ஊடகவியலாளர்களுக்கான தேசிய ஊடக கருத்தரங்கு – ஏ.ஐ யுகத்தில் ஊடக மாற்றம் குறித்து விளக்கம்



அஷ்ரப் ஏ சமத்-
ரச தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில், சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில தேசிய பத்திரிகைகளில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஊடக கருத்தரங்கு, 19.02.2026 அன்று ஊடக அமைச்சில் நடைபெற்றது. இக் கருத்தரங்கினை அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார ஆரம்பித்து வைத்தார்.

அவர் தனது உரையில், இலங்கையில் சுமார் 8,000 ஊடகவியலாளர்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு 5,500 ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே தகவல் திணைக்கள அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். ஊடகவியலாளர்களின் அறிவையும் திறனையும் நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்காக அனுபவமிக்க மூத்த ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகை ஆசிரியர் ஜெமிலா ஹுசைன், புலனாய்வு துறையில் ஊடகத்தின் பங்கு மற்றும் செய்திகளை பொறுப்புடன் எழுத வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.

லங்காதீப பிரதம ஆசிரியர் தனது உரையில், சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரவும் செய்திகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை அற்றவை எனக் கூறினார். பத்திரிகைச் செய்தி சிறிது காலம் எடுத்தாலும், அது உண்மை மற்றும் நம்பகமான செய்தியாகும். மக்கள் பத்திரிகைச் செய்திகளை அதிகம் நம்புகிறார்கள். சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அப்படியே பிரதிபலித்து செய்திகளாக்கக் கூடாது என்றும், பத்திரிகை வாசிப்பு பழக்கத்தை வளர்க்க ஊடகவியலாளர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்கள், சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவற்றின் தாக்கத்தால் பத்திரிகை வாசிப்பு குறைந்து வருவதாகவும், இதனை மாற்ற அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ஹிரான் அபேசேகர ‘ஏ.ஐ மற்றும் சமூக ஊடகம்’ குறித்து விரிவுரை ஆற்றினார். அவர் பேசுகையில், தாம் விஞ்ஞானத் துறையிலிருந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு மாறியதாகவும், தற்போது ChatGPT, Google Notebook LM போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் விரிவுரைகள் ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

பழைய முறையில் பேனாவும் நோட்புக்கும் கொண்டு சென்று குறிப்பெடுத்து செய்தி எழுதும் காலம் முடிவடைந்துவிட்டதாகவும், நிகழ்வு நடைபெறும் அதே நேரத்தில் செய்தி, புகைப்படம், வீடியோ ஆகியவை உலகம் முழுவதும் பரவுகின்றன என்றும் கூறினார். தற்போது அலுவலகத்திற்கே செல்லாமல், நேரடி ஒளிபரப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் செய்திகளை உருவாக்க முடியும் என விளக்கினார்.

அரச அலுவலகங்களும் டிஜிட்டல் மயமாகி வருகின்ற நிலையில், ஆன்லைன் சேவைகள், பிறப்புச் சான்றிதழ், விசா, விமான முன்பதிவு, பண பரிமாற்றம் உள்ளிட்ட பல சேவைகள் கைபேசியின் மூலம் எளிதாகச் செய்ய முடிகிறது என்றும் கூறினார்.

மேலும், பழைய கல்வி முறைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புகள் குறையக்கூடும் என்றும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இளைஞர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இன்றைய பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே ஸ்மார்ட்போனுடன் பழகுவதால், அவர்கள் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக, 45 நிமிடங்கள் நீளமான வானொலி நேர்காணலை, Google Notebook LM போன்ற கருவிகளின் மூலம் சில நிமிடங்களில் எழுத்து வடிவமாக மாற்றி, தேவையான மொழியில் தொகுத்துத் தர முடிகிறது என்றும் விளக்கினார்.

எதிர்காலத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றை விட, மக்கள் கைபேசி ஊடாகவே செய்திகளை அதிகம் பெறுவார்கள் என்றும், இலங்கையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக டிஜிட்டல் மயமாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இறுதியாக, சமீபத்தில் தமது பகுதியில் குப்பை சேகரிப்பு தாமதமான போது, வயது முதிர்ந்த ஊழியர்கள் கூட ஸ்மார்ட்போன், கூகுள் மேப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துல்லிய தகவல்களை வழங்கிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, தொழில்நுட்ப மாற்றத்திற்கு அனைவரும் தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :