திருகோணமலை சாம்பல் தீவு களப்பு பல்வேறுபட்டவர்களால் பல சுற்றாடல் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இன்று (19)துறைசார் அதிகாரிகளை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தினார்.
எதிர்வரும் தினங்களில் சாம்பல்தீவு களப்பிற்கு நேரடியாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து களவிஜயம் மேற்கொண்டு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் சுற்றாடல் சார் பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பின் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
விரைவில் களப்பு,ஈர நிலங்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான குழு ஸ்தாபிக்கப்பட்டு உயிர்ப்பல்வகைமை மற்றும் சூழலியல் கட்டமைப்புக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இக்குழுவில் பிரதேச மக்களும் பங்குபெறல் வேண்டும்.அப்போதுதான் அவை தொடர்பான சமகால நிலவரங்களை உடன் அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். சாம்பல் தீவு களப்பினை பாதுகாக்க உரிய திணைக்களம் மூலம் வர்த்தமானிப்படுத்ப்பதுடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இதன்போது முன்மொழியப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.சிவகுமார் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
