எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். காலி தேவகொட பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21)இடம்பெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போது கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
SWRD பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி சுதந்திர கட்சியை தோற்றுவித்து முதன்முதல் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டபோது அவரால் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற முடிந்தது.
ஆனால் நாம் ஐக்கிய மக்கள் சக்தியை நிறுவி முதன்முதல் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு ஐம்பத்திநான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். அதுவும் நாம் தேர்தலை எதிர்கொண்டபோது எமக்கு தொகுதி அமைப்பாளர்கள் இல்லை. பிரதேச அமைப்பாளர்கள் இல்லை. எமது கட்சிக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு இருக்கவில்லை.
ஆகவே பிரதேச மற்றும் தொகுதி அமைப்பாளர்களை நியமித்து ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாக செயற்பட்டால் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய அரசியல் சக்தியாக உருப்பெறும். அவ்வாறான ஒரு கட்டமைப்பை நிறுவவே எமது தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கிராமங்கள் தோறும் விஜயம் செய்கிறோம்.
எதிர்வரும் காலங்களில் மூவின மக்களையும் இணைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒன்றை விரைவில் எம்மால் அமைக்க முடியும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment