முஸ்லிம் சமூகமே ! உசார் மடையர்களே ! ஐந்து நிமிடம் ஒதுக்கி இதை வாசியுங்கள். பின்பு சிந்தியுங்கள். நான் கூறுவது தவறா ?ந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள மக்களுக்காக பேசுவதற்கு பல கட்சிகளும், தலைவர்களும் உள்ளனர். அதுபோல் தமிழ் மக்களுக்காக பேசுவதற்கு பல கட்சிகளும், தலைவர்களும் உள்ளனர். ஆனால் பல தலைவர்களும், கட்சிகளும் இருந்தும் முஸ்லிம் மக்களுக்காக இதயசுத்தியுடன் பேசுவதற்கு யார் இருக்கின்றார்கள் ?

இந்த நாட்டில் முஸ்லிம்கள் பத்து வீதம் உள்ளனர். ஆனால் பத்து வீதமான நிலம் உள்ளதா ? காணி உள்ளதா ?

இருந்த நிலங்களும் பறிபோய்விட்டது. எமது முஸ்லிம் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தின் சிங்கள பிரதேசங்களை அண்டிய முஸ்லிம்களின் காணிகள் அவ்வப்போது சுவீகரிக்கப்பட்டது. அரசியல் அதிகாரம் இருந்தும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை எமது தலைவர்களால் மீட்க முடிந்ததா ?

பேரம் பேசுகின்ற பலம் இருந்த சந்தர்ப்பங்களில் பேரம்பேசும் சக்தியை எமது தலைவர்கள் பயன்படுத்தினார்களா ? அல்லது அவர்களது சுயநல அரசியல் வியாபாரங்களுக்காக மட்டும் பேரம்பேசும் சக்தியை பாவித்தார்களா ?

செல்கின்ற இடங்களிலெல்லாம் தமிழ் தலைவர்கள் தங்களது மக்களின் பிரச்சினைகளை கூற தவறுவதில்லை. அப்படியென்றால் இந்த நாட்டின் இரு சிறுபான்மை சமூகங்களில் தமிழர்களுக்கு மட்டும்தான் அரசியல் பிரச்சினை உள்ளதா ? முஸ்லிம்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லையா ?

கடந்த 12.07.2022 இல் “அரகலய” உடன் நடைபெற்ற முதலாவது சந்திப்பில் மனோகணேசன், சுமத்திரன், சானாக்கியன் ஆகிய தமிழ் தலைவர்கள் தங்களது மக்களின் பிரச்சினைகளை போராட்ட இளைஞர்கள் முன்பாக பேசினார்கள். அவ்வாறு பேசுவதன் மூலம் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் போராட்ட இளைஞர்களும் தங்களது பிரச்சினை தெரிந்திருக்க வேண்டும் என்பது தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு.

அதே சந்திப்பில் முஸ்லிம் மக்கள் சார்பில் ரவுப் ஹகீம் கலந்துகொண்டார். ஆனால் முஸ்லிம்களின் எந்தவித பிரச்சினைகள் பற்றியும் ஒரு வார்த்தையேனும் அவர் பேசவில்லை. இதுபோல் பல சம்பவங்கள் உள்ளது. இதுதான் இன்றைய முஸ்லிம்களின் பரிதாப நிலை.

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் தேர்தல் மேடைகளில் மாத்திரம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி பட்டியலிட்டு மக்கள் முன்பாக ஆக்ரோசமாக முழங்குவார்கள். இது முஸ்லிம் மக்களை ஏமாற்றி வாக்குகளை சூறையாடும் சுயநல அரசியல் என்பதனை முஸ்லிம் மக்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளாமைதான் எமது அரசியலின் சாபக்கேடாகும்.

தற்போது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் சந்தர்ப்பம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது. இது பேரம் பேசும் ஓர் அரிய சந்தர்பமாகும். இந்த சந்தர்ப்பத்தினை மக்களுக்காக பயன்படுத்தாமல், “வாழ்ந்தால் உன்னோடுதான்” என்று காதல்வசப்பட்ட நிலையில் முஸ்லிம் தலைவர்கள் உள்ளனர்.

அதாவது கடந்த இரண்டு தசாப்தங்களாக ரணிலுடன் இருந்த காதல் தற்போது சஜித் பிரமதாசா பக்கம் திரும்பியுள்ளது. இது கண்டி மாவட்ட சிங்கள வாக்குகளை குறிவைக்கும் சுயநல அரசியலை நோக்காக்கொண்டது.

முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டின் தனித்துவமிக்க ஓர் தேசிய இனம். எங்களுக்கென்று தனித்துவ கலாச்சாரம் பண்பாடுகள் உள்ளது. ஆனால் எங்கள் தலைவர்களின் சுயநல போக்கு அல்லது அரசியல் கொள்கையற்ற பயணத்தின் காரணமாக முஸ்லிம் மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும் பந்தாடப்படுகின்றோம்.

அதிகமாக கிழக்கு மாகாணத்திலேயே முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை உள்ளது. இதுபற்றி முஸ்லிம் தலைவர்கள் அக்கறை காண்பிப்பதில்லை. “ரவுப் ஹக்கீம் கிழக்கை சாராதவர் என்பதனால் இதில் அலட்சியமாக உள்ளார்” என்று கூறுகின்றபோது, அதனை ஓர் பிரதேசவாதமாக சித்தரித்து அவ்வாறு கூறுகின்றவர்களின் குரல்வளை நசுக்கப்பட்டதுதான் வரலாறு.

முஸ்லிம் தலைவர்களின் அலட்சியத்துக்கு போராளிகள் என்ற போர்வையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கின்ற சில சுயநலக் கும்பல்களே பிரதான காரணமாகும். அதாவது தலைவர் அமைச்சரானால் தாங்கள் தொழில் அல்லது வேறு சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம், கொந்தராத்து, கொமிசன், வேறு பதவிகள் அல்லது தேர்தலில் கால்சீட் பெறுவது, கட்சியில் பதவியை அடைவது போன்ற சுயநல எதிர்பார்ப்பில் உள்ளவர்களுக்கு சமூகம் எக்கேடு கெட்டாலும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. தாங்கள் வாழ்ந்தால் போதும் என்பதற்காக தலைவர் எடுக்கின்ற அத்தனை சமூக விரோத மற்றும் முட்டாள்தனமான செயல்பாடுகளுக்கும் இந்த கும்பல்கள் துணைபோகின்றது.

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளை நிபந்தனைகளாக விதித்து எமது பிரச்சினைகளை தீர்க்க முன்வருகின்ற வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை. அதற்காக பேரம் பேசுவதற்கு பொருத்தமான சந்தர்ப்பம் இதுவாகும். அவ்வாறில்லாமல் எந்தவித காரணங்களுமின்றி கண்ணை மூடிக்கொண்டு சஜித் காண்பிக்கின்ற வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவளிப்பதன் மூலம் அரசியல் வியாபாரிகளிடம் எமது சமூகம் சிக்கிக்கொண்டுள்ளது. அதாவது முஸ்லிம்களின் தலைவிதியை பணப் பெட்டிகளே தீர்மானிக்கின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :