விவாத அழைப்புத் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள்



வை எல் எஸ் ஹமீட்-
ண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு காணிப்பிரச்சினை இல்லை; என்று திரு சாணக்கியன் பா உ பாராளுமன்றில் தெரிவித்த கருத்துத் தொடர்பாக ஹாபிஸ் நசீர் பா உ திரு சாணக்கியனை விவாதத்திற்கு அழைக்க, அதனை சாணக்கியன் ஏற்றுக்கொண்ட நிலையில், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலவித கருத்துக்கள் அலை மோதுகின்றன.

இந்தக் கருத்துக்களில் அதிகமான முஸ்லிம் முகநூல் எழுத்தாளர்கள் திரு சாணக்கியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதற்குக் காரணம், அண்மைக்காலங்களில் தமது சொந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சோரம்போய் பேசாமடந்தைகளாக மாறிய நிலையில் திரு சாணக்கியன் துணிச்சலாக முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்பது அவர்மீது பாரிய அபிமானத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. அது இயற்கையானதும்கூட.

மறுபுறம், சோரம்போன பா உ க்கள் மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக, சகோ ஹபீஸ் நசீர்மீது அதிக வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். அவரது “ஜனாசா பெட்டிகள்தான் எரிக்கப்பட்டன” என்ற கூற்று அவரை மக்களது பார்வையில் மிகவும் கீழ்மட்ட நிலைக்கு கொண்டுபோயிருக்கிறது. இவ்வாறு, சகோ ஹாபீஸ் நசீர்மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் இந்த விவாத அழைப்பில் சாணக்கியனுக்கு சார்பான ஓர் மனோ நிலையை அதிகமான முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு புறம் தாம் வெறுக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர். மறுபுறம் தம் அபிமானத்தை வென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர். எனவே, தம் அபிமானத்திற்குரியவரின் பக்கம் தம் மனங்கள் ஆதரவாக இருக்கிறது. ஒரு வகையில் இந்நிலைமை மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் இனவாதத்திற்கப்பால் சிந்திக்கிறார்கள். முஸ்லிமோ, தமிழரோ, யாராக இருந்தாலும் நல்லது செய்பவர்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். இதற்காக முஸ்லிம் சமூகத்தைப்பற்றி நாம் பெருமை கொள்ளலாம்.
மறுபுறம், நாம் கவலை கொள்ளவேண்டிய விடயம் என்னவெனில், அரசியல் என்று வந்துவிட்டால் முஸ்லிம் சமூகம் பகுத்தறிவை இழந்த ஒரு சமூகமாக சிந்திக்கின்றதே என்பது.

திரு சாணக்கியனின் அந்த வரவு செலவுத்திட்ட உரையும் பொதுவாக நன்றாகவே இருந்தது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு “காணிப்பி்ச்சினை இல்லை” என்பது ஏற்புடையதா?

விடுதலைப் புலிகளின் காலத்தில் மட்டு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் கையகப்படுத்தப்பட்ட சுமார் 15,000 ஏக்கர் காணிகள் இன்னும் மீளளிக்கப்படவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் அக்காணிகளை மீளப்பெற முஸ்லிம் காங்கிரஸ் சில முயற்சிகளை எடுத்தது. காலம் சென்ற எம் ஐ எம் முகைதீன் இவ்விடயத்தில் மிகவும் பிரயாசைப்பட்டார். ஆனாலும் கைகூடவில்லை.

அதன்பின்னும் அவ்வப்போது சில முயற்சிகளை மு கா செய்தது. அதன்பின் ஏனோ அதனைக் கைவிட்டு விட்டது. அதேபோல் இன்றும் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குள் வரவேண்டிய சில காணிகள் வாகரை பிரதேச நிர்வாகத்திற்குள் இருப்பதால் ஓட்டமாவடி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இவ்வாறு பலதரப்பட்ட காணிப்பிரச்சினைகள் அங்கு இருக்கின்றன.

எனவே, இந்த விடயத்தில் சாணக்கியனின் கூற்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதென்பதா? அல்லது திரு சாணக்கியன் அரசியலுக்குப் புதியவர், நீண்ட காலம் நாட்டில் இருக்காதவர் என்பதனால் அவரது அறியாமை என்பதா?

அறியாமையாக இருந்தாலும் அதனை அவதானமில்லாமல் பாராளுமன்றில் கொட்டுவது சரியா?
எனவே, இந்நிலையில் மட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சாணக்கியனை, ஹாபீஸ் நசீர் விவாதத்திற்கு அழைத்திருப்பது சரியானதே!

இதில் முஸ்லிம், தமிழ் என்பதற்கப்பால், அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் நாம் நியாத்தின் பக்கம் நிற்கவேண்டும். இந்த விடயத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட சமூகம். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு இந்த விவாதம் வழிசெய்ய வேண்டும்.
ஒருவரை ஆதரித்தால் அவர் எது செய்தாலும் அவருக்கு வக்காலத்து வாங்குவோம்; என்ற நம் அழுக்கு அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம் தம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும். தம் அபிமானத்தை வென்றவர் என்பதற்காக தமக்கு எதிராக, நாம் இழந்த காணிகளை, “இல்லை” எனப் பேசியதை ஆதரிக்கும் ஒரு சமூகமாக நாம் இருக்கும் நமது பகுத்தறிவு இல்லாத அரசியலை என்னவென்பது.

இந்த அழுக்கு அரசியல்தான் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவலநிலைக்கு காரணம் என்பதை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :