வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய "எரிந்த சிறகுகள்" நூல் பற்றிய திறன் நோக்குநூல் விமர்சனம்:- இக்பால் அலி-
வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய "எரிந்த சிறகுகள்" என்ற கவிதை நூலை நுகர்ந்து சுவைத்துப் பார்க்கக் கிடைத்தது. பெண்ணினம் அனுபவித்து வரும் சொல்லொண்ணாத் துயரங்களை வெளிப்படுத்தக் கூடிய மிக அருமையான கவிதைத் தொகுதியாக இந்த நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆணைக் கருவாகச் சுமந்து பெற்றெடுக்கும் பெண்கள், அந்த ஆண்களின் மூலம் பெண்கள் ஈவு இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டு வரும் ஈனச் செயலையும் சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் கவிஞை ரிம்ஸா முஹம்மத் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

உளவியல் ரீதியான கருத்துக்களையும் பெண்கள் அனுபவிக்கின்ற கொடூரமான சீதனப் பிரச்சினைகளையும் ஆண்களினால் ஏமாற்றப்படுதலையும், ஆண்களின் அடக்குமுறைகளையும் பெண்களது ஏக்கங்களையும், நம்பிக்கைகளையும், காதல் உணர்வுகளையும் தமது கவிதைகளின் மூலம் தன்னைப் படைத்து நேசிக்கும் இறைவனிடம் முறைப்பாடு செய்யும் ஒரு முறையீடாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

மனித வாழ்விலிருந்து பெண்களது வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தாலும் சிலவேளை நல்லவர் போல் நடித்து ஏமாற்றும் ஆண்களிடம் சூழ்ச்சி நிறைந்த சதிவலையில் சிக்குண்டு பெண்கள் சிதைந்து, சீரழிந்து சின்னா பின்னமாகிப் போய் விடுகிறார்கள். இன்னும் பெண்கள் ஆண்களின் போகப் பொருளாகவும் விளம்பரக் காட்சிப் பொருளாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். இத்தகைய நிலையில் இருந்து பெண்கள் விடுதலையும் சுகமும் பெற வேண்டும் என்பதைப் பாடுபொருளாகக் கொண்ட இக்கவிதைத் தொகுதியிலுள்ள பல சிறப்பான கவிதைகள் கவிஞை ரிம்ஸாவின் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டைத் தரிசிக்கச் செய்கின்றது. அதேவேளையில் கவிஞையுடைய சில கவிதைகள் சமகாலத்தையும் படம்பிடித்துக் காட்டக் கூடியதாக அமைந்துள்ளன.

செழிப்புடன் வாழ்ந்தோர் முகத்திலெல்லாம்
பட்டினித் துயர்தான் படர்கிறதே
சூழ்ந்தது துன்பம் எமைச் சுற்றி
சுகமது உண்டோ வாழ்க்கையிலே?

'என்ன வாழ்க்கை' (பக்கம் 35) என்னும் தலைப்பில் அமைந்த கவிதையின் சில வரிகளே மேலே தரப்பட்டவையாகும்.

மனித நேயம் என்பது தாம் வாழும் சூழலில் வெறும் கண் துடைப்பாகவே காட்டப்படுகிறது. மனிதர்களுக்கிடையே காருண்யம், அன்பு, பிரியம், சிநேகம் இருத்தல் அவசியமாகும் எனவும் மிருகங்களைப் பலியிடுவது கூடாது எனவும் மேடை போட்டுப் பேசுபவர்கள்தான் மறுபுறத்தில் மனித நேயத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மறைமுகமான முறையில் மனிதக் கொலை வெறியாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மனித நேயம் என்பது முக்கியத்துவமானது. ஆனால் அது தற்காலத்தில் மனிதர்களிடையே வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளிக்கிறது.

கொடூரமான சிந்தனைப் போக்குடையவர்களால் திட்டமிட்ட விதத்தில் மனித நேயம் மனிதச் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டுதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளன. 'மனித நேயம்' என்கின்ற சொல் மிக உயர்வானதும் புனிதத் தன்மை வாய்ந்ததும் ஆகும். மனித நேயம் ஒவ்வொருவருடைய மனதை விட்டும் காணாமல் போகும் அபாயம் உள்ளது. அப்படி நடக்காமல் பாதுகாத்துக் கொள்வது நமது கடமையே. எனவே நாம் இந்த அவல நிலையில் இருந்து மீண்டெழுதல் மிக அவசியம் என்று கவிஞை ரிம்ஸா முஹம்மத் மனம் பதறிக்கொண்டு அவலக் குரல் எழுப்புகின்றார்.

மனித நேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதை கதையாய்ப்
பேசுகிறார்கள்..

இது 'ஒப்பனைகள்' (பக்கம் 38) என்னும் தலைப்பில் எழுதிய கவிதையின் சில வரிகளாகும். கவிஞை ரிம்ஸா தனது கவிதையின் மூலம் தம் ஆளுமையை எந்தளவுக்கு ஆழமாகப் பதிவு செய்ய முடியுமோ அந்தளவு ஆழத்திற்கு சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் உயர் நிலையை அடையலாம் என்று சொல்லுமளவுக்கு இவரது கவிதை வரிகளில் யதார்த்த வாதமும் கவித்துவமும் கற்பனை அழகும் உணர்ச்சிச் செறிவும் தனித்துவ முத்திரையும் காணப்படுகின்றன.

இருளின் போர்வைக்குள்
சிக்குப்பட்டுப் போன
சூரியனுக்கே
விடிந்தால்
விலாசம் வருது..

போரின் வடுக்களுக்குள்
அகப்பட்டுப் போன
மக்களுக்கு
எப்போது விலாசம் வரும்?

கவிதை ரிம்ஸா 'காலத்தின் ஓலம்' (பக்கம் 76) என்ற தலைப்பில் எழுதிய கவிதையின் சில வரிகளையே மேலே தரப்பட்டுள்ளது. மிகக் கொடிய போர்க்கால யுகத்தை மீளவும் திரும்பிப் பார்க்கக் கூடியதாக மேலுள்ள கவிதை வரிகள் காணப்படுகின்றன.

போர்க் காலத் தடங்கள் இந்தக் கவிதையில் ஊடாடி நிற்பதைப் பார்க்கின்ற போது நெஞ்சோடு அணைத்துக்கொள்ள முடிகின்றது. வாசித்த உடனே நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. ஆரம்பத்திற்கு முடிவொன்று இருப்பது போல, இருட்டுக்கு வெளிச்சம் இருப்பது போல போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நெஞ்சோடு உள்ள வடுக்களை இல்லாமல் செய்வதற்கு என்னதான் வரப்பிரசாதங்களை அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொட்டினாலும் அவை ஒருபோதும் மறக்க முடியாத வடுக்களே என்கிறார் கவிஞை. கையில் சூரியனைவிடப் பெறுமதியான செல்வத்தைக் கொண்டு வந்து கொடுத்தாலும் போரினால் காயப்பட்ட மக்கள் எந்தவொரு வரப்பிரசாதத்தையும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஏனென்றால் இந்த கண் துடைப்பெல்லாம் அவர்களின் துயரங்களைத் துடைத்தெறியாது என்பதனாலாகும்.

தனக்கே உரிய பாணியில் திரும்பத் திரும்ப வாசித்து நினைவில் மறக்காமல் வைத்திருக்கின்ற கவிதைகளை எரிந்த சிறகுகள் கவிதை நூலில் பரவித்; தந்துள்ளார் கவிஞை ரிம்ஸா.

பச்சையணி தேயிலை மலையில்
இச்சையோடு துரையிருப்பான்
கொழுந்தை பெண்கள் பறித்தாலும்
கொடும் பேச்சால் துளைத்தெடுப்பான்..

'முகவரி தேடும் மலையகம்' (பக்கம் 120) என்னும் தலைப்பில் எழுதிய மிக அருமையான கவிதையின் வரிகளே இவையாகும்.

மலையகப் பெண்கள் தம் உடலின் வியர்வைத் துளிகளை உதிரமாக நீர் பாய்ச்சி தேயிலைக் கொழுந்துகளைப் பறிப்பவர்கள். சிலவேளைகளில் துரைமார்களுடைய பார்வையில் போகப் பொருளாகவும் பார்க்கப்படுவாள். அவள் உடல் அட்டை கடிக்கும் கடுமையான வேலைப் பணிக்கும் கடுமையான வெயிலுக்கும் கடுமையான குளிருக்கும் உள்ளாகித் தம் உடல் அமைப்பிலும் வேறுபடுத்திக் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். கங்காணிமார் அல்லது துரைமார்களுடைய சினச் சொற்கள் தினசரி காதுகளில் உள்வாங்கப்பட்டு அவ் விசக் கருத்துகள் எவ்வளவுதான் மனதில் தைத்துக் கொண்டிருந்தாலும் சரி, தம் உடலில் எவ்வளவுதான் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும் சரி அதற்கு மாறாக அவர்கள் அந்த வலிகளை உதிர்த்துவிட்டு மனம் நொந்து, வெந்து பழக்கப்பட்ட இந்த மலையகப் பெண்கள்தான் இந்நாட்டுக்கு தேயிலையின் மூலம் அந்நியச் செலாவணியை அதிகம் பெற்றுத் தருபவர்கள். இப் பெண்கள்தான் இந்நாட்டின் விலையும் மதிப்பும் அழகும் மிக்கவர்கள் என்பதன் காட்சிகளைத் தம் கவிதைகளில் கவிஞை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

ஆக, பெண்களது சமூக முன்னேற்றத்துக்கும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமனாகப் பயணம் செய்ய வேண்டும் என்று துடிக்கும் இளம் சந்ததியினர்களுக்கும் "எரிந்த சிறகுகள்" என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் நல்ல பாடுபொருள்கள் உள்ளன.

கலாநிதி துரை மனோகரன் எழுதிய முன்னுரையில் 'இக் கவிதைத் தொகுதியில் 54 கவிதைகளும் 7 மெல்லிசைப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆன்மிகம், சமுதாய விமர்சனம், நாட்டு நிலைமை, காதல் உணர்வுகள், தனிமனித உணர்வுகள், தனிமனித மேம்பாடு, பெண்ணியம், தொழிலாளர் நிலைமை, ஏழ்மை, அறிவுரை முதலான பல விடயங்கள் ரிம்ஸாவின் கவிதைகள் தொட்டு நிற்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்கான அணிந்துரையை வைத்திய கலாநிதி கவிஞர் தாஸிம் அகமது முன்வைத்துள்ளார். அடுத்து இந்நூல் பற்றி கவிமணி என். நஜ்முல் ஹுஸைன் குறிப்பிடுகையில் 'வாசிப்போர் இலகுவில் புரிந்துகொள்ளும் வகையில் கவிதை படைப்போர் தமது முயற்சிகளிலே வெற்றி பெறுகின்றனர். தமக்கும் புரியாது வாசிப்போரையும் குழப்பம் கவிதை நூல்கள் வாசகர்களால் புறந்தள்ளப்படுகின்றன. அந்த வகையில் மிகவும் இலகுவான சொற்களினால் தனது கவிதைகளை ஆக்கியுள்ளார் கவிதாயினி ரிம்ஸா முஹம்மத்' என்று தமது கருத்துரையில் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துரையினைத் தேசிய கல்வி நிறுவகத்தின் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆசிரியரும் கண்டி கல்வி வலய ஆசிரியர் ஆலோசகருமான திருமதி. ரதி. தேவ சுந்தரம் வழங்கியுள்ளார். அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்த நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் முன்வைத்துள்ளார். கவிஞை ரிம்ஸாவின் பணி தொடர வாழ்த்துகிறேன்!!!


நூல் - எரிந்த சிறகுகள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - கொடகே பதிப்பகம்
விலை - 400 ரூபாய்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :