கருணா அம்மானின் தேர்தல் விஞ்ஞாபனம்
காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா-அபிவிருத்திக்கான இணக்க அரசியலும் அரசியல் தீர்வுக்கான இராஜதந்திர அரசியலும் இணைந்த புதிய அணுகுமுறை என்பது சமகால தேசிய அரசியலின் தீர்வுக்கான புதிய அணுகுமுறையாகும் என ஜக்கிய தமிழர் சுதந்திர முன்னணியின் தலைவரும், திகாமடுல்ல மாவட்டத்தில் அ.இ.த.மகாசபை சார்பில் போட்டியிடும் தலைமைவேட்பாளருமான முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் எனஅழைக்கப்படும் கருணா அம்மான் தெரிவித்தார்.
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தமது கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக கேட்டபோது, அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அவ் விஞ்ஞாபனம் தொடர்பில் மேலும் விபரிக்கையில்:
கடந்த எழுபது வருடகாலமாகத் தேர்தல் வெற்றிகளை மட்டுமே இலக்காகக் கொண்டு வாக்குச் சேகரிப்பதற்காக மட்டுமே மக்களை உணர்ச்சியூட்டிய 'வாக்குப் பெட்டி' அரசியலால் கிழக்குத் தமிழர்கள் பெற்றுக் கொண்ட சமூகப் பொருளாதார நன்மைகள் எதுவுமேயில்லை. பதிலாக இழந்தவைகள்தான் ஏராளம். பத்திரிகை அறிக்கைகளும் தேர்தலுக்குத் தேர்தல் அரைத்த மாவையே அரைக்கும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களும் பாராளுமன்ற உரைகளும் மட்டுமே இதுகால வரையிலான தமிழர் தம் அரசியலைக் காவி வந்துள்ளன.
'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'இனி நாம் செயற்பாட்டுத் திறன்மிக்க அறிவுபூர்வமான அரசியலை நோக்கித் திசை திரும்ப வேண்டும். எஞ்சியிருப்பதைக் காப்பாற்றி இழந்தவற்றுள் சிலவற்றையாவது மீட்க வேண்டும்.
'சிலுசிலுப்புத் தேவையில்லை! பலகாரமே வேண்டும்!'அபிவிருத்திக்கான இணக்க அரசியலும் அரசியல் தீர்வுக்கான இராஜதந்திர அரசியலும் இணைந்த காலத்துக்கு ஏற்ற நடைமுறைச் சாத்தியமான புதிய அரசியல் அணுகுமுறையே எமது பாதை அதனை வெளிப்படுத்துவதே இத் தேர்தல் விஞ்ஞாபனம்.
2020—2025 ஐந்தாண்டு கால உத்தேச வேலைத்திட்டங்கள்.
நிர்வாக மற்றும் உள்ளுராட்சி அலகுகள்.
• கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை எல்லைகள் வகுக்கப்பெற்ற முழு அளவிலான பிரதேச செயலகமாகத் தரம் உயர்த்தல்.
• முன்னாள் மல்வத்தைக் கிராமசபைப் பிரதேசத்தையும் வீரச்சோலை மற்றும் வீரமுனைக் கிராமங்களையும் உள்ளடக்கியதாகப் புதிய தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவொன்றினையும் பின் அதனை அடிப்படையாகக் கொண்ட தனியான பிரதேசசபையொன்றினையும் தனியான பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தையும் உருவாக்குதல்.
• ஆலையடிவேம்புப் பிரதேச எல்லைகளை இல.453/19 திகதி12.05.1987 உடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையப் பொருந்துமாறு சீர்செய்தல்.
• முன்னாள் பாணமைப்பற்றுக் கிராம சபையின் கீழ் இருந்த பொத்துவில் மூன்றாம் குறிச்சியின் தெற்கு எல்லையைப் பிரிக்கும் எல்லையாக கொண்டு தற்போதைய பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவினை இரண்டாகப் பிரித்துக் கோமாரியை மையப்படுத்திய புதிய தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவொன்றினையும் ,பின் அதனை அடிப்படையாகக் கொண்ட தனியான பிரதேச சபை ஒன்றினையும் தனியான பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தினையும் உருவாக்குதல்.
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
• கோமாரிப் பிரதேசத்தில் முன்மாரிக் குளத்தையும் உள்ளடக்கி பாரிய 'மூங்கிலாறு' நீர்ப்பாசனக் குளம் நிர்மாணம்.
• கஞ்சி குடிச்ச ஆற்றுக் குளத்தை வட மூசாக் குளத்துடன் இணைப்பதற்குக் கஞ்சிகுடிச்சாற்றுக் குளத்தின் நீரேந்து பரப்பினூடாக விவசாயப் பாதை நிர்மாணம்.
• வட மூசாக் குளம் நிர்மாணம் மற்றும் நீர்ப்பாசனக் குடியேற்றத் திட்டம்.
• தாண்டியடி கோரக்களப்பு உவர்நீர் தடுப்புத் திட்டம். அணைக்கட்டுப் பால நிர்மாணம். • வட்டமடு மேய்ச்சல்த் தரை அபிவிருத்தியும் பால் சேகரிப்பு மற்றும் பால் பதனிடும் நிலையம் அமைத்தலும்
• கண்ணகிபுரத்தில் கால்நடை சினைப்படுத்தல் நிலையம்.
• தோணிக்கல் கண்ட விவசாயப் பூமிக்கு நீர்ப்பாசன வசதி அளிப்பதற்காக 'மேட்டாறு' அணைக்கட்டு நிர்மாணம்
• அன்னமலை, நாவிதன்வெளி, 7ஆம் கிராமம், 11ஆம் கிராமம், 15ஆம் கிராமம், சொறிக்கல்முனை, வீரச்சோலை ஆகிய மேட்டுநில விவசாயப் பிரதேசங்களுக்குக் கிட்டங்கி வாவியில் இருந்து நீர் வழங்கலுக்கான ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் .
• பொத்துவில் ஊறணி, விநாயகபுரம் மற்றும் பெரியநீலாவணையில் காய்கறித் தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்து நவீனமயப்படுத்தல்.
• கல்முனைக் கண்ட நீர்ப்பாசன வயல்களுக்கான வடிகால் புனரமைப்பு.
• காஞ்சிரங்குடாவில் உரக்களஞ்சியத்தை மீள நிறுவுதல்.
• தாண்டியடி – வில்காமம் – கஞ்சிகுடிச்சாறு விவசாயப் பாதை நிர்மாணம்
• அம்பாறை மாவட்டத்தில் பாரிய நெல் உலர்த்தும் நிலையம் களஞ்சியப்படுத்திச் சந்தைப்படுத்தும் வசதிகளுடன் நிர்மாணம்.
மீன்பிடி
• கோமாரியில் மீன்பிடிப் பயிற்சி கல்லூரி மற்றும் மீன் பதனிடும் தொழிற்சாலை அமைத்தல்.
• உமிரி அல்லது கோமாரியில் மீன்பிடித் துறைமுகம் அமைத்தல்.
• அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவித்தல் மற்றும் பொருத்தமான இடத்தில் வெளிச்சவீடு, ஐஸ்கட்டித் தொழிற்சாலை நிர்மாணம்.
• உள்ளுரில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவித்தல்
• களப்புப் பகுதியில் மீன், இறால் வளர்ப்பு பண்ணைகள் அமைத்தல்.
கைத்தொழில்
• பொத்துவில் ஊறணி மற்றும் மல்வத்தையில் பொருளாதார வலயங்கள் அமைத்தல் .
• தம்பட்டை, சாகாமம் மற்றும் சவளக்கடையில் ஆடைத் தொழிற்சாலை அமைத்தல்.
• ஆலையடிவேம்பு கைத்தறிச் சாலையை மீள இயங்க வைத்தல்
• சாகாமம், சவளக்கடை, மற்றும் வளத்தாப்பிட்டியில் அரிசி ஆலைகள் அமைத்தல்
• பாண்டிருப்பில் கனரக இயந்திரங்களுக்கான இயந்திர வேலைத் தளம் ஒன்றினை நிறுவுதல்.
• காஞ்சிரங்குடா போட்டாக்குளத்தில் மட்பாண்டத் தொழிற்சாலை நிறுவுதல்.
• திருக்கோயில் பிரதேச செயலகப் பரிவில் தெங்கு உற்பத்திப் பொருட்களை அடிப்படையாக்க் கொண்ட தொழிற்சாலை ஒன்றினை நிறுவுதல்
கல்வி
• கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களுக்குள் அடங்கும் தமிழ்ப் பாடசாலைகளை உள்ளடக்கிய புதிய தனியான 'காரைதீவு' கல்வி வலயம் அமைத்தல்.
• தங்க வேலாயுதபுரத்தில் விவசாயக் கல்லூரி அமைத்தல்.
• காரைதீவில் தொழில்நுட்பப் பூங்கா .
• திருக்கோவிலில் தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரி நிறுவுதல்.
சுகாதாரம்.
• கோமாரி ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாகத் தரமுயர்த்தல்.
• அலிக்கம்பை மற்றும் ஏனைய பின்தங்கிய கிராமங்களில் புதிதாக ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையங்களை நிறுவுதல்.
• திருக்கோயில் ஆதாரவைத்தியசாலையை நவீன வசதிகளுடனான மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர்த்தல்.
• பனங்காடு மற்றும் மல்வத்தைப் பிரதேச வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து தரமுயர்த்தல்.
• காரைதீவு பிரதேச வைத்தியசாலையைத் தரமுயர்த்தி அபிவிருத்தி செய்தல்.
போக்குவரத்து
• கிட்டங்கித் தாம்போதியைப் பாலமாக மீள் நிர்மாணம்.
• தம்பிலுவில் முனையக்காடு முனைவீதியில் ஊரக்கைக் கண்ட விவசாயப் பூமிக்குச் செல்வதற்கான கிராமியப் பாலம் நிர்மாணம்.
• பாணமை – உகந்தை முருகன் கோயில் 'கார்பட்' வீதி நிர்மாணம்.
கலாசாரம்
• சங்கமன் கண்டியில் ஆயிரம் பேர் தங்கக்கூடிய முழு வசதிகளுடனான கதிர்காம யாத்திரிகர்களுக்கான யாத்திரை மடம் நிர்மாணம்.
• சங்கமன் கண்டியை மையமாக வைத்து குருமார் பயிற்சி நிலையம் அமைத்தல்.
• கல்முனை நகரில் 'சுவாமி விபுலானந்தர்' பெயரில் கலாசார மண்டபம் நிர்மாணம்.
பொதுவசதிகள்
• கண்ணகிபுரம், கவடாப் பிட்டி, மகாசக்தி கிராமம்,புளியம்பற்று, பனங்காடு, றொட்டை, வில்காமம் போன்ற கிராமங்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தல்.
• பெரியநீலாவணையில் சுனாமி வீட்டுத்திட்டக் கட்டிடத் தொகுதிகளை முழு அடிப்படை வசதிகளுடன் புனரமைத்தல்.
• பெரியநீலாவணை, தம்பிலுவில் முனையக்காடு ஆகிய இடங்களில் பொது விளையாட்டு மைதானம் நிர்மாணம்.
• திருக்கோயில் மெதடிஸ்த்த மிசன் தமிழ் மகாவித்தியாலையத்துக்குப் பொது விளையாட்டு மைதானம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.
• திராய்க்கேணியில் பொதுமயானம் அமைத்தல்
• சிறிவள்ளிபுரம் (அலிக்கம்பை) மற்றும் புதுவளத்தாப்பிட்டி ஆகிய இடங்களில் உபதபாலகங்களை நிறுவுதல்.
• அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரத்தில் பொதுப் பொழுது போக்குப் பூங்கா அமைத்தல்
• பெரியநீலாவணையில் பொது நூலகம் நிறுவுதல்
ஏனையவை
• பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ளடங்கிய அறுபதாம் கட்டையில் 300 வீடுகள் அடங்கிய 'கனகர்' கிராமம் மீள் குடியேற்றத் திட்டம்.
• கோமாரிப் பிரதேசத்தில் 'செல்வபுரம்' சுற்றுலாத்துறை மையம்.
• தங்கவேலாயுதபுரத்தில் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் நிறுவப் பெற்றுள்ள எல்லைக் கற்கள் தொடர்பாக மீள்நிர்ணயம் செய்தல்.
• ஆலையடிவேம்புப் பிரதேச குப்பை அகற்றல் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் கழிவு முகாமைத்துவம் மற்றும் சேதனப்பசளை தயரிக்கும் நிலையம் நிறுவுதல்.
• காட்டு யானைகளின் தாக்கம் உள்ள இடங்களில் யானைவேலி அமைத்துக் கொடுத்தல். (உதாரணம் - அலிக்கம்பை, கண்ணகி கிராம ம், கவடாப்பிட்டி மற்றும் ஏனைய தேவையான இடங்கள்)
• பொதுவான நாளாந்த செயற்பாடுகள் (உடனடி மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்கள்)
• கடந்த காலங்களில் சூறாவளி, சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்று இன்னும் இயல்பு வாழ்க்கை நிலைக்குத் திரும்பாத தமிழ்க் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அத்தகைய குடும்பங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பக் கூடிய அத்தனை வாழ்வாதார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்..
• யுத்த காலத்தில் கணவர்மாரையும், உழைக்கும் ஆண் மக்களையும் இழந்து அவதியுறும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள்.
• புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு உட்பட அடிப்படை வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
• யுத்தத்தில் இறந்த போராளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார வசதிகள் உட்பட உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல்.
• பெற்றோரை இழந்த அனாதைப் பிள்ளைகளின் கல்வி வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான தொழில் வாய்ப்பு வசதிகள்.
• உழைக்கும் பிள்ளைகளை இழந்த வயோதிபப் பெற்றோர்களுக்கான பராமரிப்புத் திட்டங்கள்.
• இடம்பெயர்ந்து இன்னமும் மீள் குடியமராத அகதிக் குடும்பங்களை மீண்டும் அவர்களது பழைய இடங்களில் குடியமர்வதை விரைவு படுத்தல்.
• மீள்குடியேறியும் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பாத ஏழைக் குடும்பங்களை சமூக பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல்.
• வேலைவாய்ப்பற்றிருக்கும் இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரச, அரசசார்பற்ற, தனியார் நிறுவனங்களில் மற்றும் சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
• அவயவங்களை இழந்து உடல் ஊனமுற்றவர்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சமூகநல மேம்பாட்டுத் திட்டங்கள்.
• முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களில் தொழில் புரிகின்ற தமிழ் யுவதிகளுக்குத் தமிழ்ப் பிரதேசங்களிலேயே தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
• சொந்தக் காணியோ அல்லது வீடோ இல்லாத குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அரசாங்கக் காணியும் வீடும் பெற்றுக்கொடுத்தல்.
• அரசியல் கைதிகளின் விடுதலைக்கான துரித நடவடிக்கைகள்.
• காணாமலாக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக மனிதாபிமான மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் நிலைமாறுகால நீதியையும் நிவாரணங்களையும் பெற்றுக் கொடுத்தல்.
• வன்செயலால் மற்றும் காட்டு மிருகங்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான பொருத்தமான நிவாரணம் மற்றும் நட்ட ஈட்டுக் கொடுப்பனவு திட்டங்கள்.
• யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட கிராமியப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல்.
• தமிழ்ப் பிரதேசங்களில் நலிவுற்றிருக்கும் மீன்பிடி மற்றும் விவசாயத் தொழில்களை மேம்பாடடையச் செய்தல்.
• பாரம்பரியக் குடிசைக் கைத்தொழில்களையும் மற்றும் ஏனைய குடிசைத் தொழில்களையும் சிறு வர்த்தக முயற்சிகளையும் ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள்.
• நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு சிறுஅணைக்கட்டுக்கள் மற்றும் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் நிர்மாணம்.
• அரசகாணிகளில் குடியிருப்பு மற்றும் விவசாயங்களை மேற்கொள்பவர்கள் எதிர்நோக்கும் அனுமதிப்பத்திரம் மற்றும் உறுதிப் பிரச்சினைகளை தீர்த்துக் கொடுத்தல்.
• கடந்தகாலங்களில் தமிழ்பிரதேசங்களிலிருந்து வேறு பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லப்பட்ட அரச அலுவலகங்களை மீளவும் அதே இடங்களுக்குக் கொண்டு வருதல்.
இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு
முதற்கட்டம்: தற்போதுள்ள 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அர்த்தமுள்ள விதத்தில் முழுமையாக அமுல் செய்தல்.
இரண்டாம் கட்டம்: 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் கீழான அதிகாரப் பகிர்வில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கும் அவசியமான மேலதிகமான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்குமான அரசியல் அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாகாணசபை முறைமையை மேலும் வலுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் அதற்கான அரசியல் உபாயங்களை வகுத்து நாம் செயற்படுவோம்.
இது தான் எனது தேர்தல் விஞ்ஞாபனம். மேற்கொண்டு காலதேச வர்த்தமானங்களுக்கமைவாக அவ்வப்போது எழும் பிரச்சினை தேவைகளுக்கமைவாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
எனது வெற்றி உறுதியாக்கப்பட்டுவிட்டது. மக்கள் ஏலவே தபால்மூல வாக்களிப்பில் ஆணை தந்துவிட்டார்கள். எனவே வெற்றியடைந்ததும் உடனடியாக அம்பாறை மாவட்டமெங்கும் இருக்கக்கூடிய புத்திஜீவிகள் கல்விமான்கள் துறைசார் விற்பன்னர்கள் அனைவரையும் இணைத்து அபிவிருத்திக்குழுவை உருவாக்கி அதனூடாக விஞ்ஞாபன வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சித்தமாயுள்ளேன். அனைவரும் ஒத்துழைத்தால் உங்கள் வாழ்வும் இருப்பும் சிறக்கும். என்றார்.
0 comments :
Post a Comment