எரிபொருள் தட்டுப்பாட்டில் எரிந்துபோன மனிதாபிமானம் !


நூருல் ஹுதா உமர்-
சுதந்திர இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வரிசைகள் எரிபொருளை பெற நாட்டின் எல்லா பாகங்களிலும் காத்து நிற்கிறது. படித்தவன், பாமரன், முக்கியஸ்தர் எனப்பலரும் வரிசையில் சமனாக நிற்கிறார்கள். ஒரே தண்ணீர் போத்தலை மாறிமாறி பருகிக்கொண்டும், ஒரே பிஸ்கட் பக்கட்டை பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டும்; இலங்கை அரசியல் முதல் சர்வதேச விடயங்களை ஆராய்ந்து கொண்டும் பொழுதை கழிக்கிறார்கள். ஆனாலும் இதனை கூர்ந்து கவனித்தால் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. நிறைந்த பணக்காரனின், உயர்ந்த செல்வந்தனின், முக்கிய அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் வாகனங்களை எரிபொருள் பெற காத்திருப்போர் வரிசையில் காணவில்லை. உயர்ரக வாகனங்கள் போலினில் காணவில்லை. மண்ணெண்ணெய்காக பல மணிநேரம் நிறைமாத கற்பினிகள் கூட போலினில் நிற்கிறார்கள். அங்கவீனர்கள், முதியோர்கள் ஏன் பாடசாலை சிறுவர்கள் கூட போலினில் தவிக்கிறார்கள். இந்த வரிசைகளில் அநேக இடங்களில் மனிதாபிமானம் இறந்து போனதும், சில இடங்களில் மனிதத்தன்மை வெளிப்பட்டதும் காலம் காட்டிய கோலமாக மலர்ந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பாலகர்களின் நிலைகள் நெஞ்சுருக வைக்கும் அளவுக்கு பரிதாபமாக இருக்கிறது. வரிசையில் காத்திருந்த பல உயிர்கள் ஆண்டவன் காலடியை சென்றடைந்தும் இருக்கிறது.

நீண்டவரிசையில் காத்திருந்தும் இப்போதைய நாட்களில் இடைநடுவில் எரிபொருள் இல்லாமல் கலைகிறது. ஆனாலும் சில இடங்களில் நள்ளிரவில் வெளியிடங்களுக்கு கலன்களில் அடைக்கப்பட்டு கடத்தப்படும் எரிபொருளை கடந்துதான் ஒவ்வொருநாளும் விடிகிறது என்றால் சிலர் கோபிக்கலாம். ஆனால் பெரும்பாலும் உண்மை அதுதான். மனசாட்சியை அடகுவைத்துவைத்து தலைக்கேறிய மமதையுடன் சில செட்காரர்கள் (எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்) நடந்து கொள்கிறார்கள் எனும் குற்றசாட்டு இன்றைய நாட்களில் மலிந்து காணப்படுகிறது. இருந்தாலும் பல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இறைவனுக்கும் , மனச்சாட்சிக்கும் பயந்து நடந்து கொள்வதும் இல்லாமல் இல்லை. எரிபொருளை பதுக்கும் வாடிக்கையாளனும் பதுக்கும் விற்பனையாளனும் மரணித்தால் அதன் பயனை தனது மரணக்குழி வரை கொண்டுசெல்ல முடியாது என்பதை மறந்தே விட்டார்கள்.

நிறைந்த பணத்துக்கு குறைந்த எரிபொருளை பொதுமக்கள் பெறவேண்டிய நிலையில் எரிபொருளுக்காக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து மேல்மாகாணம் அடங்கலாக பல்வேறு மாகாணங்களையும் நோக்கி இரவு நேரங்களில் சொகுசு வாகனங்களிலிலும், பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டிகளிலும் பெற்றோல், டீசல் உட்பட பல்வேறு வகையான எரிபொருட்கள் கலன்களில் அடைந்து செல்கிறதாக முக்கிய பிரமுகர் ஒருவர் தனது அனுபவத்தை அண்மையில் என்னிடம் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கலன்களில் அடைக்கப்பட்ட எரிபொருள் மட்டுமின்றி நிரப்பப்பட்ட சமையல் எரிவாயுக்களும் நான் பயணித்த பொதுமக்கள் பயன்பாட்டு வாகனத்தின் இருக்கைகளுக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள களஞ்சிய பகுதியில் வைத்து கொழும்புக்கு எடுத்துவரப்பட்டது. பயண முடிவில் என்னுடைய பயணப்பொதிகளை எடுக்கும் போதே அதை அறிந்து மிகவும் பயந்தேன் என்றார்.

சொந்த வாகனத்தில் செல்ல எரிபொருள் தட்டுப்பாடு இருந்த காரணத்தினால் நான் ஊரிலிருந்து தலைநகருக்கு பயணித்த சொகுசு பேருந்தில் எரிபொருள் நிரப்பப்பட்ட கலன்கள் 20-25ம், சமையல் எரிவாயு 20-30 உம் இருந்ததை பயண முடிவில் என்னுடைய பயணப்பொதிகளை எடுக்கும் போது கண்டேன். பஸ்ஸில் குளிரூட்டி முழுமையாக அன்றிரவு முழுவதும் தொழிற்பட்டுக்கொண்டிருந்தது. அமுக்கம் அல்லது சூடாகி இவை தீப்பற்றியிருந்தால் அல்லது விபத்தொன்று நடந்து பஸ் தீப்பிடித்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியாதளவில் கொடூரமாக இருந்திருக்கும் என அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியொன்றில் இருக்கும் உயரதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

இப்படி கருப்புச்சந்தையில் டீசல் 800-1000 வரையும் பெற்றோல் 650-1000 ரூபாய்க்கும் மண்னெண்ணை 200- 250 ரூபாய்க்கும், சமையல் எரிவாயு 25000 ரூபாய் வரையும் கருப்பு சந்தையில் வியாபாரம் நடப்பதாக அறிய முடிகிறது. ஊருக்கு வரும் எரிபொருள் எல்லாம் கொழும்புக்கும், கண்டிக்கும் இரவு பஸ்ஸில் ட்ரிப் போகுது, தட்டிகேட்கவேண்டியவர்கள் குளிர்ந்த அறையில் கூலாக அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார்கள். சில இடங்களில் நண்பர்கள், முக்கியஸ்தர்களுக்காக பாதுகாப்பு வேலிகள் கூட செட்டை பதம் பார்க்கிறது என பொதுமக்கள் பலரும் ஆதங்கப்படும் நிலை நாடுமுழுவதிலும் இருக்கிறது. சில முக்கிய அதிகாரிகள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மொத்தமாக எரிபொருளை கொள்வனவு செய்து கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது. அப்படி காலம் கெட்டுபோகி இருக்கிறது.

வரிசையில் பல நாட்களாக, பல மணித்தியாலயங்களாக காத்திருந்து இறுதிநேரத்தில் எரிபொருள் கிடைக்காத பொதுமகன், நீங்கள் செய்வது உங்களுக்கே சரியாக தெரிகிறதா? பெற்றோல் முடிந்துவிட்டது என சொல்லி செட்டை மூடினீர்கள். இன்று காலையில் புதிய விலையில் பல நிரப்பு நிலையங்கள் காலையில் எரிபொருளை வழங்குகிறது. விலை கூட்டியதோ இன்று காலை 3 மணிக்கு. அப்போ உங்களுக்கு புது விலையில் பெளசர் எப்போ வந்திச்சு? இந்த நாட்டில் மக்கள் படும் துன்பத்துக்கு அரசியல்வாதிகள் எவ்வளவு காரணமோ அதே பங்கு இந்த முதலாளிகளுக்கும் உண்டு. சாதாரணாமாக கிடைக்கும் லாபத்திற்கு மேலதிகமாக நீங்க பெற்றோலுக்கு லீற்றர் ஒன்றிற்கு 82 ரூபாவும், டீசலுக்கு லீற்றர் ஒன்றிற்கு 111 ரூபா அளவிலும் விலை மாற்றத்தால் மட்டும் கொள்ளை இலாபம் உழைக்குறீங்க. அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு இருக்கும் கோவம் உங்களை நோக்கி திரும்பினால் என்னவாகும் என யோசித்து பாருங்க. இது பெற்றோல் செட் முதலாளிகளுக்கு மட்டுமல்ல, எல்லா முதலாளிகளுக்கும் தான். நீங்களும் இந்த சமுதாயத்தில் தான் வாழ்கின்றீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு பாவச்சொத்தை சேர்த்து வைத்துவிட்டு போகாதீங்க. யுத்த காலத்தில் கூட எம்மக்கள் பரஸ்பரம் தங்களிடமிருந்ததை பகிர்ந்து ஒருவொருக்கொருவர் உதவியாக வாழ்ந்தார்கள் எனும் ஆதங்கத்தை கொட்டிய பொதுமகனின் ஆதங்கத்தில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளது.

இன்று உலகம் சுற்றுவது எரிபொருளில் என்றாகிவிட்டது. எரிபொருள் விலை கூடினால் எல்லாவற்றின் விலையும் கூடுகிறது. எரிபொருள் கிடைக்காமல் விட்டால் எல்லாமே ஓய்வாகிவிடுகிறது என்பதே இன்றைய காலத்தில் இயற்கையின் நியதியாகி இருக்கிறது. இவற்றை தீர்க்கும் நோக்கில் நாம் என்னதான் திட்டம் தீட்டினாலும் அது தோல்வியடைகிறது. இப்போது நாட்டில் பெற்றோல், டீசல் இல்லை என்றாகிவிட்டது. காணும் இடம் எல்லாம் வாகனங்களின் அணிவரிசை. செட் ஓனர்களுக்கு கூட எப்போது பெற்றோல் கிடைக்கும் என்பது தெரியாத நிலை. ஏன், பெற்றோலிய துறை அமைச்சருக்கு கூட தெரியாது. இவ்வாறான இக்கட்டான நிலையில் பயோ டீசல் (BIO DIESEL) பற்றிய உரையாடல்கள், தேடல்கள் சூடு பிடிக்க தொடங்கி இருக்கின்றன.

நிறைய வளர்ச்சி அடைந்த நாடுகளில், இந்தியாவில் கூட இப்போது பெற்றோல் டீசலுக்கு மாற்றீடாக பயோ டீசல் பாவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப உற்பத்தி செலவு கொஞ்சம் அதிகம் என்பதால் இந்த தொழிற்துறை அவ்வளவு பிரபல்யம் அடையவில்லை. ஆனால் நமது நாடு இருக்கும் இக்கட்டான நிலையில் இந்த மாற்றீடு சில வேளை நல்ல தெரிவாக இருக்கும். பெரிய ஹோட்டல்களில், உணவகங்களில் ஏராளமான சமையல் எண்ணெய் வீணாகும். ஒரு முறை பாவித்த எண்ணையை, மீண்டும் ஒரு முறை அவர்கள் பாவிக்க மாட்டார்கள். கொட்டிவிடுவார்கள். ஆனால், நமது நாடுகளில் இவ்வாறு உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை, சிறு ஹோட்டல்காரர்கள், சாலையோர கடைக்கரர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று பயன்படுத்துகிறார்கள். கொத்து போட, பறாட்டா மா பிசைய பாவிக்கிறார்கள். பலமுறை ஒரே சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு மிகவும் கேடு என்று சொன்னாலும் யாரும் கேட்பார் இல்லை.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், உணவகங்கள் பயன்படுத்திய சமையல் எண்ணெயை மொத்தமாக சேகரித்து எடுத்துப்போய் பயோ டீசல் செய்கிறார்கள். வடிகட்டி சுத்திகரித்து 10:1 எனும் விகிதத்தில் மெதனாலுடன் கொஞ்சம் சோடியம் ஹைட்ரொக்ஸைடை கலந்து புராசஸ் செய்கிறார்கள். காய்ச்சி எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட 100 லிட்டர் பாவித்த சமையல் எண்ணெயிலிருந்து 100 லிட்டர் பயோடீசலும், 10 லிட்டர் க்ளிசராலும்/கிளிசரீன் எடுக்கிறார்கள். க்ளிசாராலை மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும், பயோடீசலை வாகனங்களுக்கும் விற்பனை செய்கிறார்கள். இப்படி அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு 64000 பெரல் பயோடீசல் தயாரிக்கிறார்கள். ஜேர்மனியில் 55000. நமது அண்டை நாடான இந்தியாவில் கூட 2000 பெரல்கள். முழு இந்தியாவிலும் உணவகங்களில் பாவிக்கப்படும் எண்ணெய்யை எடுத்தால் ஆண்டுக்கு 100 கோடி லிட்டர் பயோடீசல் கிடைக்குமாம் என்பது தகவல் என வைத்தியரொருவர் தெரிவித்த விடயத்தை இங்கு அடிக்கோடிட்டு காட்டுகிறேன்.

நமது நாட்டிலும் தற்போது இந்த பயோ டீசல் பேசுபொருளாகி உள்ளது. அநுராதபுரத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவர், தற்போது ஒரு வருட காலமாக காட்டு ஆமணக்கு விதைகளில் இருந்து பெறப்பட்ட பயோடீசலை பாவிக்கிறார் என்ற செய்தி அண்மையில் பிரபல்யம் அடைந்திருந்தது. அது போல இன்னும் சிலரின் பயோ டீசல் உற்பத்தி முயற்சிகளும் தற்போது ஊடக வெளிச்சத்திற்கு வந்திருந்தன. நமது நாட்டில், நமது பகுதிகளில் இப்படியான முயற்சிகளை ஆர்வமுள்ளவர்கள் ஆரம்பிக்க முடியும்.

இதன் மூலம் ஹோட்டல்களில், வீடுகளில் பாவித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துவதை தடுக்க முடியும். அதன் மூலம் நிறைய மாரடைப்புக்களை பாரிசவாதங்களை, புற்றுநோயை, கொலஸ்ட்ரோலை சமூகத்திலிருந்து அகற்ற முடியும். தற்போது நாட்டில் நிலவும் பெற்றோல் டீசல் தட்டுப்பாட்டை இந்த பயோ டீசல் மூலம் ஓரளவாவது நிவர்த்திக்க முடியும். நல்ல வருமானம் கிடைக்கும். சூழல் பாதுகாப்பு. பெற்றோல் டீசல் போல இந்த பயோ டீசலில் சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லை என்பதால் சிறந்த மாற்றீடு என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எரிபொருள் நெருக்கடிக்கு பிரதான காரணம் பிரதமரின் பயமுறுத்தும் முன்னறிவிப்புக்களும், குறித்த அமைச்சுக்கான அமைச்சரின் கருத்துக்களும் பொறுப்பற்ற விதத்தில் இடம்பெறும் பதுக்கல்களுமே. எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார். நாட்டுக்கு தற்போது கிடைத்துள்ள மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புக்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முறையாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதன்போது பணிப்புரை விடுத்திருந்தார். அது மட்டுமின்றி நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக கடன் கடிதங்களை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இதன்போதுதான் வழங்குனர்களுடனான நீண்ட கால எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கான சாத்தியம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் சுற்றுலா பேரூந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் இவைகளெல்லாம் முறையாக நடந்ததா என்ற கேள்வி எம்மிடம் இருக்கிறது.

ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மூலம் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் அரசினால் தீர்மானிக்கப்பட்டது. தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது. தற்போதுள்ள எரிவாயு கையிருப்புக்களை முறையாக விநியோகிப்பதற்கும் போதுமான எரிவாயு கொள்ளளவை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன ஆகியோருடன் பாதுகாப்பு, எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு தொடர்பான நிறுவனங்களின் தலைவர்களும் கூடி கலந்துரையாடப்பட்டது. ஆனாலும் அது தேனீர் கூட்டமாக முடிந்ததே தவிர கூறிக்கொள்ளுமளவுக்கு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை.

நாட்டுக்கு வரவிருந்த டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்தால் அடுத்தநாள் காலை எரிபொருள் நுகர்வோரினால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதிகள் முடங்கும் அபாயம் நாட்டில் எல்லா இடங்களிலும் நிலவுகிறது. பெற்றோல் கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ என்ற ஏக்கத்தில் தற்போது எரிபொருளுக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகாலை 3 மணி தொடக்கம் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காணப்படுகின்றனர் எரிபொருளுக்காக தினமும் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் பெரும்பான்மை இடங்களில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல்வேறு எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன் எரிபொருள் உரிமையாளருக்கும் பொதுமக்களுக்கும் முறுகல் நிலையும் ஏற்படுகின்றது.
இங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள போதிலும் மக்கள் பொறுமையை இழக்க நேரிடுகிறது. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சுமார் 5 தொடக்கம் 10 நாட்களுக்குப் பின்னர் மண்ணெண்ணெய் விநியோகிக்கபடுவதுடன் ஒருவருக்கு 300 முதல் 500 ரூபாய்க்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அசௌகரியங்களுக்கு மத்தியில் மண்ணெண்ணெய்யை கொள்வனவு செய்வதையும் அவதானிக்க முடிந்தது. சில மாவட்டங்களில் அம்மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் பிரதேச செயலக ரீதியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரதேச செயலாளர்களினால் அட்டைகள் வழங்கப்பட்டு குறித்த அட்டைகளுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுகின்றது.
இதனால் அங்குள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச திணைக்களங்களில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மிக நீண்ட வரிசைகளில் நின்று பெற்றோலைப் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுடான டீசல் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தில் மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் காத்து நின்று டீசலைப் பெற்றுக்கொண்டனர்.

பல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோலை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்து பொது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது இக்காலத்திலும் சிலரின் மனம் எப்படி இருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதுடன் மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து எரிபொருட்களை பெற்று செல்கின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறிப்பிட்ட எரிபொருட்கள் விநியோகிக்கப்படும் என பொற்றோலிய கூட்டுத்தாபனம் முன்கூட்டியே அறிவித்து வருகின்ற நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள காலநேரமெதுவுமின்றி மக்கள் நீண்ட வரிசைகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர். அதன் போது அனைவருக்கும் எரிபொருட்களை பகிர்ந்தளிக்கும் முகமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 1000 முதல் 2000 ரூபாய்க்கே எரிபொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றது. அதனால் பல மணி நேர காத்திருப்பின் பின்னரும் மக்களுக்கு 2 முதல் 3 லீட்டர் வரையான எரிபொருட்களே பெற முடிந்துள்ளதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இது தவிர வேளாண்மை அறுவடை, விவசாயிகளின் விவசாய நடவடிக்கை பாதிப்பு, மீனவர்களுக்கு எரிபொருட்களை சீராக பெற்றுக்கொள்ள சிரமப்படுதல், போக்குவரத்தில் சிரமம், சேவைகள் வழங்குவதில் தாமதம், உட்பட பல்வேறு காரணங்களை தெரிவிக்கும் மக்கள் இதனால் பல்வேறு அசௌகரியங்களையும், விலையேற்றங்களையும் சந்தித்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடாக எரிபொருள் விநியோகம் நடைபெறுவதாகவும் இவ்விடயங்களில் அரசாங்க அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாகவும் தெரிவித்து எரிபொருளுக்கு காத்திருந்தோர்கள் அரச உயரதிகாரிகளை சந்தித்து எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்த சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின

இரவு நேரங்களில் முறைகேடாக எரிபொருள் வழங்கப்படுவதாகவும், பாதுகாப்புக்கு நிற்கும் பாதுகாப்புப் படையினர் இந்த செயலுக்கு துணைபோவதாகவும், பொலிஸார் தமது நண்பர்களின் வாகனங்களை கொண்டுவந்து எரிபொருள் நிரப்பி கொடுப்பதாகவும் தெரிவித்த பொதுமக்கள் எரிபொருள் வழங்குவதற்கு ஒரு முறையான பொறிமுறையை உருவாக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இப்படியான கோரிக்கைகளுக்கு இணங்க சாய்ந்தமருது பிரதேச பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கில் சாய்ந்தமருதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக எரிபொருள் வழங்க பிரதேச செயலத்தில் பிரதேச செயலாளர், ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அரச உயர் அதிகாரிகள், பொலிஸார், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏனைய நாட்களில் வழமை போன்று சகலருக்கும் எரிபொருள் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருந்ததை எண்ணி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அந்த கூற்றை நிராகரித்தார். இப்படி எந்தவகையான முடிவையும் கண்களை மூடிக்கொண்டு எடுக்கும் நிலைக்கு இலங்கை எரிபொருள் தட்டுப்பாடு மாறியிருக்கிறது.

தேர்தல் வாக்குண்டியலுக்காக எங்களுக்கு அரபு நாட்டு எண்ணெய் தேவையில்லை என்ற இனவாத சிந்தனை கொண்டோர்களை நாடு இப்போது தேடிக்கொண்டிருக்கிறது. இனவாதமாக செயற்பட ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கு, அரசுக்கும் ஆலோசனை வழங்கியதுடன் மட்டுமல்லாது பல நூறு முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்தவர்கள் இப்பொது இருக்கும் நாட்டின் நிலைக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள். இவர்களின் முறையற்ற முகாமைத்துவம் தான் நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம். உதவியாக, நன்கொடையாக வந்த நிறைய அரபு நாட்டின் ஸதக்காக்களை இனவாத சாயம்பூசி, தீவிரவாத முத்திரை குத்தியோர் இன்று டொலர் தேடியலைவதும், எண்ணெய் பெற அரபு தேசங்களுக்கு படையெடுப்பதும் ஆச்சரியமாக இல்லை. நகைப்புக்குரியதாகவே மாறியிருக்கிறது.

470 ரூபாய்க்கு சந்தையிலும், 1200 ரூபாய்க்கு மேல் கருப்பு சந்தையிலும் பெற்றோலை வாங்கும் சேவை வழங்குநர்களும், வியாபாரிகளும் அதன் மூலம் வழங்கும் சேவை கட்டணத்தை பலமடங்கு கூட்டியிருப்பதனாலும், விலைகள் ஏறியிருப்பதனாலும் நேரடியாக பாதிக்கப்பட்டது சர்வதேச வங்கிகளில் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பார்கள் அல்ல. சாதாரண மக்களே.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :