பொருளாதாரம் திட்டமிடப்பட்ட ஒரு முறைமையில் இருந்து கொண்டு வரப்பட வேண்டு -எஸ்.எம்.எம்.முஷாரப்

பைஷல் இஸ்மாயில் -

பொருளாதார முறைமை மாற்றம் என்பது ஆரோக்கியமான விடயந்தான் ஆனால் அது முறைப்படுத்தப்பட்ட, சரியாக திட்டமிடப்பட்ட ஒரு முறைமையில் இருந்து கொண்டு வரப்பட வேண்டுமென்பது எனது வேண்டுகோளாக இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு உரையாற்றினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

அத்தியவசியமற்ற பொருட்கள் தொடர்பான இறக்குமதித் தடை என்பது எமது நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவிதமான பாதிப்பை அல்லது நன்மையைக் கொண்டுதரும் என்பதை அறிந்து கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. அரசாங்கம் இதை எப்படி சரியாகக் கண்டுகொண்டு செல்லப்போகிறது என்பது தொடர்பான தெளிவு எங்களுக்கு கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நமது நாட்டில் 1970 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை மூடு பொருளாதாரமே காணப்பட்டது. சிரிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமராக இருந்த காலத்தில், இந்த மூடு பொருளாரத்தின் ஊடாக உற்பத்திப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கான ஒரு திட்டத்தை வகுத்தார்.

உற்பத்தி பொருளாதாரம் என்பது ஒரு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதில் ஒரு தவறும் இருக்க முடியாது. ஆனால் சரிவர ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முறைமையின் ஊடாக அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதா என்பதில் இருந்ததுதான் கேள்விகள் தொடங்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள். தங்களுக்கு தேவையான பொருட்களை, உள்ளூர் உற்பத்திகள் மூலமாகக் கண்டடைய முடியும் என்றிருந்த நம்பிக்கை வீணாகி, அத்தியாவசிய பொருட்களுக்காக, வரிசையில் நின்று கொண்டிருக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்பட்டது. அதுதான் நாம் கண்ட வரலாறு.

1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியினர், திறந்த பொருளாதார முறைமையை இந்த நாட்டில் அமல்படுத்தியிருந்தார்கள். 17 ஆண்டுகளின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க - ஜனாதிபதியாக வந்தபோது, அவருடைய தாய் கொண்டு வந்த மூடு பொருளாதார முறைமை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் இந்த திறந்த பொருளாதார முறைமையையே தொடர்ச்சியாக நடைமுறையில் நிறுத்தினார்.

77 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நம் நாட்டில் திறந்த பொருளாதார முறைமையே நடைமுறையில் இருக்கிறது. பொதுஜன ஐக்கிய முன்னணி 1977 இலிருந்து இன்று வரையிலும் திறந்த பொருளாதாரக் கொள்கை கொண்ட ஒரு நாடாகவே இலங்கை மிளிர்கின்றது. குறிப்பாகச் சொல்வதாக இருந்தால், தென்னாசியப் பிராந்தியத்திலே முதன்முறையாக திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டுவந்த ஒரு தேசமாக இலங்கை இருக்கின்றது.

எமக்குப் பின்பு இந்த நவ தாராளவாதக் கோட்பாட்டைப் பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டுவந்த சிங்கப்பூர், தாய்லாந்து, ஹொங்கொங் அதேபோன்று, தென்கொரியா போன்ற நாடுகள் முன்னேறியிருக்கின்ற அளவுக்கு, தென்னாசியப் பிராந்தியத்திலே முதலாவதாக இக்கொள்கையைக் கொண்டுவந்த நாடான இலங்கை முன்னேறவில்லையென்பது மிகவும் கவலைப்படக்கூடிய ஒரு விடயமாகும்.

இத்தகையதொரு சூழ்நிலையில்தான், தற்போது ஆட்சிபீடமேறியிருக்கின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இறக்குமதிப் பொருட்களுக்கான தடையை விதித்திருக்கின்றார். இதனை எப்படிப் பார்ப்பது? இலங்கையிலே புதியதொரு பொருளாதாரக் கொள்கை வகுப்பாக்கம் நடைபெற்றிருப்பதாகப் பார்ப்பதா? அல்லது 1929 ஆம் ஆண்டு உலகிலேயே பாரியதொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகள் தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிகளைத் தடை செய்தன. அவ்வாறானதொரு சூழல் இலங்கையில் தற்போது நிலவுகின்றது.

”கொவிட் 19” அதேபோன்று, ஏப்ரல் 21 தாக்குதல் போன்ற காரணங்களினால் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரப் பின்னடைவைச் சரிசெய்வதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கின்ற ஒரு விடயமாக இந்த இறக்குமதித் தடையைப் பார்ப்பதா? அல்லது நிரந்தரமாக ஒரு பொருளாதார முறைமை மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா?

எப்படியிருந்தாலும், இந்த நாட்டிலே 2009 வரை இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமையால்தான் திறந்த பொருளாதாரக் கொள்கையின் மூலம் எம்மால் பயனை அடைய முடியவில்லை என்றொரு வாதம் சிலரால் முன்வைக்கப்படுகின்றது. அப்படியானால், 2009 - 2020 வரையிலான காலப்பகுதியிலே இந்தத் திறந்த பொருளாதாரக் கொள்கையின்மூலம் நாம் எதனை அடைந்தோம் என்பது மிக முக்கியமானதொரு கேள்வியாகவிருக்கின்றது" என்ற கேள்வியையும் அவர் தொடுத்தார்.

இறக்குமதி தடைவிதிப்பின் மூலமாக, மாபியாக்களின் தோற்றங்களுக்கு வழிசமைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

"எமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவேண்டுமென்ற நோக்கத்தில் இந்த இறக்குமதித் தடை கொண்டுவரப்பட்டிருந்தால் அது உண்மையில் நன்மை பயக்கக்கூடியதாகவிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு இதனால் நன்மை கிடைக்கின்றது என்பதைவிட, இதுவேறொரு வகையான மாபியா இந்த இலங்கையில் உருவாவதற்கான ஒரு தோற்றத்தைக் காண்பிக்கின்றது என்பதை நான் இங்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

மஞ்சள் பற்றி இங்கு பலர் பேசினார்கள். இலங்கையிலே வெறுமனே 5000 விவசாயிகள்தான் மஞ்சளை உற்பத்தி செய்கின்றார்கள். அவர்களுடைய உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்காக மஞ்சள் மீதான தடை கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்று எடுத்துக்கொண்டால் இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் அதனை நுகர்பவர்களாக இருப்பதையும் அவதானிக்க வேண்டும். இன்று 2000 மெட்ரிக் தொன் அளவுதான் இலங்கையிலே மஞ்சள் உற்பத்தி காணப்படுகின்றது. எமது நாட்டைப் பொறுத்தளவிலே கிட்டத்தட்ட 5000 மெட்ரிக் தொன் மஞ்சள் உற்பத்தி தேவைப்படுகின்றது.

இத்தகையதொரு சூழ்நிலையில் மஞ்சள் மீதான தடைவிதிப்பானது விவசாயிகளை ஊக்குவித்திருக்கின்றதா? அல்லது கஞ்சா மாபியா, மணல் மாபியா, அரிசி மாபியா என்பதுபோல மஞ்சள் மாபியாவும் இந்த நாட்டிலே உருவாகுவதற்கு இதுஇடம் கொடுத்திருக்கின்றதா? என்பது சிந்திக்கப்படவேண்டிய ஒரு விடயமாக இருக்கிறது.

முறையாகத் திட்டமிடப்பட்ட பொருளாதார முறைமையின் அமுலாக்கத்திலேயே எமது நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யமுடியும் என்ற விடயத்தையும் வலியுறுத்திப் பேசினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :