பொருட்களின் விலை அதிகரிப்பே ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய நிவாரணம்:- ஹர்ஷ டி சில்வா கேள்வி!ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
நாட்டில் தற்போது $2.2 Billion ( சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் ) அந்நிய செலாவணி இருப்பே காணப்படுகிறது. இதில் $1.7 Billion ( சுமார் 38 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ) மாத்திரமே பயன்படுத்த முடியும் என்று மத்திய வங்கி தெரிவித் துள்ளது. இவ்வாறான நிலையில் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் $1.043 Billion ( சுமார் 23 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ) கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிக்கு என்ன தீர்வு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார்.


தற்போது மக்கள் ஒருவேளை உணவை மாத்திரமே உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ராணுவத்தினரை நியமித்து அவசரகால விதிகளை நடைமுறைப்படுத்திய போதிலும், அதன் ஊடாக எந்த செயற்றிட்டமும் வெற்றியளிக்கவில்லை என்பதை ஜனாதிபதிக்கு நினைவு படுத்த விரும்புகின்றோம் என்றும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் $5 Billion தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் $5 Billion கிடைக்கப் பெற்றதில்லை. கடந்த 2018ம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக $4.5 Billion என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக $2.4 Billion மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும்.

இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது $1.6 Billion செலவிடப்படுகிறது. தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொரோனா அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும்.

கொரோனாவின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொரோனா செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட
கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி கூறுவது உண்மைக்கு புறம்பானது. ஏனென்றால் கடந்த வருடம் கடனாக செலுத்திய $1 Billion 2010 இல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பெற்ற கடனாகும். அதேபோன்று இவ்வருடம் கடனாக செலுத்திய $1 Billion 2011இல் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டதாகும். இவ்வாண்டு ஜூலை மாதமளவில் கடனாக செலுத்திய $1 Billionனும் 2012 இல் தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்ட கடன் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் கழுத்தை பிடித்து இறுக்கி சேதனப் பசளையை பயன்படுத்துமாறு கூற முடியும் என்றும், எனினும் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும் ஜனாதிபதி கூறுகின்றார். அவர் நேரடியாக அவ்வாறு செய்யாவிட்டாலும் தற்போது விவசாயிகள் அவ்வாறானதொரு நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். ராணுவத்தினரை நியமித்து அவசரகால விதிகளை நடைமுறைப்படுத்திய போதிலும், அதன் ஊடாக எந்த செயற்றிட்டமும் வெற்றியளிக்கவில்லை என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். மக்களுக்கு தமது ஆட்சியில் நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். ஆனால் இன்று அரிசி, சீனி, பால்மா, சமையல் எரிவாயு என அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதுவா ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணம்? விவசாயத்தை மேம்படுத்துவதாகக் கூறி அதனை முழுமையாக சீரழித்துள்ளனர்.

நாட்டில் வருட இறுதியில் விவசாயம் பாரிய வீழ்ச்சியடையும் என்று கடந்த ஜூலை மாதமளவில் 104 விவசாயத்துறை நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை இன்று உண்மையாகியுள்ளது. நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை ஜனாதிபதி உணர வேண்டும். கடந்த வெள்ளியன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் தற்போது $2.2 Billion ( சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் ) மாத்திரமே அந்நிய செலாவணி இருப்பு காணப்படுவதாகவும், அதில் $1.7 Billion ( சுமார் 38 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ) மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் கடந்த மாதம் இறக்குமதி செலவு மாத்திரம் $1.7 Billion ( சுமார் 38 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ) ஆகவுள்ளது.

அத்தோடு ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் $1.043 Billion ( சுமார் 23 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ) கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிக்கு என்ன தீர்வு? தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இங்கு நீதியமைச்சர் அலி சப்ரி பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும்?

தற்போது மக்கள் ஒருவேளை உணவை மாத்திரமே உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்களுக்கான கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :