மஹிந்தவை விரும்பும் மற்றும் விரும்பாத முஸ்லிங்களே நீங்கள் கடந்துவந்த பாதையை திரும்பி பாருங்கள் !!

நூருல் ஹுதா உமர்-

ரலாறு இலங்கை முஸ்லிங்களின் கசப்பான பக்கங்களையும் இனிப்பான பக்கங்களையும் மாறிமாறியே இலங்கைத்தீவில் எழுதி வந்துள்ளது. வெளிநாட்டு முகவர்களின் ஊதுகுழல்களை தவிர சமூக பற்றுள்ள முஸ்லிங்களின் காவலர்களாக இருந்து கொண்டே தான் வரலாறு நெடுகிலும் சிலர் பயணித்துள்ளார்கள்.முஸ்லிங்களை விட 61 வீதம் அதிகமாக வாழும் சிங்கள மக்கள் தொடர்ந்தும் இந்த தேசத்து முஸ்லிங்களுக்கான கௌரவத்தை வழங்கியே வந்துள்ளார்கள்.

அந்த கௌரவத்தை சீரழித்த பெருமை முஸ்லிங்களுக்கு இருக்கிறது எனும் கசப்பான உண்மையை சகித்துக் கொண்டே தான் கடந்து செல்ல வேண்டியுள்ளது. சிங்களவர்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் குறித்த சில குடும்பங்கள் மட்டும் வாழும் பிரதேசங்களும் இருக்கிறது. அங்கு அமைந்திருக்கும் ஜும்மா பள்ளிவாசல்களே அந்த சிங்கள மக்களின் மனதின் விரிசலை பறைசாற்றும். மூன்று சவ்வுகள் மட்டுமே தொழும் சனநெரிசல் கொண்ட ஊரில் 01 ஏக்கர் அளவில் பள்ளிகட்டி வாழும் சமூகம் நாங்கள். அந்த பள்ளிவாசலை கட்ட சிங்கள சகோதர்களினதும் உதவிகள் ஏதோ ஒருவகையில் இல்லமால் இல்லை.

இலங்கையில் வர்த்தகம் என்றால் முஸ்லிங்கள் தான். அவர்கள் இறைவனுக்கு பயந்து கலப்பிடமில்லாமல் மோசடிகள் இல்லாமல் கௌரவமிக்கவர்களாக வட்டியை தவிர்த்து வியாபாரம் செய்பவர்கள் எனும் நல்ல பெயர் இங்கு வாழ்ந்த முஸ்லிங்களுக்கு ஒருகாலத்தில் கிடைத்த கௌரவம். ஆனால் அவற்றை தலைகீழாக மாற்றி கலப்பிடம்,மோசடிகள், வட்டி, ஏமாற்று, கடத்தல் எல்லாவற்றிலும் முதலிடம் பெற்ற சமூகமாக மாறிப்போன நாம் அரசியலிலும் அதையேதான் தொடர்ந்தோம்.

ஆட்சி கதிரைக்கு யார் அமரபோகிறார் என்பதை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்ட சிறுபான்மையின சக்தியாக இருந்த முஸ்லிங்கள் இன்று ஒற்றைமரமாகிய தோப்புக்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவையே முஸ்லிங்கள் காலாகாலத்திற்கும் கடைபிடித்து வந்தனர். அதில் மு.கா ஸ்தாபகர் அஸ்ரப் விதிவிலக்கானார். அதனாலையே தான் பல பெயர் சொல்லும் அபிவிருத்திகள் இந்த நாட்டில் நிலைபெற்றது.

அதனில் முக்கால்வாசியாவது கடைபிடிக்க முயற்சித்த கலாநிதி ஹிஸ்புல்லா ஒட்டு அரசியலை கொண்டு காத்தான்குடிக்கு அடையாளம் கொடுத்தார். மாத்திரமில்லாது தேசிய காங்கிரஸை உருவாக்கிய ஏ.எல்.எம்.அதாஉல்லா தனக்கு அங்கீகாரம் கொடுத்த அக்கறைப்பற்றுக்கு அடங்களாக ஏனைய ஊர்களுக்கும் அளந்தும் சேவை செய்தார். துரதிஷ்டம் என்னவோ இவர்களை தவிர பாரியளவிலான சேவை செய்ய யாரும் ஈடுபாடு காட்டவில்லை. அல்லது வாய்ப்பு கிட்டவில்லை.அஷ்ரபின் காலம் முடிய சந்திரிக்காவின் ஆட்சியும் முடிய முஸ்லிங்களுக்கு இலையுதிர் காலம் பூத்தது. ஆனால் இன்று தளைக்கும் நாளை தளைக்கும் என்று காத்திருந்து காலம் கடந்ததுதான் மிச்சம்.

றிசாத் எனும் அகதி அரசியலில் துளிர் விட்ட காலமும் அதுவே. இப்போதுதான் அமைச்சரவைக்கு மஹிந்தவும் தலைமை ஏற்றார். பிரபாகரனும் உக்கிரம் பெற்றார். நாடு கொதிநிலையில் எப்போதும் இருந்த காலமிது.ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிங்களின் ஆதரவு 2005 இல் ரணிலுக்கு, 2010 இல் பொன்சேகாவுக்கு, 2015இல் மைத்திரிக்கு, 2020 இல் சஜித்துக்கு ஆனால் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது முஸ்லிங்கள் மட்டும்தான். தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் நின்றது சமூகம். வென்றது தலைவர்கள் என்பதுதான் முடிவு. மஹிந்தவை மேடைகளில் உச்சகட்டமாக எதிர்ப்பது. பேய்களுடன் ஒப்பிட்டு பிசாசிகளாக முத்திரை குத்துவது. இறுதியில் திருட்டு நிக்காஹ் மஹிந்தவுடன்.

சிங்கள சமூகத்தின் உச்சகட்ட பொறுமையை சோதித்தவர்கள் நாம். அவற்றையெல்லாம் கடந்து தேர்தல் கால எதிரிகளை அழைத்து முஸ்லிங்களும் இந்த நாட்டு மக்களே எனும் கௌரவத்துடன் இந்த நாட்டின் முக்கிய அமைச்சுக்களை அலங்கரிக்க வழிசமைத்தனர் மஹிந்த. வர்த்தகம், நீதி, கல்வி, நீர்வழங்கல், சுகாதாரம், விளையாட்டு என நாங்கள் காணாத அமைச்சுக்களே இல்லை எனலாம்.2005 இல் மஹிந்தவை எதிர்த்துவிட்டு அமைச்சுக்களை பெற்றோம். அப்போது சிங்கள மக்கள் எங்கள் மீது ஆத்திரம் கொள்ளவில்லை.

வர்த்தக சமூகமாக இருந்த முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்த யுத்தத்தை இராணுவத்தினது பல்லாயிரம் உயிர்களை இழந்து மஹிந்த அரசு வெற்றிகொண்டது. அப்போது அதிகமாக பாதுகாக்கப்பட்டது கிழக்கில் உள்ள முஸ்லிம் ஊர்களும் உயிர்களுமே.அப்போதும் நாங்கள் துரோகிகளாகவே மாறினோம். 2010 இல் மஹிந்தவை எதிர்த்துவிட்டு மீண்டும் அமைச்சுக்களை பெற்றோம். அப்போது சிங்கள மக்கள் எங்கள் மீது ஆத்திரம் கொள்ளவில்லை. அனுதாபப்பட்டார்கள். 2015 இல் மஹிந்தவை எதிர்த்துவிட்டு நல்லாட்ச்சி எனும் அரசை கொண்டுவந்து நாட்டை சீரழிக்க துணை நின்றோம்.

அப்போது சிங்கள மக்கள் உங்கள் மீது ஆத்திரம் கொள்ளவில்லை. இந்த நாட்டை களத்தில் நின்று வென்ற ஒருவனை ஜனாதிபதியாக்க ஒட்டுமொத்த சிங்கள சமூகமும் தயாரான போது நாங்கள் என்ன செய்தோம்.நாடு கடந்த தமிழீழ அரசின் முகவர்களாக சில முஸ்லிம் தலைவர்களும் அவர்களின் சில கூஜா தூக்கிகளும் இந்த நாட்டை பிழையாக வழிநடத்த கண்களை மூடிக்கொண்டு குழியில் வீழ்ந்த முஸ்லிம் சமூகம் இன்னும் விழிக்கவுமில்லை. பள்ளத்தில் இருந்து வெளியேறி உலகை நோக்க விரும்பவுமில்லை. அதற்கு நாடு கடந்த தமிழீழ அரசின் முகவர்களான முஸ்லிம் தலைவர்கள் விடவுமில்லை.

நாடு கடந்த தமிழீழ கோரிக்கையாளர்கள் அந்த கோரிக்கை இருக்கும் வரையே அந்த நாடுகளில் அகதிகளாக வாழ முடியும். யுத்தம் சுத்தமாக இல்லாமலாகி நாடு நிம்மதியாக மாறினால் அவர்களின் மினுங்கும் கோட்டு சூட்டுக்களை களைந்துவிட்டு கோமணங்களுடன் இலங்கை மண்ணில் கத்தரி பயிரிட நேரிடும். அதற்காகவேதொடர்ந்தும் சிங்கள அரசையும் சிங்கள மக்களையும் சூடாக்கும் அரசியலை பலமிக்க நாடு கடந்த தமிழீழ அரசு செய்யும். அதற்கான பலம் அவர்களிடமிருக்கிறது. ஆனால் முஸ்லிங்களிடம் என்ன பலன் இருக்கிறது. இலங்கை அரசியலில் யுத்தமுடிவுக்கு பின்னர் பல்வேறு மறைமுக அஜந்தாக்கள் நிறைவேறிக்கொண்டே தான் இருக்கிறது.

அந்த அஜந்தாக்களில் மிக முக்கியமானதாக இலங்கையில் இனவாத தீயை கெழுந்து விட்டு எரிய செய்வதும் அந்த தீயின் சுவாலையை அதிகரிக்க முஸ்லிங்களை விறகுகளாக பயன்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் வெளிநாட்டு பயணத்தில் இருந்த நேரத்தை பார்த்து இந்த நாட்டில் மிகப்பெரும் இனவாத அராஜகங்கள் நடைபெற்றது. வர்த்தகத்தில் கொடிகட்டிப்பறந்த இனமான முஸ்லிங்களின் கடைகள் தீக்கிரையாகியது. வர்த்தகங்கள் முடக்கப்பட்டு நிலை குலைக்கப்பட்டது. குட்டிகுட்டியாக இனவாத அமைப்புக்கள் இந்த நாட்டில் மெதுவாக தனது தலையை உயர்த்தியது. இப்படித்தான் உருவானது பொதுபல சேனா அமைப்பு. வெளிநாட்டு சக்திகளின் முகவராக இருந்து இந்த நாட்டில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கினர் அந்த அமைப்பினர்.

ஆயுத முனையில் தோல்வியை தழுவிய டயஸ்போரா எனப்படும் நாடுகடந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணிலையும் அவரின் நெருங்கிய சகாக்களையும் வைத்து இந்த நாட்டில் குழப்பத்தை உண்டாக்க பல்வேறு சதிகளை செய்தனர். அவர்களுக்கு கூட்டாளியாக பின்னாளில் மைத்திரியும் இணைந்து செயலாற்ற ஒரு முழுநீள படமே ஓட்டினார்கள். அப்பாவித்தனமாக முஸ்லிங்களும் அதை நம்ப வேண்டிய நிர்ப்பந்தம் டயஸ்போராவின் முஸ்லிம் முகவர்களினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் விளைவாகவே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது போன்று மஹிந்த அரசை கவிழ்க்க திட்டம் தீட்டி முஸ்லிங்களின் உணர்வுகளின் மீது கைவைத்தனர்.

சமாதானத்தையும் இந்த நாட்டின் அமைதியையும் விரும்பாத டயஸ்போரா அடங்களாக தீய வெளிநாட்டு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து பௌத்த துறவிகளை முன்னிறுத்தி இந்த நாட்டில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதன் விளைவாக பௌத்த துறவிகளை மரியாதை செலுத்த வேண்டிய பௌத்த கடமை இருந்தமையினால் அவர்களின் செயற்பாடுகளை கண்டுகொள்ளாத மஹிந்த அரசு முஸ்லிங்களின் சாபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்து கொண்டது. இந்த உண்மைகளை மேடைக்கு மேடை பேசிய ஏ.எல்.எம். அதாஉல்லா அமைச்சரின் கதையை கூட மக்களிடம் சென்றடையாமல் தீய வெளிநாட்டு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து காத்தது.துரதிஷ்டவசமாக மஹிந்த அரசு கவிழ்க்கப்பட்டு நல்லாட்சி அரசு ஸ்தாபிக்கப்பட்டது. 

அதை நல்லாட்சி அரசு என்பதை விட டயஸ்போரா அரசின் இலங்கை கிளை என்றே அழைக்கலாம். அவ்வாறு இயங்கிய டயஸ்போரா அரசின் இலங்கை கிளை எரிகிற இனவாத தீயை அணையாமல் தக்கவைக்க நெருப்புக்கு விறகுகள் தேவையேற்பட்டபோது தமிழர்களை பாதுகாத்து முஸ்லிங்களை விறகுகளாக அடுக்கியது.

அப்படி அடுக்கப்பட்ட முஸ்லிங்களை பாதுகாக்க எத்தனையோ குரல்கள் ஒலித்தாலும் அத்தனை குரல்களையும் அந்த டயஸ்போரா அரசின் இலங்கை கிளையும் ஏனைய தீய சக்திகளும் மழுங்கடித்தே வந்தது.அந்த வரிசையில் தான் உண்மைகளை அறிந்து தூரநோக்கு அரசியல் செய்யும் அதாஉல்லாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட அவரது எதிரிகளை ஹீரோவாக்க திட்டம் தீட்டப்பட்டு ஏனைய பிரதேசத்து பறவைகள் கூட அம்பாறைக்கு ஊடுருவ பணமூட்டைகளுடன் வந்திறங்கியது. குறுகிய காலத்தில் பணபலத்தையும் இன்னோரோன்ன விடயங்களினாலும் பல முட்டைகளை இட்டு அம்பாறையில் தங்கிக்கொண்டது அந்த பறவை.

எதிரிகளின் சக்திகளை வலுப்படுத்த அக்கரைப்பற்றில் இருக்கின்ற ஒரு முக்கிய நபரும் வாங்கப்பட்டிருக்க வேண்டும். அவரது கரைதல்கள் கடுமையாக சமீபத்தைய நாட்களில் இருப்பதை பார்க்கின்ற போது இந்த சந்தேகம் எழுகிறது.அரசின் நல திட்டங்கள், முஸ்லிங்களின் நன்மையான செயற்பாடுகள் முஸ்லிங்களின் சாதக விடயங்களின் போது அவரின் கரைதல்கள் கடுமையாகவே இருக்கிறது. இந்த அரசின் சார்பு நிலை எடுக்கும் யாராக இருந்தாலும் அவர் கடுமையாக கரைகிறார். 

அதாஉல்லாவின் எதிரி அந்நிய சக்திகளின் நண்பன் என்பது உலகறிந்த உண்மை. அதில் அவர் விதிவிலக்காக இருக்க வாய்ப்பில்லை. இவைகளெல்லாம் இப்படி இருக்க அவர்களின் திட்டம் சிங்கள மக்களினால் தோற்கடிக்கப்பட்டது எதிர்பாராத சம்பவமாக உள்ளது.

இந்திய பொதுத்தேர்தல் நடைபெற சில வாரங்களுக்கு முன்னர் இஸ்லாமிய பெயர்தாங்கிய ஒருவரை வைத்து அவரது சில உறுப்பினர்களை கொண்ட குழுவினரால் இந்த நாட்டில் மற்றுமொரு துயர சம்பவத்தை அரங்கேற்றியது இயற்கை எனும் கொடூர செயற்கை. பின்னாளில் தோண்ட தோண்ட புதையலின் அடியில் சூத்திரதாரியாக இருப்பவர்கள் எல்லோரும் அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். பொலிஸ் மா அதிபர், பிரதமர், ஜனாதிபதி, புலனாய்வு என எல்லோருக்கும் சம்பவம் நடக்க முன்னதாகவே விடயம் தெரிந்திருக்கிறது என விசாரணைகளில் தெளிவாகிறது. (ஊடக செய்திகளின் அடிப்படையில்.)

இந்த நாட்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக, கொடூரமானவர்களாக, வக்கிர மனம் கொண்டவர்களாக காட்ட வேண்டும் என்பது சர்வதேச தீய சக்திகளின் முகர்களான பேரினவாத சக்திகளின் அஜந்தா. இந்த ஈன செயலுக்காக சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் சோரம் போவது தான் கவலையான விடயம்.

 நாங்கள் முஸ்லிங்கள் என்பதையும் தாண்டி இந்த நாட்டை வெகுவாக நேசிக்கும் இலங்கையர்கள் என்பதை இந்த நாட்டுக்கு காட்ட டயஸ்போராவின் முஸ்லிம் அஜாந்தாகாரர்கள் விடவே இல்லை என்பது கசப்பான உண்மை.

இந்த காலகட்டத்தில் தான் 20 எனும் அம்சம் இலங்கை அரசியல் அரங்கில் வந்தது. இது தொடர்பில் ஆராய முன்னரே எதிர்க்கவேண்டும் எனும் பேச்சுக்கள் பரவலாக உலாவ காரணம் கட்டளை காற்றாலையில் எங்கிருந்தோ வந்திருக்க வேண்டும். இந்த விடயம் 156 பேர்களின் ஆதரவுடன் வென்றிருக்கிறது.கிழக்கு அரசியலில் அனுபவமிக்க மறைந்த அஸ்ரபுடன் நெருக்கம் கொண்ட ஹாபிஸ் நஸீர் பெரும் சீற்றத்துடன் முழங்கிவிட்டு பகிரங்கமாகவே தனது ஆதரவை வெளிக்காட்டினார்.

வழமையாக சமூக விடயங்களில் பிரதான பாத்திரம் வகிக்கும் ஹரீஸ் ஆதரவளித்தது பெரும் விடயமாக பார்க்க முடியாது. ஆனால் பைசால் காசிமும் தௌபிக்கும் ஆதரவளித்தது சிறப்பு.ம,கா தலைவர் றிசாத், மு.கா தலைவர் ஹக்கீம் எப்போதும் இந்தியாவுடன் நெருங்கிய உறவு கொண்டவர்கள். விடுதலை புலிகளை இல்லாமலாக்கியவர்கள் யாராக இருந்தாலும் இவர்களுக்கு அவர்கள் எதிரிகளே. தனது மகளின் திருமண விழாவில் பல கோடிகள் செலவழித்து இந்திய விருந்தினர்களை விமான பயணசீட்டு வழங்கி வரவழைத்து ஆடம்பர ஹோட்டல்களில் உயர்ரக விருந்து வழங்கி கௌரவிக்கும் அளவுக்கு இந்திய அரசியல்வாதிகளுடன் நட்பு கொண்டவர் மு.கா தலைவர் ஹக்கீம்.

அவரால் இந்தியாவின் சொல்லையோ அல்லது அவரது நெருங்கிய நண்பர் டயஸ்பொராவின் பிரதமர் ருத்ரகுமாரின் கட்டளையையோ மீற முடியாது என்பது அவரின் நிலைப்பாடு. தமிழீழ ஆதரவாளர் ஐயா கருனாநிதிக்கு அவர் நிகழ்த்திய இரங்கல் உரையே அவரின் விடுதலைப்புலிகள் மீதான பாசத்துக்கு சாட்சி.விடுதலை புலிகளை கடுமையாக விமர்சித்த தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவை தேர்தல் மேடைகளில் துளைத்தெடுத்த காணொளிகளே அவருக்கும் தமிழீழ புலிகளுக்கும் இருக்கும் பாசத்தை பறைசாற்றும். (யூடியூபில் இப்போதும் காணலாம்). தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் ஆதரவு வழங்க மறுத்த மஹிந்தவை தோற்கடிப்பதும் தமிழ் மக்களுக்கு நீதி பெற்று கொடுப்பதும் தான் தனது உயிர் மூச்சாக கொண்ட மு.கா தலைவர் ஹக்கீம் 2005-2020 வரை மஹிந்த அரசை நேரடியாக எதிர்த்து வருகிறார்.

இன்று அவர் 20 தை எதிர்த்ததும் அதனாலயே தான். தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி போராடும் தலைவர் ஹக்கீம் அவர் அறியவே முஸ்லிங்களை இனவாத தீயிக்கு விறகாக மாற்றிக்கொண்டிருக்கிறார். புத்தள மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்து அரசுக்கு ஆதரவளித்த அலி ஷப்ரி ரஹீம் எம்.பி பாராட்டப்பட வேண்டியவர். 

அரசில் கருணா, வியாழேந்திரன், பிள்ளையான் போன்ற தமிழ் பிரதிநிதிகளின் கை ஓங்குவதை கண்டு கல்முனையில் குடிகொண்ட தம்மின மக்களின் குரலுக்காக அரசுக்கு கரம்கொடுத்த ஹரீஸின் வீரம் கௌரவமிக்கது. பைஸாலின் கனவு வைத்தியசாலை விரைவில் திறக்கப்பட என்னுடைய பாராட்டுக்களும் பிரார்த்தனைகளும். திருமலை எம்.பி சகோதரர் எம்.எஸ். தௌபீக் அரசியலின் எதார்த்தம் தேர்ந்த மக்கள் பிரதிநிதியாக இன்று மாறினார். தனக்கு வாக்களித்த சிங்கள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முன்வந்த இசாக் ரஹ்மான் எம்.பி தேசத்தின் புதல்வராக வரலாற்றில் பதிவான நாளாக 20 இந் வாக்கெடுப்பு நாள் அமைந்தது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பரிதாப நிலைக்கு இப்போது தள்ளப்பட்டார். சிரேஷ்ட மற்றும் நீண்டகால அரசியல் அனுபவம் பெற்ற தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவின் பகிரங்க வேண்டுகோள்களையும், அறிவுரைகளையும் கேட்டிருந்தால் இந்நேரம் ராசா வீட்டு கதிரையாக கௌரவம் பெற்றிருக்கலாம். இருந்தாலும் காலம் அவருக்கு மருந்தாகி கௌரவம் பெறுவார். ஆனால் மீண்டும் மு.கா தலைவர் ஹக்கீம் மஹிந்தவுடன் இணைந்து முக்கிய அமைச்சை பெற எத்தனை நாட்கள் இருக்கிறது என்பதை எல்லோரும் இணைந்து எண்னுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :