ஜனாதிபதி கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு விகிதாசாரஅடிப்படையில் உறுப்பினர்களை நியமியுங்கள்.காரைதீவு பிரதேசசபை அமர்வில் தவிசாளர் ஜெயசிறில் வேண்டுகோள்.


காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதி தொல்லியல் செயலணிக்கு கிழக்கின் சனத்தொகை விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களை நியமிக்குமாறு காரைதீவுப் பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்தார்.

காரைதீவு பிரதேசசபையின் 29வது மாதாந்த சபை அமர்வு நேற்று(13) திங்கட்கிழமை சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் கூறுகையில்:

கொரோனா காலகட்டத்தில் இத்தொல்லியல் செயற்பாடு அவசியமா? என்கிற கேள்வி எழுகின்ற அதேவேளை அவ்வணியில் நியமிக்கப்பட்டுள்ள 11பேரும் சிங்களபௌத்தர்களாவர். பலத்த எதிர்ப்புகளின்பின் ஒப்புக்காக தமிழ்முஸ்லிம் இருவரை நியமிப்பதன்மூலம் அது நிவர்த்திக்கப்படாது. எனவே கிழக்கின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும் என ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பலவருடகாலமாக எமது மயானத்திற்கு மின்சாரம் பெறும் செயற்பாட்டில் நான் பல இடர்பாடுகளைச்சந்தித்து வந்தமை இச்சபை தெரிந்ததே. அனைத்தையும் இச்சபையில் தெரிவித்தவன் என்றவகையில் இன்று அந்நோக்கம் நிறைவேறியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் இதேபையில் தெரிவிக்கிறேன். இ.மி.சபைக்கும் நன்றிகள்.

இதேவேளை இன்று வந்துள்ள புதிய உறுப்பினர்கள் இந்தமண்ணுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவீர்களென்ற நம்பிக்கையுள்ளது.உங்களை மனமார வரவேற்கின்றேன். என்றார்.


புதிய இரு உறுப்பினர்களின் வருகை.

முன்னதாக சபைக்கு சுயேச்சை அணியின் சார்பில் நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்களான எஸ்.சசிக்குமார் கே.குமாரசிறி ஆகியோர் வருகைதந்தனர். அவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் சகல உறுப்பினர்களாலும் வரவேற்புடன்கூடிய வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டன.

கடந்த 2018உள்ளுராட்சி தேர்தலில் மீன்சின்னத்தில் சுயேச்சைக்குழு சார்பில் தெரிவான ஆ.பூபாலரெத்தினம் இரா.மோகன் ஆகியோர் தாமாக விலகிக்கொண்டதன் காரணமாக மேற்படி புதிய உறுப்பினர்கள் நேற்று சமுகமளித்திருந்தனர்.

புதிய உறுப்பினர் எஸ்.சசிக்குமார் கன்னியுரையாற்றுகையில்: 'இனமத பேதம் கடந்து இந்தமண்ணிற்கும் மக்களுக்கும் விசுவாசமாக சேவையாற்றுவேன்' என்றார்.

புதியஉறுப்பினர் கே.குமாரசிறி கன்னியுரையாற்றுகையில்: 'இச்சபை சிறப்பாக செயற்படுகிறது. நான் த.ம.வி.புலிகள் கட்சிசார்பாக சுயேச்சை அணியில் போட்டியிட்டு வந்துள்ளேன். சபையினால் எனக்குக்கிடைக்கும் மாத வருமானம் முழுவதையும் கல்விக்காக செலவழிப்பேன்.இது மக்களுடைய பணம் எனவே மக்களுக்காகவே செலவுசெய்வேன்.' என்றார்.

வைத்தியசாலை அபிவிருத்திக்குழுச்செயலாளர் மீதான கண்டனம்.

வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக காரைதீவு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் செ.இராசையா சபைக்கு அனுப்பிய கண்டனக்கடிதம் தொடர்பில் தவிசாளர் தொடக்கம் உறுப்பினர்கள் அனைவரும் காரசாரமாக உரையாற்றியதோடு கண்டனங்களையும் தெரிவித்தனர்.

விடயத்தில் சம்பந்தப்பட்ட பிரதேசசபை த.தே.கூ. உறுப்பினர் த.மோகனதாஸ் உரையாற்றுகையில்:

ஒரு வருடத்திற்கு ஒருதடவை ஊருக்கு வரும் ஒருவரை செயலாளராக வைத்திருப்பது அக்குழு செய்த முதல் தவறு. அவரொரு முன்னாள் தவிசாளராகவிருந்தும் நடைமுறை தெரியாமல் கீழ்த்தரமாக தலைவரின் ஒப்பமில்லாமல் அவரே தன்னிச்சையாக 'கௌரவம்' தெரியாமல் இக்கண்டனக்கடிதத்தை அனுப்பியுள்ளார். அவர் அரசியல் செய்கிறாரா? உடனடியாக செயலாளர் பதவியிலிருந்து விலக்கி இதற்கெதிராக சுகாதாரதலைமைகளிடம்கூறி நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.

புதிய உறுப்பினர் கே.குமாரசிறி உரையாற்றுகையில்: 'கௌரவ' என்றுவிழிக்கவேண்டிய இடத்தில் '|திரு' என்றும் மட்டும் தவிசாளரையும் உறுப்பினரையும் விழித்தமை கண்டனத்திற்குரியது. வைத்தியசாலையில் எமது சபை ஏன் தலையிடமுடியாது? எடுத்ததற்கெல்லாம் வைத்தியசாலையை மூடுவதும் பொலிசுக்குப் போவதும் கேவலமானது. என்றார்.

ஸ்ரீல.மு.கா. மூத்த உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் பேசுகையில்:
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் அப்பிரதேசத்திற்குள் நடக்கின்ற நல்லது கெட்டது இரண்டுக்கும் தாராளமாக தலையிடலாம். அதற்குத்தான் மக்கள் எம்மைத் தெரிவுசெய்துள்ளார்கள். தவிசாளர் உறுப்பினர்களுக்கான கௌரவம் சகலராலும் மதிக்கப்படவேண்டும். சம்பந்தப்பட்ட செயலாளரை உடனடியாக நீக்கி வைத்தியஅதிகாரி தொடர்பில் சுகாதாரதலைமைகளுக்கு சபையால் கடிதம்எழுதவேண்டும். என்றார்.

அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினர் முஸ்தபா ஜலீல் பேசுகையில்:
வெளியூரிலிருந்துகொண்டு இங்கு செயலாளராக இப்படி கீழ்த்தரமாக செயற்படுவதை கற்றறிந்த காரைதீவில் ஏன் அனுமதிக்கிறார்கள்? மக்களுக்குத்தெரியாதா? தலைவரான வைத்தியஅதிகாரியின் கையொப்பம் இல்லாமல் தன்னிச்சையாக 'கௌரவ' என்று விழிக்காமல் கடிதம் எழுதியது பச்சைப்பிழை. இதனையாக மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். என்றார்.

மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் எ.ஆர்.எம்.பஸ்மீர் உரையாற்றுகையில்:
கொரோனா காலகட்டத்தில் 24மணிநேரமும் சேவையாற்றவேண்டிய வைத்தியசாலையில் 12.30 அதுவும் பட்டப்பகலில் நோயாளியை கவனிக்கமுடியாது என்று சொல்வது முறையா? செயலாளர் முன்னாள் தவிசாளராக எப்படி செயலாற்றியிருப்பார் என்பது இப்போது புரிகிறது.அதுதான் 2வருடத்துள் துரத்தப்பட்டிருக்கிறார். உடனடியாக இதுவிடயத்தை சுகாதார தலைமைகளுக்கு எத்திவைத்து நடவடிக்கைஎடுக்கவேண்டும். என்றார்.

ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர் மு.காண்டீபன் உரையாற்றுகையில்;
சிறிய பிரச்சினைக்கு மக்களுக்கான அம்புலன்சை எடுத்துக்கொண்டு 3மணிநேரம் பொலிசில் அலைவது கற்றறிந்தவர் செய்யும் வேலையா? குறித்த உறுப்பினரை அணுகி கலந்துரையாடியிருக்கவேண்டும். பிரதேசசபைக்கு வைத்தியசாலையில் தலையிட அதிகாரமுள்ளது. ஊரில் இல்லாத செயலாளர் குறித்த உறுப்பினரிடம் மன்னிப்புகேட்வேண்டும். என்றார்.

இறுதியாக தவிசாளர் கே.ஜெயசிறில் உரையாற்றுகையில்:

எமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள அனைத்து நிறுவனங்களது முறையான முறைகேடான அனைத்துச்செயற்பாடுகளிலும் தலையிட பிரதேசசபைக்கு பூரண அதிகாரமுள்ளது. காரைதீவு வைத்தியசாலை பற்றி அடிக்கடி முறைப்பாடுகள் வருகின்றன. அபிவிருத்திக்குழு கூடுவதில்லை. கேட்டால் செயலாளர் ஊரில் இல்லாத காரணத்தினால் கூட்டத்தை கூடுகிறார்களில்லை என வைத்தியர்கள் கூறுகின்றனராம்..

ஒரு சபைக்கு கடிதம் எப்படி எழுதுவது என்று முன்னாள் தவிசாளரொருவருக்கு தெரியாமலிருப்பது அவமானம்.தவிசாளராகஇருந்தபோது தனது வாகனத்திற்கென மக்களின் 5000ருபா பணத்தை மாதாமாதம் வாடகையாகப்பெற்றவர்தான் அவர்.

வைத்தியசாலைஅபிவிருத்திச்சபையால் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றமுடியாதென்ற விடயம் கூட அறியாதஒருவராக உள்ளார். இதற்கெதிராக கண்டனத்தீர்மானத்தை எமதுசபை எடுத்துள்ளது. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கமைவாக ஜனாதிபதி சுகாதார அமைச்சர் தொடக்கம் பணிப்பாளர்கள் வரை இப்பிரச்சினை பற்றி அறிவிக்கப்படும். என்றார்.

உதவி தவிசாளர் எ.எம்.ஜாகீர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து காரசாரமாக உரையாற்றினார்கள்.
கூட்டமுடிவில் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் புதிதாக மின்சாரஇணைப்பு செய்யப்பட்ட காரைதீவு இந்து மயானத்தைப் பார்வையிடச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -