8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் தெரிவு !



ஆர்.சனத்-
8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் தெரிவு
134 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு
டலசுக்கு 82 - அநுரவுக்கு 3 வாக்குகள்
4 வாக்குகள் நிராகரிப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிப்பு
'வாக்களித்துவிட்டு வைத்தியசாலை திரும்பிய எம்.பிக்கள்'

லங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு எம்.பிக்கள் வாக்களிப்பை புறக்கணித்தனர்.
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், பதவி காலம் முடிவடைய இன்னும் இரண்டவரை வருடங்கள் எஞ்சியுள்ள நிலையில் - ஜுலை 14 ஆம் திகதி அவர் பதவி விலகினார். வெளிநாட்டுக்கு தப்பியோடிய பின்னரே பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதனால் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும் பொறுப்பு, நாடாளுமன்றம் வசமானது. இதன்படி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் ஜுலை 19 ஆம் திகதி (நேற்று) ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். போட்டியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பின்வாங்கினார். தமது கட்சி - கூட்டணியின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு என அறிவிப்பு விடுத்தார்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. நேற்றைய தினம்போலவே நாடாளுமன்றத்தை சூழ இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெற வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் அறிவிப்பு விடுத்தார். வாக்குச்சீட்டை படமெடுப்பதும், காட்சி படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமென சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற மரபுகளை முறையாக பின்பற்றி, வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து எம்.பிக்களிடமும் கேட்டுக்கொண்டார். சபைக்குள் தொலைபேசி பயன்பாட்டுக்குள் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற செயலாளரே இன்று தெரிவத்தாட்சி அலுவலராகச் செயற்பட்டார். வாக்களிப்பு நடைமுறைகளை அவர் விவரித்தார். அதன்பின்னர் முற்பகல் 10.24 மணியளவில் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமானது.
11.45 மணியளவில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. அதன்பின்னர் வாக்கெண்ணும் பணி இடம்பெற்றது. நண்பகல் 12.40 மணியளவில் தேர்தல் முடிவை தெரிவத்தாட்சி அலுவலராக , நாடாளுமன்ற செயலாளர் சபைக்கு அறிவித்தார்.
இதற்கமைய 134 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் மேல் ரணில் பெற்றதால், அடுத்த தேர்வுகளுக்கு செல்ல வேண்டிய தேவை எழவில்லை.
வாக்கெடுப்பு தினத்தில் சபைக்கு கட்டாயம் வருமாறு தமது கட்சி எம்.பிக்களுக்கு கட்சிகள் பணிப்புரை விடுத்திருந்தன. வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த எம்.பிக்கள்கூட அழைத்துவரப்பட்டிருந்தனர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு எம்.பிக்கள், சபைக்கு வந்து, வாக்களித்து திரும்பிச்சென்றனர். இதில் சமன்பிரிய ஹேரரத் எம்.பி. 'சேலைன்' போத்தலுடன் சபைக்கு வந்திருந்தார். வாக்களித்தகையோடு வைத்தியசாலை சென்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, சுயாதீன அணிகள், மொட்டு கட்சியின் ஒரு பிரிவு தமது ஆதரவை டலஸ் அழகப்பெருமவுக்கு நேற்று வெளிப்படுத்தியிருந்தன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன ரணிலுக்கு ஆதரவளிக்கபோவதாக அறிவித்திருந்தன என்பன குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள்
1. ஜே.ஆர். ஜயவர்தன
2. ரணசிங்க பிரேமதாச
3. டி.பி. விஜேதுங்க
4. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
5. மஹிந்த ராஜபக்ச
6. மைத்திரிபால சிறிசேன.
7.கோட்டாபய ராஜபக்ச.
8. ரணில் விக்கிரமசிங்க

இலங்கை அரசியல் வரலாற்றில் 1993 இல் ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொறுப்பு நாடாளுமன்றம் வசமானது. பதில் ஜனாதிபதியாக இருந்த டி.பி. விஜேதுங்க ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :