மருதமுனையின் அபிவிருத்தி வரிசையில் இன்று அதிகம் பேசப்படுகின்ற ஒன்றாக மருதமுனையின் கடற்கரை வீதியின் அபிவிருத்தியை குறிப்பிடலாம். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையின் சீற்றத்தால் முற்றாக பாதிக்கப்பட்டு பிற்பட்ட காலப்பகுதியில் கிறவல் வீதியாக போடப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் கடந்துள்ள போதும் கடற்கரை வீதியின் அபிவிருத்தி என்பது இன்னும் பகல் கனவாகவே காணப்படுகிறது.இது மருதமுனை மக்களாகிய நாம் விட்ட தவறா என்பதை சற்று
ஆள்மனதில் இட்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் அம்பாரை மாவட்ட வேட்பாளர் வை.கே.றகுமான் தெரிவித்தார்..
மருதமுனையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதன்கிழமை(17-06-
2020)உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து
உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தாவது கிழக்கிலங்கையில் அழகிய
கடற்கரைகளில் ஒன்றாக காணப்படுகின்ற மருதமுனைக் கடற்கரையும் அதனை
சார்ந்த பிரதேசங்களும் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தமது
குடும்பங்களோடு சந்தோசமாக பொழுதுகளை கழிப்பதற்கும்,உணவுகளை
உண்பதற்காகவும் இருந்ததுவிட்டு செல்லுகின்ற இடமாக மாறியுள்ளது.
மருதமுனைக் கடற்கரையின் பெரியநீலாவணை தொடக்கம் பாண்டிருப்பு வரையான
வீதிகள் இதுவரை காலமும் அபிவிருத்தி செய்யப்படாமல்
இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. மாற்றுக்கட்சிகளால் பல முறை கடற்கரை
வீதியை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அரசியல்
அதிகாரத்தில் இருந்தவர்கள் தமது அரசியல் சுய இலாபங்களுக்காக தடுத்தே
வந்துள்ளனர்.இது மருதமுனை ஊரின் அரசியல் வெற்றிடத்தை அழகாக காட்டுகிறது.
இந்த அரசியல் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்கான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த
போதும் அதை பெற்றுக்கொள்ள நாம் தவறிவிட்டோம்.
இன்றுவரைக்கும் நமது மருதமுனை நகரத்தை தமது சுயலாப அரசியல்
தேவைகளுக்காக முட்டுக்கொடுக்கின்ற பிரதேசமாகவே பயன்படுத்திக்
கொண்டிருக்கின்றனர். இந்த நிலை இனிமேலும் தொடர முடியாது. சந்தர்ப்பத்தை
சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலினுடைய இன்றைய களம்
எமக்கும் சாதகமான களமாகவே காணப்படுகிறது.மருதமுனை ஊரின் வாக்குகளை
விட குறைந்த எண்ணிக்கையான வாக்குகள் உள்ள பிரதேசங்களுக்கு வேட்பாளர்
நிறுத்தப்பட்டுள்ள போதும் 13000 வாக்குகளை கொண்ட மருதமுனை மண்ணுக்கு
பாராளுமன்றத் தேர்தலினுடைய வேட்பாளர் பட்டியலில் கூட சந்தர்ப்பம் வழங்காத
அரசியல் தலைமைகளை நிராகரிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு நம்
எல்லோருக்கும் உண்டு.
எனவே மருதமுனை கடற்கரை வீதியினுடைய அபிவிருத்திக்கும் ஏனைய நமது
ஊரின் அபிவிருத்திகளுக்கும் இன்னும் யாரை எதிர்பார்க்கப் போகிறோம். பல
ஆண்டுகளாக ஏமாற்றிப் பிழைத்த அரசியல் தலைமைகளுக்கும் வாக்குகளுக்காக
மட்டும் மருதமுனையை ஏப்பம் விட வருகின்ற அவர்களின் அரசியல்
கைக்கூலிகளுக்கும் மீண்டும் வாக்களித்து நமது மருதமுனை மண்ணின்
எதிர்காலத்தை அரசியல் அனாதையாக்கப் போகிறோமா???
மாறாக மருதமுனைக்கான அரசியல் அதிகாரத்தை எதிர்வரும் பாராளுமன்றத்
தேர்தலில் நமது மண்ணின் எதிர்கால தேவை கருதி பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்
போகிறோமா??? மருதமுனை ஊரின் அரசியல் வெற்றிடத்தை நிவர்த்தி செய்கின்ற
சந்தர்ப்பமாகவும் எதிர்காலத்தில் ஊரின் அபிவிருத்திக்கு வித்திடுகின்ற ஒரு
களமாகவும் இத்தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது நமக்கான சந்தர்ப்பம். நமது மண்ணின் அரசியல் எதிர்காலத்திற்காக எமது மண்ணின் அரசியல் அதிகாரம்... இது நமக்கான சந்தர்ப்பம்.இலக்கு நோக்கிய புதிய அரசியல் பயணத்தில் என்னோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்...என அவர் மேலும் தெரிவித்தார்.
