2022 முதல் காலாண்டில் இலங்கை எதியோப்பியாவாக மாறும்- எதிர்க்கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ரசாங்கம் 2022 ஜனவரியில் $1.5 Billion ( சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் ) கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இதனை எவ்வாறு செலுத்தப்போகின்றது என்பதற்கான எவ்வித வேலைத் திட்டங்களும் இல்லை. எனவே அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு நிறைவடையும் போது இலங்கையானது உலகின் மற்றொரு சோமாலியாவாகவும் அல்லது எத்தியோப்பியாவாகவும் மாற்றமடையும் என எதிர்பார்ப்பதிலும் தவறில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தினபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

நாட்டில் எந்தளவுக்கு பாரதூரமான நிதி நெருக்கடி காணப்படுகிறது என்பதை எழுத்து மூல அறிக்கையாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதாகவே இம்முறை பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்:-

ஆளுந்தரப்பின் ஒரு சில உறுப்பினர் நாட்டின் நிலை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும் உண்மையில் நாட்டில் காணப்படும் பாரிய நிதி நெருக்கடி நிலைமையை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச எழுத்து மூலம் மக்களுக்கு அறிக்கைப்படுத்தியுள்ளார். இது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பட்ஜெட் அல்ல. மாறாக அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் வரவு செலவுத் திட்டமாகும்.

பட்ஜெட் என்பது எதிர்காலத்தில் நாட்டில் எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்பதற்கான நிதி மதிப்பீடாகும். ஆனால் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் அவ்வாறானதல்ல. மாறாக அரசாங்கத்தின் சகாக்களின் சட்டை பைகளை நிரப்பும் அதே வேளை, நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

நாட்டை முன்னோக்கிச் கொண்டு செல்வதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இதில் உள்ளடக்கப்படவில்லை. 2021ம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 1வது வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட விடயங்களில் 10 சதவீதமேனும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாமலுள்ள நிலையில், அவற்றில் எதனையுமே கவனத்தில் கொள்ளாமல் தற்போதைய பட்ஜெட் வேறொரு திசையில் அமைந்துள்ளது.

2022ம் ஆண்டு முழு வருமானம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 400 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 100 கோடியாகக் காணப்பட்டது. ஆனால் இவ் வருடம் 72 ஆயிரத்து 300 கோடி இன்னும் அதிகரித்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதன் மூலம் இந்த வருமானத்தை ஈட்டுவதற்கு தீர்மானித்துள்ளனர். ஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடியால் இறுகியுள்ள அப்பாவி மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி 7 மூளைகளையுடைய நிதியமைச்சர் தனது வரவு செலவுத் திட்டத்தை நிரப்பிக் கொள்ள முயற்சிக்கின்றார்.

நிதியமைச்சர் அமெரிக்க பிரஜையாக இருக்கலாம். ஆனால் முன்பிருந்த அனைத்து அரச தலைவர்களும் நிதியமைச்சர்களும் இலங்கையில் பிறந்து இலங்கையிலேயே இருக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தனர். ஆனால் தற்போதைய நிதியமைச்சர் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொண்டு, குறுகிய அரசியல் நோக்கத்துக்காக செயற்படுகிறார் என்பது தெளிவாகிறது. இந்த கீழ்த்தரமான அரசியலிலிருந்து விலகி வரவு செலவுத் திட்டத்துக்கு அப்பால் நாட்டு மக்கள் நெருக்கடியின்றி வாழக்கூடிய வேலைத்திட்டங்களை பாராளுமன்ற விவாதத்தின் போதாவது முன்வைக்குமாறு. வலியுறுத்துகின்றோம்.

ஜனவரியில் பாரிய கடன் தொகையை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் $1. 5 Billion ( சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் ) கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. இதனை செலுத்துவதற்கு அரசாங்கம் என்ன வகையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்பதை எம்மால் கண்டு பிடிக்க முடியாது.

அடுத்த வருடத்தின் காலாண்டு நிறைவடையும் போது இலங்கையானது உலகின் மற்றொரு சோமாலியாவாகவும் அல்லது எதியோப்பியாவாகவும் மாற்றமடையும் என்பதை எதிர்பார்ப்பதிலும் தவறில்லை. எனவே இனியாவது தமது அரசியல் தேவைக்காக நிதியொதுக்குவதை நிறுத்தி விட்டு நாட்டை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :