முஸ்லிங்களின் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வை அஸ்ரப் எப்போதே இனங்கண்டு கூறிவிட்டு சென்றுவிட்டார் : மு.கா தவிசாளர் முழக்கம் மஜீட் !





மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்-
ஹியாகான் பவுண்டேசனின் 12வது வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் மற்றும் கெளரவிப்பு நிகழ்வும் அமைப்பின் ஆயுள் கால தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி. யஹியாகான் தலைமையில் மாளிகைக்காடு வபா றோயல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக ஏ.சி. யஹியாகானும், செயலாளராக ஏ.சி.எம்.றியாலும், உபதலைவர்களாக ஏ.எல்.சினந்துறை, எஸ்.நிப்ராஸ், எஸ்.றிஸான், எஸ்.நிபார், எம்.வை.எம். ஹுசைன், எம்.பி.எம். ஹனீபா, ஆர்.எம். இம்தாத், எம்.எம்.நிலாம், எம்.எம்.எம். சக்கி, எஸ்.எல்.எம். யூசூப், எம்.ஏ.அலிகான், ஏ.நிஸார், எம்.பி.எம். சியாம் ஆகியோரும் பொருளாளராக எம்.ஏ.எம்.ரஸ்பாஸ், உப செயலாளராக ஆர்.எம். றிபாத், உப பொருளாளராக நிம்னாஸ், கொள்கைப்பரப்பு செயலாளராக எஸ்.எம். றியாஸ், ஊடக பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.வை. அமீர், மக்கள் தொடர்பாடல் செயலாளராக ஏ.எல். பஸீல் ஆகியோர் சபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.ஏ.அப்துல் மஜீத் (முழக்கம் மஜீட்) மற்றும் அண்மையில் தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு தெரிவாகிய அமைப்பின் அங்கத்தவர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். வை. அமீரின் புதல்வி பர்கத் ஜெபீன் மறறும் எம்.ஜவாஹீரின் புதல்வி பாத்திமா ஜெஸ்மீன் ஆகியோர் உட்பட அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து சொந்த நிதியைக்கொண்டு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள், கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள், 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான குடிநீர், மின்சார இணைப்புக்கள், உலருணவு உதவிகள், சுயதொழில் ஊக்குவிப்புக்களை செய்துவரும் இந்த யஹியாகான் பவுண்டேசன் கடந்த கொரோனா அலையில் நிறைய உதவிகளை செய்துள்ளது. கல்முனை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு சாய்ந்தமருது பொலிவேரியன் பொது மைதானத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நவீன மைதானமாக உருவாக்கித்தர வேண்டும். மட்டுமின்றி சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் விளையாட்டு பூங்கா அபிவிருத்தி , கல்முனை சந்தங்கனி மைதானம் அபிவிருத்தி, கல்முனை மாநகரசபை கட்டிடம் என்பவற்றை நிர்மாணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது தேர்தல்காலங்களில் எங்களின் சொந்த நிதியிலிருந்து செலவழித்து, மாவட்டத்தின் பல மேடைகளிலும் பேசி அவருக்காக தேர்தல் செய்தவர்கள் என்ற உரிமையுடன் இந்த கோரிக்கைகளை அவருக்கு பகிரங்கமாக முன்வைக்கிறேன் என யஹியாகான் பவுண்டேசனின் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளரும் அக்கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஏ. சி . யஹியாகான் இந்நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த 04 வருடங்களாக தோடம்பழ அணியும், கடந்த பொத்துத்தேர்தல் வேட்பாளர் ஏ.எல்.எம். சலீமும், கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது உறுப்பினர்களும் நகரசபையை பெற தங்களால் முடிந்தளவு போராடியுள்ளார்கள். 13 ஆயிரம் வாக்குகளை சாய்ந்தமருது மக்கள் அவர்களுக்கு இந்த கோஷத்தை முன்வைத்து வழங்கியிருந்தனர். ஆனாலும் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது. கொழும்பில் அதிக காலத்தை செலவளிப்பவர்கள் என்ற அடிப்படையில் பல அமைச்சர்களுடனும் பல அரச அதிகாரிகளுடனும் நெருங்கிய உறவை கொண்டுள்ள எங்களினால் இந்த விடயத்தை கையாண்டு வெற்றிகான முடியும் என்று நம்புகிறேன். மு.கா வை அழிக்கவும், தலைவரை குற்றம் கூறிக்கொண்டும் இருப்பவர்கள் மு.கா தலைவர் போன்ற சர்வதேசம் அங்கீகரித்த திறமையான ஒருவரை காட்டட்டும். அவர்களால் அது முடியாது. சமூகத்திற்காக உழைப்பவர்கள் நாங்கள் என்றார்.

இந்நிகழ்வில் பிரதம உரை நிகழ்த்திய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், முன்னாள் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.ஏ.அப்துல் மஜீத் (முழக்கம் மஜீட்) பொதுவாழ்வில் இருப்பவர்கள் காலையில் கண்விழித்தால் சமூகத்தை பற்றி சிந்திக்க வேண்டும். சமூக நலனை பற்றி சிந்திப்பதுடன் அயலவர்களுடன் உறவை பேணுவதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. இறைவன் வழங்கிய செல்வங்களை தேவையுடைய மக்களின் நன்மைக்காக நாம் செலவு செய்ய வேண்டும். அதுவே தான் மறுமையில் நமக்கு பயன் தரக்கூடியது. அப்படியான ஒருவராக நான் ஏ.சி. யஹியாகானை பார்க்கிறேன். நீண்ட ஆயிலுடன் இந்த பணியை அவர் மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

அந்த வரிசையில் அண்மையில் காலமான எம்.ஐ.எம். முஹையதீன் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுகிறார். முஸ்லிம் சமூகத்தின் மீது பற்று கொண்ட அவர் 1975 காலப்பகுதியில் கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி என்ற கட்சியை உருவாக்கி 1983 இல் ஜூலை கலவரம் உருவானபோது தமிழ் மக்களின் பிரச்சினைகளின் போக்கு கடுமையானபோது முஸ்லிம் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்காக குரல்கொடுக்க இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் தூதுக்குழு இலங்கை வந்தது. அந்த இராஜதந்திர குழுவை சந்திக்க கிழக்கில் இருந்த 05 மக்கள் பிரதிநிதிகள் உட்பட இலங்கை முஸ்லிங்கள் யாருக்கும் வாய்ப்பளிக்கப்பட வில்லை. இவ்விடயத்தை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். கணக்கில் எடுக்காமல் நடந்து கொண்டார். இதனால் மாற்றுவழியை கையாள நினைத்த எம்.ஐ.எம். முஹையதீன் முன்னாள் கல்வியமைச்சர் பதியுதீன் மஹ்மூதுடன் இணைந்து இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்தினார். வடக்கு, கிழக்கு தமிழ் மொழித்தாயகம் என்பதில் உறுதியாக இருந்தவர் அவர். பல நூல்களை சமூக அவலத்தை கொண்டு எழுதிய எம்.ஐ.எம். முஹையதீன் முஸ்லிம் சமூகத்தின் குரலாக பல இடங்களில் ஒலித்தார்.

1986.08.05 அட்டாளைசேனை ஆசிரியர் கலாசாலையில் புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், சமூக நிறுவனங்கள் கூடி ஆராய்ந்த மாநாட்டில் முஸ்லிம் மாகாண கோசம் மேலெழுந்தது. அந்த மாநாட்டிலும் எம்.ஐ.எம். முஹையதீன் அவர்களின் பங்கு அளப்பரியது. " தென்கிழக்கு மாகாணம் தவறவிட்ட திரவியம்" அவரென்பேன். வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை. அதில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் முஸ்லிங்களின் தேவையாக இருந்தது கதையாகவே போகிவிட்டது. இந்த கருத்தை செயலுருவாக்கம் செய்ய பல போராட்டங்களை செய்தோம். விடுதலை புலிகள் எங்களை இலக்கு வைத்திருந்த காலத்திலும் தைரியமாக முன்னுக்குவந்து போராடியிருக்கிறோம். அதனால் அகட்டி வாழ்க்கை வாழ்ந்தது மட்டுமில்லாது என்னுடை நெருங்கிய குடும்ப உயிர்களையும் இழந்துள்ளேன்.

வடக்கும் கிழக்கும் தமிழர்களுக்குரியது மட்டுமல்ல. முஸ்லிங்களுக்கும் தான் எனும் எண்ணம்தான் எங்களுடையது. எங்கு, எப்போது பேசுவதாக இருந்தாலும் முஸ்லிங்கள் தவிர்க்கமுடியாத சக்தியாக உள்ளனர். மொழியினாலும், விகிதாசார தேர்தல்களினாலும் நிறைய இழப்புகளை கடந்த காலங்களில் சந்தித்துள்ளோம். கடந்த 1984 இல் ஜே.ஆரின் வட்டமேசையில் மலையக மக்களுக்காக 02 கட்சிகளும், தமிழ் மக்களுக்காக பல கட்சிகளும், சிங்கள மக்களுக்காக பல கட்சிகளும் இருந்தன. ஆனால் முஸ்லிங்ககளின் பிரச்சினைகளை பேச யாரும் இருக்கவில்லை. அதனால் முஸ்லிம் கட்சியின் தேவை வெகுவாக உணரப்பட்டது. அதனால் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக மாற்றினோம். மு.கா உருவாக்க முன்னர் கிழக்கில் பல கட்சிகள் இருந்தாலும் அவர்களினால் தொடர்ந்தும் கட்சிகளை கொண்டு நடத்த முடியாமல் இடையில் கலைத்தது விட்டார்கள். இந்த முஸ்லிம் காங்கிரஸை வளர்க்க நாங்கள் பட்ட கஷ்டம் சொல்லில் அடங்காதவை. உயிர்கள் முதற்கொண்டு சகலவற்றையும் இழந்து இந்த மக்கள் இயக்கத்தை உருவாக்கினோம். இப்போது முஸ்லிங்களுக்கு தனிக்கட்சி தேவையில்லையாம் என்கிறார்கள்.

என்னை விலைபேச பலரும் வந்தார்கள் நான் விலைபோகவோ அல்லது விலகிப்போகவோ மாட்டேன். 2002 இல் 10 பேருடன் அதாஉல்லா வெளியான போது நானும் கூட போகியிருந்தால் இந்நேரம் மு.கா தலைவராக அதாஉல்லா இருந்திருப்பார். அப்போது அவருடன் நிறைய முதலைகள் கூட இருந்தது. நாங்கள் சமூகத்தை பற்றி சிந்தித்தோம். 2004 இல் எங்களினால் அதிகாரம் பெற்ற றிசாத் எனக்கு தூது அனுப்புகிறார். மேல்தட்டு அரசியலை உடைத்து சாமானியனையும் அரசியலுக்கு கொண்டு வந்தவராக தலைவர் அஸ்ரப் இருந்தார். நானும் கவிஞர் மருதூர் கனியும் இணைந்து அவருடன் இந்த நாட்டையே சுற்றிவந்துள்ளோம். மு. காங்கிரஸிடம் முஸ்லிங்களுக்கான தீர்வுத்திட்டங்கள் எல்லாம் உள்ளது. இலங்கை அரசியலின் அத்தனை விடயங்ககளையும் நன்றாக அறிந்த இந்திய ராஜதந்திரி டாக்டர் ஜெய்சங்கர் தமிழ் தலைமைகளிடம் அண்மையில் மாகாண இணைப்பை கைவிட்டு மாகாணத்திற்கான அதிகாரத்தை கோருமாறு ஆலோசனை வழங்கியதாக அறிகிறேன். 1960 இல் தந்தை செல்வநாயகமும் கிழக்கில் முஸ்லிங்களுக்கு என்று ஒரு அரசு இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் எப்போதும் தலைவரை பலவீனப்படுத்தியவர்கள் கிழக்கை சேர்ந்த பிரமுகர்களே. எனக்கு முன்னிருந்த தவிசாளர் வஸீர் சேகுதாவூத் கட்சியில் இருந்து கொண்டே பசிலின் பக்கட்டுக்குள்ளும் இருந்தார். அந்த நிலை இன்றும் தொடர்கிறது என்றார்.

படம் : எம்.என்.எம். அப்ராஸ் (கல்முனை நிருபர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :