அடுத்தவருக்கு உதவி செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு இருந்தால்தான் சமூகத்தில் உயர முடியும் என நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்துள்ள மத்திய முகாம் பிரதேசத்தில் "யுஎஸ்எய்ட்" நிறுவனத்தின் நிதி உதவியோடு சுவாட் நிறுவனம் முன்னெடுத்து வருகின்ற சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயற்பாடு வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வு இன்று(17) பிரதேச செயகத்தில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றும் போதே பிரதேச செயலாளர் இதனை தெரிவித்தார் தொடர்ந்து உரையாற்றும் போது,
வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொள்ளும் போது நாம் ஏன்? இந்த உதவிகளை பெறுகின்றோம் எனும் எண்ணம் இருக்க வேண்டும். கிடைக்கின்ற உதவியால் அதனை பெறுகின்றவர் நன்மையடைவது போன்று அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பனப்பாங்கையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்த வேலைத்திட்டம் ஊடாக எமது அடுத்த எதிர்கால சந்ததிகள் மத்தியில் நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கும் வகையில் இங்கு வந்திருக்கும் பயனாளிகள் ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும்.
இன்று அரசாங்கம் பல்வேறு உதவிகளை கிராம மட்டத்தில் வழங்கிவருகின்றன. அது சமூர்த்தி திட்டமாக இருக்கலாம் அல்லது நலநோம்பு வேலைத்திட்டமாகவோ கடன் வசதியாகவோ இருக்கலாம். இவைகள் எல்லாம் தொடர்ந்தும் உதவிகளை பெறுவதற்காக வழங்கப்படவில்லை. மாறாக இவற்றின் ஊடாக வாழ்வில் உயர வேண்டும். உயருவது என்பது அடுத்தவருக்கு நீங்கள் உதவி செய்பவராக மாறுவதாகும். தொழில் துறைகளில் வளர்ச்சி ஏற்படுவது போன்று மனப்பாங்கிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் பயாளிகளுக்கு இங்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர் .லதாகரன், நிறுவனத்தின் திட்ட அதிகாரி ரி.சத்தியலிங்கம், சுவாட் நிறுவத்தின் நிகழ்சித்திட்ட முகாமையாளர் கே.பிரேமலதன், அபிவிருத்தி உத்திஉத்தியோகத்தர் பி.தயாளராஜ், கிராமசேவை உத்தியோகத்தர் கே.மதன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment