நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் தலைமைகளை தோற்கடிக்க ராஜபக்ஸ அரசாங்கம் சதிகளை செய்து கொண்டிருக்கிறது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து நேற்றிரவு (29) ஓட்டமாவடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதத்தைக் கக்கி, மதவாதத்தைக் கக்கி அரசியல் செய்கின்ற கலாச்சாரம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சதிகளை செய்ய இந்த அரசாங்கம் திட்டமிடுகிறது. அத்தோடு என்னை கைது செய்து சிறையில் அடைக்க சதிகளை செய்கிறார்கள்.
ஏனென்றால், என்னையும் தோற்கடித்து இந்தக் கட்சியையும் இல்லாமல் செய்தால்தான் இந்த ராஜபக்ஸ அரசாங்கம் விரும்பியதை செய்ய முடியும் என்பதற்காகத்தான் திட்டங்களையும், சதிகளையும் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த சமூகம் தெளிவாக இருந்து செயற்பட வேண்டிய தேவைப்படு இருக்கிறது.
அவர்கள் எமது ஜனாஸாக்களை எரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இது தொடர்பாக நாங்கள் அரசாங்கத்திடம் கெஞ்சிக் கேட்டோம் ஆனால் அவர்களிடத்தில் இரக்கமில்லை. அதனால் நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அவர்கள் முஸ்லிம் சமூகத்துடைய கஷ்டத்திலும் துன்பத்திலும் வேதனைகளிலும் இன்பம் காண்கிறார்கள்.
எனவே சின்னச் சின்ன காரணங்களுக்காக பிரிந்து நின்று பழிவாங்கும் காலமல்ல நமது சமூகத்துக்காக குரல் கொடுக்க கூடிய அனுபவம் கொண்ட ஆளுமை மிக்க உங்கள் அமீர் அலியை நீங்கள் வெற்றி பெறச் செய்யவேண்டும். உங்களுடைய தலைமை ரிஷாத் ஆசைப்படுகின்றார், எதிர்பார்க்கின்றார்,கல்குடா சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறார் இந்த அமீர் அலி அவர்கள் அடுத்த பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று இந்தத் தலைமை எதிர்பார்க்கிறது என்றார்.
0 comments :
Post a Comment