அடுத்த வருடம் செலுத்தவுள்ள அனைத்து கடன்களையும் டொலரில் செலுத்துவோம். அதற்கான அனைத்து திட்டங்களையும் மேற்கொண்டிருக்கின்றோம். அத்துடன் கடன் இல்லாத நாட்டை ஏற்படுத்துவதே எமது இலக்கு அத்தோடு கடன் இல்லாத நாட்டையே அடுத்துவரும் அரசாங்கத்துக்கும் ஒப்படைப்போம் என நேற்று பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சு, சமுர்த்தி உள்ளக பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உரையாற்றுகையில்:-
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக வெளிப்படையாகவே பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்திருக்கிறேன். தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய பிரச்சினையில் இருக்கின்றது. என்றாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் தேவையான திட்டங்களை மேற்கொண்டே வருகின்றோம். விசேடமாக வெளிநாடுகளிடமிருந்து அடுத்த வருடம் கடனாக செலுத்த வேண்டிய டொலரை டொலராகவே செலுத்துவோம். அடுத்த வருடம் ஜனவரியில் $500 Million செலுத்த வேண்டியுள்ளது . ஜூலை மாதம் $1 Billion செலுத்த வேண்டியுள்ளது .
மேலும் நாட்டுக்கு அந்நிய செலாவணியை அதிகம் வழங்கும் சுற்றுலாத்துறை மூலம் 2019இல் $3,607 Million கிடைக்கப்பெற்றது. ஆனால் இந்த வருடம் $100 Million ( சுமார் 2,250 கோடி ரூபா ) கிடைத்துள்ளது. கொவிட் கார ணமாகவே இந்நிலை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா மட்டும் காரணமல்ல. மாறாக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையுடன் கொரோனாவும் காரணமாகியது. அதனால்தான் கடந்த தேர்தலில் UNPயில் போட்டியிடமால் வேறு பெயரில் போட்டியிட்டீர்கள்.
மேலும் 2017யில் $940 Million இருந்த ஏற்றுமதி வருமானம் 2018யில் $980 Million 2019இல் $979 Million காணப்பட்டதுடன் அது இந்த வருடத்தில் $751 Millionகளாக குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் செல்கின்ற நிலையில் 53 ஆயிரம் பேர் மட்டுமே கடந்த வருடத்தில் வெளிநாட்டு தொழில்புரிய சென்றுள்ளார்கள். இது 4 மடங்கு குறைவு. அதன் மூலம் எமது வருமானம் வெகுவாக குறைவடைந்தது.
எவ்வாறெனினும் அடுத்த வருடத்தில் ஐப்பான், ருமேனியா ,கொரியா, UK போன்ற நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்ப நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். 3 லட்சம் பேரை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதே எமது இலக்கு.
நாம் நினைப்பதுபோல் அல்லது கூறுவதுபோல் வெளிநாட்டு முதலீடுகள் எமக்கு கிடைக்க முடியாது. வெளிநாட்டு முதலீட்டாளார்கள் என்பவர்கள் வர்த்தகர்கள். வேகமாக பணத்தை சம்பாதிக்க கூடிய நோக்கத்துடனேயே ஒரு நாட்டுக்கு முதலீட வருவார்கள் , நாடு என்ற ரீதியில் நாம் சிந்திக்க வேண்டும். அதன் இறுதி விளைவு என்ன என்பது பற்றி. நீண்ட காலம் டொலர் எமது நாட்டில் நிலைப்பது தொடர்பிலும் யோசித்தே நாம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் மூலம் அந்நியச் செலாவணி வருமானமாக $7.107 Billion கிடைக்கிறது. அதனை $8 Billion ஆக அதிகரித்துக் கொள்வதே எமது இலக்கு. அந்நியச் செலாவணி பிரச்சினை எமக்கு இருக்கின்றது. இந்த பிரச்சினை உடனடியாக ஏற்பட்டது அல்ல. தொடர்ச்சியாக இடம் பெற்றுவந்த பிரச்சினை.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுமாறு எதிர்க் கட்சியினர் தெரிவிக்கின்றனர். நாங்கள் இதற்கு முன்னரும் சர்வதே நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இருக்கின்றோம். அண்மையிலும் $600 Million பெற்றிருக்கின்றோம். அதேபோன்று அவர்களின் நிபந்தனைகளை சரியாக நிறைவேற்றியும் இருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 18ம் திகதி வரை நாட்டிலேயே இருப்பார்கள். கடன் தேவை என்றாலே அவர்களுடன் கலந்துரையாடுவோம். அவர்கள் எவ் வகையான நிபந்தனைகளை விதிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். எமது கடன்களை அடைப்பதற்காக யாரிடமும் மண்டியிடமாட்டோம். அதே போன்று கடன் வழங்குவதற்கு தவணை கேட்கவும் மாட்டோம். மாறாக வெளிநாடுகளிடம் பெற்ற கடனை இல்லாமலாக்க உதவி கேட்கின்றோம். கடன் இல்லாத நாட்டை ஏற்படுத்துவதே எமது இலக்கு. நாங்கள் இந்நாட்டை அடுத்த அரசாங்கத்துக்கு ஒப்படைப்பதாக இருந்தால் அது கடன் இல்லாத நாடாகவே இருக்கும் என்றார்.
0 comments :
Post a Comment