சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் – ரூ.50 இலட்ச நன்கொடையுடன் அழகுபடுத்தல் திட்டம்: பிராந்தியத்தின் முன்னோடி பள்ளியாக மாற்றும் இலக்கு!



சாய்ந்தமருது மாளிகைக்காடு முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலை முழுமையாக அழகுபடுத்தி, ஆன்மிக அமைதி நிறைந்த சூழலில் இபாதத் செய்யக்கூடிய சிறந்த வழிபாட்டு மையமாக மாற்றும் நோக்குடன், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம், பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் உலமாசபை இணைந்து முன்னெடுத்துள்ள விசேட அழகுபடுத்தல் திட்டத்திற்காக, ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, 12.02.2026 அன்று பள்ளிவாசலின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் கூட்டம், பள்ளிவாசல் தலைவர், பைத்துஸ் சகாத் நிதியத்தின் தலைவர் மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக முக்கியஸ்தர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

தலைமை உரையாற்றிய அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக், “இந்தப் பள்ளிவாசல் வெறும் தொழுகைத் தலமாக மட்டுமல்லாது, ஆன்மிக முன்னேற்றம், கல்வி, சமூக ஒற்றுமை, மார்க்க வழிகாட்டல் மற்றும் சமூக சேவைகளுக்கான மையமாக விளங்க வேண்டும். அதற்காகவே, இதனை பிராந்தியத்தின் முன்னோடி பள்ளிவாசலாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், பள்ளிவாசலின் முற்றுப்புற கேட் வே (Gateway) புனர்நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முழுமையான நிதி ஆதரவை வர்த்தகர்களை நம்பியே முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பணிகள் ரமழான் பெருநாளுக்கு முன்னர் நிறைவு செய்து, திறந்து வைக்கப்பட வேண்டும் என்பதே தமது பிரதான இலக்கு எனவும் அவர் வலியுறுத்தினார்.

வர்த்தகர்களை நோக்கி உரையாற்றிய அவர், “எமது வர்த்தகம் முழுமையாக ஹலாலான முறையில் நடைபெற வேண்டும். ஹலாலான வருமானத்தில் உள்ள பரகத், நமது வாழ்க்கையிலும், குடும்பத்திலும், சமூகத்திலும் அல்லாஹ்வின் அருளை கொண்டு வரும். பள்ளிவாசல் வளர்ச்சியும், சமூக நலனும் வர்த்தகர்களின் தூய மனமும் நேர்மையான வர்த்தக முறையும்தான்” என உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய உலமாக்கள் மற்றும் நிர்வாகிகள், பள்ளிவாசலுக்குள் வருவோர் முழுமையான மன அமைதியுடன் இபாதத் செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என வலியுறுத்தினர்.

அதன்படி, முன் முகப்பு, உள் பகுதி, வெளிப்புற வளாகம், தொழுகை மண்டபம், பெண்கள் பகுதி, அபூழூ வசதிகள், கழிப்பறைகள், நுழைவாயில் மற்றும் கேட் வே உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் நவீன தொழில்நுட்பத்துடன், அழகிய வடிவமைப்பில் முழுமையாக சீரமைத்து அழகுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக, சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகள் சார்பில் ரூ.50,00,000 (ஐம்பது இலட்சம் ரூபாய்) நிதி உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது, இந்தப் பள்ளிவாசலின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

இந்த மகத்தான நன்கொடையை அறிவித்த வர்த்தக சங்கத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் அவர்களுக்கு, பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் உலமாக்கள் விசேட பாராட்டுக்களையும், துஆவையும் வழங்கினர்.

ரமழான் மாதத்தை முன்னிட்டு, பள்ளிவாசல் வளாகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, தாராவீஹ் தொழுகை, இஃப்தார் ஏற்பாடுகள், மார்க்க சொற்பொழிவுகள், சிறுவர் – இளைஞர் பயிற்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்தப் பணிகள் வெற்றிகரமாக நிறைவேற, உலமாக்கள், வர்த்தகர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் ஒற்றுமையான பங்களிப்பும் அவசியம் என கூட்டத்தில் ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பானது, சாய்ந்தமருது மாளிகைக்காடு முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலை ஆன்மிகம், சமூக சேவை, கல்வி மற்றும் ஒற்றுமையின் மையமாக மாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகப் பதிவாகியுள்ளது.







 

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :