு இருந்தாலும்.நாட்டின் ஆட்சியை மக்களே இன்று தீர்மானித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :