சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் ஆளுமை மற்றும் திறமைகளைப் பாராட்டிய, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சி.டி.களுவாராச்சி, அவருக்கு பெண் ஆளுமை என்ற விருதையும் வழங்கி கௌரவித்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வின் போது அவருக்கான இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் விடய அபிவிருத்தி உத்தியோகத்தராக (CBO's) ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் நியமனம் பெற்று, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் இணைக்கப்பட்ட 5 வருட சேவைக் காலத்தில், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினூடாக ஏழை மக்களுக்கு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி பிரதேச செயலகத்திற்கும், சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பிக்கும் நற்பெயரை பெற்றுக்கொடுக்க காரணமான அமைந்த சிறந்ததொரு ஆளுமைப் பெண்ணாக இன்றுவரை திகழ்து வருகிறார்.
குறிப்பாக, பெண்கள் தலைமை தாங்கும் ஏழைக் குடும்பங்களுக்கு தனவந்தர்களினதும், அவரின் சொந்த நிதிகளைக் கொண்டு ரமழான் காலங்களில் ரமழான் பொதிகளை சமுர்த்தி பிரதேச அமைப்பினூடாக வழங்கி வைத்தார்.
எமினன்ஸ் தனியார் கல்வி நிறுவனத்தினூடாக ஆங்கில மொழி மற்றும் கணினி கற்கை நெறிகளை புலமைப் பரிசிலாகப்பெற்று பிரதேசத்திலுள்ள 30 ஏழை மாணவ, மாணவிகளுக்கு சமுர்த்தி பிரதேச அமைப்பினூடாக வழங்கி வைத்தார்.
இத்திட்டங்களால் அம்பாறை மாவட்ட சமுர்த்தி முன்னேற்றக் கூட்டங்களில் மட்டுமல்லாமல், ஏனைய பிரதேச செயலக கூட்டங்களிலும் சாய்ந்தமருது சமுர்த்தி பிரதேச அமைப்பின் பெயரை முன்ணுதாரனமாக பேசுவதற்கு காரணமாக திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இவ்வருடம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப் படுத்தப்பட்ட "போதைப்பொருள் எதிர்ப்பு தினமும், கொடி விற்பனையும்" வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்த தனது பொறுப்பிலுள்ள 53 சமுர்த்தி சமுதாய அமைப்புக்களையும் ஊக்கப்படுத்தி மாவட்ட மட்டத்தில் கொடி விற்பனையில் அதிகூடிய நிதிகளை சேகரித்து முதலிடம் பெற வழிவகுத்த ஆளுமையுள்ள ஒருவராகும்.
போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி சமுதாய அமைப்புக்களிலுள்ள பெண்களை ஒன்றுதிரட்டி "போதையற்ற மருதூர்" எனும் தொனிப்பொருளில் "போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு" மற்றும் பாடசாலை மாணவிகளுக்கான "போதைப்பொருள் எதிர்ப்பு மாணவிகள் மாநாடு" போன்ற வேலைத்திட்டங்கள் ஊடாக பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பற்றி விழிர்ப்புணர்வை ஏற்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஒரு அத்தியாயத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும் தனது பொறுப்பில் உள்ள 53 சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையினை வழங்கும் திட்டத்தினூடாக மாவட்டத்தில் யாரும் செய்யாத வேலைத்திட்டமாக மாற்றியதுடன் அதை ஏனைய பிரதேச செயலகங்களும் பின்பற்றுமளவுக்கு அந்த செயற்திட்டத்தை அமுல்படுத்தக் காரணமாக அமைந்துளார்.
இவ்வாறான பல்வேறுபட்ட தூரநோக்கு சிந்தனைகளுடன் தனது பொறுப்புக்களையும் தாண்டி செயல்பட்டு வருகின்ற இளம் உத்தியோகத்தரின் ஆளுமையுள்ள செயற்பாடுகளை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சி.டி.களுவாராச்சி பாராட்டியதுடன், பெண் ஆளுமைக்கான விருதையும் வழங்கி கௌரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment