வாழைச்சேனையில் இருந்து செப்டெம்பர் மாதம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு; இரண்டு மாதமாகியும் திரும்பவில்லை!



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனையில் இருந்து செப்டெம்பர் மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு இரண்டு மாதமாகியும் கடலுக்கு சென்றவர்கள் திரும்பவில்லை என்றும், இவர்களை மீட்டுத் தருமாறும் கடலுக்கு சென்ற மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 26ம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற படகு இன்று புதன்கிழமை வரைக்கும் கரைக்கு வரவில்லை என்றும், அவர்கள் தொடர்பான திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கடலுக்கு சென்ற மீனவர்களின் உறவினர்கள் இன்று புதன்கிழமை ஓட்டமாவடி பாலைநகர் கிராமத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுறைகத்திற்கு கடந்த மாதம் வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடலுக்கு சென்றவர்கள் அந்தமான் தீவில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அவர்களை மிக விரைவில் மீட்டுத் தருவதாகவும் உறவினர்களிடம் உறுதியளித்துச் சென்றும் இன்றுவரை (24.11.2021) குறித்த நபர்கள் வரவில்லை என்றும், எங்களுக்கு கடற்றொழில் அமைச்சர், கடல்தொழில் திணைக்களம், பிரதேச மீனவ சங்கங்கள் உரிய நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வீனை பெற்றுத் தருவதில் அசமந்தப்போக்காக உள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த மீனவர்கள் அந்தமான்தீவில் உள்ளமை தொடர்பில் எங்களது தொலைபேசிக்கு புகைப்படங்கள் அனுப்பப்பட்டதுடன், தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் எங்களோடு அந்தமான்தீவில் உங்களது குடும்ப உறவினர்கள் உள்ளதாகவும் அவர்களை கண்ட பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்த நிலையில் மீண்டும் அந்த அழைப்பை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அழைப்பை ஏற்படுத்த முடியவில்லை. எமது உறவினர்கள் அவர்களிடம் உள்ள நிலையில் அவர்களுக்கு எங்களது தொடர்பு இலக்கம் வழங்கப்பட்டு எங்களோடு தொடர்பு கொண்டார்கள்.

அந்தமான்தீவில் இருந்து 00913192245530 மற்றும் 0115299623 என்ற இலக்கத்தின் மூலம் தொலைபேசி அழைப்பு வந்த தங்களது உறவினர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு விசாரணை செய்தனர். இதன் பின்னர் தொடர்பு இல்லாமல் உள்ளமைக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை என மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தமான்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்கள் தற்போது எங்கே? அந்தமான்தீவு கடல் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவினர்கள் அங்கிருந்து படகுடன் எங்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பில் மீனவர்கள் உள்ளனர் என்றும், பிறகு மீனவர்களின் தகவல் கிடைக்கவில்லை என்றும் அரசாங்கம் எங்களை ஏமாற்றுகின்றதா? அல்லது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் கரிசனை கொள்ளாமல் உள்ளாரா? என்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நான்கு மீனவர்களை நம்பி வாழும் நான்கு குடும்பம் தற்போது பாரிய கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றது. இரண்டு மாதங்களாக மற்றவர்களது உதவி மற்றும் கடன் வாங்கி தங்களது வாழ்க்கைச் செலவினை நடாத்தி வருவதாகவும், அத்தோடு காணாமல் போனவர்களது குழந்தைகள் தனது தந்தையை கேட்டு அழுதவாறு உள்ளதாகவும் அயலவர்கள் தூக்கி சென்று ஆறுதல் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கடற்றொழில் அமைச்சர், கடல்தொழில் திணைக்களம், பிரதேச மீனவ சங்கங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு மாதமான நிலையில் எங்களது உறவினர்களை உடனடியாக கண்டு பிடித்து தருமாறு அன்பாக கேட்டுக் கொள்வதோடு, உங்களது கதைகளை நம்பியே நாங்கள் இரண்டு மாதமாக எங்களது உறவுகள் மீண்டும் வருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நான்கு மீனவர் சென்ற குறித்த படகு நீலநிறம் என்றும் அதன் இலக்கம் IMUL A 0093 Tle என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.வி.ரிஸ்கான் (வயது 21), வாழைச்சேனையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான எம்.எச்.முஹம்மட் கலீல் (வயது 49), வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.றியாழ் (வயது 19), வாழைச்சேனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஹைதர் (வயது 41) ஆகியோர் சென்ற நிலையில் இன்று வரை கரை திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :