இலங்கையில் பத்து வீதமளவில் வாழும் முஸ்லிங்கள் நிதானத்துடன் அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் பெரும்பான்மை மக்களுடனும் இந்த நாட்டை ஆளும் அரசாங்கத்துடனும் முரண்பாடுகளை ஏற்பாடுத்தாது அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும் எனவும் முஸ்லிம்களின் வாக்குகளைப்பெற்ற முஸ்லிம் கட்சிகளுக்கு துணிச்சலாக அறிவுரை வழங்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களை உலமா கட்சி பாராட்டுவதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது, அண்மையில் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமரின் விருந்தின் போது சிலருடன் பேசி இறுதிக்கட்டத்தில் சந்திக்கும் வாய்ப்பை பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அச்சந்திப்பில் கொரோனா காரணங்களை முன்னிறுத்தி ஜனாஸா எரிக்கப்படும் விடயத்தை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கானுக்கு முஸ்லிம் எம்.பிக்கள் எத்திவைத்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரிக்கையை முன்வைத்தனர். அந்த கோரிக்கைக்கு பதிலளித்த பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், தான் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடிவிட்டதாகவும் சாதகமான நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
அது மாத்திரமின்றி இலங்கையில் 10 வீதமளவில் வாழும் முஸ்லிங்களாகிய நாங்கள் நிதானத்துடன் அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் பௌத்த மக்களுடனும் இந்த நாட்டை ஆளும் அரசாங்கத்துடனும் முரண்பாடுகளை ஏற்பாடுத்தாது அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும். நாங்கள் இணைக்க அரசியலை முன்னெடுப்பதே சிறந்த வழி என புத்திமதி சொல்லியுள்ளார். அது மட்டுமல்லாது சில முஸ்லிம் கட்சிகள் சியோனிச சக்திகளின் கீழ் செயல்படுவதாகவும் அவர் சொல்லியுள்ளமை நாம் பல காலமாக சொல்லிவரும் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துள்ளது.
முப்பது வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் மக்களின் ஓட்டுக்களால் சுகம் அனுபவிப்பது மட்டுமே இலக்காக கொண்டிருந்த நமது முஸ்லிம் கட்சிகளுக்கு அரசியலில் புதியவரான இம்ரான் கானின் இந்த அறிவுரை நமது நாட்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு செருப்பால் அடித்தது போன்று அமைந்துள்ளது. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை ஆதரவுள்ள ராஜபக்ஷ தரப்புடன் முஸ்லிம்கள் நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், தேர்தல்களில் ராஜபக்ஷாக்களை எதிர்த்து மக்களின் ஓட்டுக்களை கொள்ளையடிப்பது, பின்னர் வெற்றி பெறும் ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து சுகம் அனுபவிப்பதும், பின்னர் அடுத்த தேர்தல் வரும் போது காலை வாரி விட்டு ஓடிவிடுவதுமான அரசியலை செய்ய வேண்டாம் என்பதை பல வருடங்களாக உலமா கட்சி உபதேசித்து வருகிறது.
எமது உபதேசத்தையாவது கேட்காத முஸ்லிம் கட்சிகள் பாகிஸ்தான் பிரதமரின் புத்திமதியை சிரமேற்கொண்டு, இந்த அரசிடமும், தம்மால் தேர்தல் காலங்களில் பொய்களால் உசுப்பேற்றி ஏமாற்றப்பட்ட முஸ்லிம்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
0 comments :
Post a Comment