கோட்டாவின் கருத்தை ஆதரித்த மங்கள; மத்திய வங்கி மீது காட்டம்!

ஜே.எப்.காமிலா பேகம்-

நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு கடந்த 7 மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட முறையற்ற நிர்வாகமே காரணம் என்று, சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கொவிட் – 19 உம் காரணமல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு ஜனாதிபதி கூறுவது போன்று, முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பன காணப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை மத்திய வங்கியின் உத்தியோகத்தர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்ததுடன், அதன்போது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைக்குமாறு உத்தியோகத்தர்களைக் கடுந்தொனியில் அறிவுறுத்தினார். இத்தகைய பின்னணியிலேயே மங்கள சமரவீர இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு ஜனாதிபதி மத்திய வங்கி மீதும், கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் மீதும் குற்றஞ்சுமத்துகின்றார்.

ஆனால் உண்மையில் கடந்த 7 மாதகாலமாக சீராக ஒழுங்கமைக்கப்படாத நிதிக்கொள்கை மற்றும் தவறான பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றின் விளைவே, இந்த பொருளாதார சீர்குலைவாகும். குறிப்பாக இந்த நெருக்கடியைத் தூண்டியது கடந்த டிசம்பர் 19 இல் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடாத வரி இடைநிறுத்தங்களேயன்றி, கொவிட் – 19 அல்ல.

அதேபோன்று ஜனாதிபதி கூறுவது மிகவும் சரியானதே. எமக்கு முதலீடுகள் தேவை. இன்றவளவில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பனவே முதலீட்டாளர்களைக் கவர்ந்துகொள்வதற்கு அவசியமேயன்றி எதேச்சதிகாரம், இராணுவமயமாக்கல் மற்றும் முதலாளித்துவம் என்பவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -