அறுதி பெரும்பான்மையை ராஜபக்ஸ பெற கூடாது என்பதே மொட்டு கட்சி பங்காளி தலைவர்களின் பெருவிருப்பம்




- சஜித்தின் அம்பாறை முக்கியஸ்தர் கயான் கூறுகிறார்.

ராஜபக்ஸக்களை ஆட்சிக்கு கொண்டு வந்த காரணத்தினால்தான் ஏற்பட்ட சாபமேதான் கொரோனா வைரஸின் வடிவத்தில் நாட்டு மக்களை பீடித்து உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை முக்கியஸ்தர் கயான் தர்ஷன தெரிவித்தார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களாக போட்டியிட்ட ஒரு தொகை வேட்பாளர்கள் நேற்று திங்கட்கிழமை இறக்காமத்தில் கயான் தர்ஷன முன்னிலையில் சம்பிரதாயபூர்வமாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்.

இதன்போது கயான் தர்ஷன மேலும் தெரிவித்தவை வருமாறு

நாட்டை ஆள்பவர்கள் வல்லவர்களாக மாத்திரம் அன்றி நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நல்ல தலைவர் ஆளுகின்ற நாட்டில்தான் காலம் தவறாமல் மழை பெய்யும் என்று பெரியார்கள் சொல்லி சென்று உள்ளனர். நல்ல தலைவன் ஆளுகின்ற நாட்டையும், அந்நாட்டின் மக்களையும் இயற்கை அனர்த்தம், நோய், வறுமை, பஞ்சம், வறட்சி ஆகியவை அணுக மாட்டாது என்று பண்டைய நூல்களில் சொல்லப்பட்டு இருக்கின்றது.

ஆனால் ராஜபக்ஸக்களின் ஆட்சியில் இயற்கை அனர்த்தம், நோய், வறுமை, பஞ்சம், வறட்சி ஆகியன நாட்டையும், மக்களையும் பீடித்து வருத்துவதையே காண முடிகின்றது. அன்று ஆழி பேரலை அனர்த்தம் நடந்தது. முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்தேறியது. இப்போது நாட்டு மக்களை அழிக்க கொரோனா கங்கணம் கட்டி வந்திருக்கின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக சீரழிந்து அச்சத்தில் உறைந்து கிடக்கின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறுபான்மை மக்களை இந்நாட்டின் இரண்டாம் தர பிரஜைகளாகவே நடத்துகின்றது. பெரமுனவின் தலைவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களை மாற்றான் தாய் மன பான்மையுடனேயே நடத்துகின்றனர். அவர்களின் வாய்களில் இருந்து வெளிப்பட்டு வருகின்ற வார்த்தைகள் அவற்றையே பிரதிபலிக்கின்றன.

ஆயினும் குறுகிய சுய இலாப அரசியல் நோக்கங்களுக்காக தமிழ், முஸ்லிம் தலைவர்கள் சிலர் ராஜபக்ஸக்களுக்கு செம்பு தூக்குகின்றார்கள். வேண்ட தகாதவர்களாகவும், தீண்ட தகாதவர்களாகவும் ராஜபக்ஸக்கள் அவர்களை நடத்துகின்றபோதிலும் கொத்தடிமைகளாக செயற்படுகின்றனர். இவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களை காட்டி கொடுத்தும், கூட்டி கொடுத்தும் பிழைக்கின்றவர்கள் என்பதே எனது அபிப்பிராயம் ஆகும்.

மக்கள் நலனை முன்னிறுத்துகின்ற அரசியல்வாதிகள் அனைவரும் எமது தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து உள்ளார்கள். எதிர்காலத்தில் இன்னும் அநேகர் இணைவார்கள். தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பேராதரவுடன் வெகுவிரைவில் சஜித் யுகம் மலரும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் உதவி, ஒத்தாசையுடன் எமது தலைவர் சஜித் பிரேமதாஸ இநாட்டின் அதிகாரம் பொருந்திய பிரதமராக எழுச்சி பெறுவார்.
அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு பின்னர் ஜனாதிபதியை காட்டிலும் பிரதமருக்கான அதிகாரங்கள் ஓங்கி நிற்கின்றன. கையறு நிலையிலேயே ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ பொது தேர்தலுக்காக பாராளுமன்றத்தை வேறு வழி இன்றி கலைக்க நேர்ந்தது. அவர்கள் மூன்றில் இரண்டு அறுதி பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெற்று நிலையான அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று பகல் கனவு காண்கின்றனர். அது ஒரு போதும் நடக்கவே முடியாத கற்பனை ஆகும்.

நான் இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் கூற வேண்டி உள்ளது. பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவே கூடாது என்று பெரமுனவின் பங்காளி கட்சி தலைவர்கள் பலரும் ஆண்டவனுக்கு நேர்த்தி கடன்கள் வைத்தவர்களாக உள்ளனர். ஏனென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று விட்டால் ராஜபக்ஸக்களின் அட்டகாசம் இன்னமும் கட்டு மீறி விடும் என்பது அந்த பங்காளி கட்சி தலைவர்களுக்கே மிக நன்றாக தெரியும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த நன்மைகளையும் இப்போது வரை செய்து கொடுக்காமல் ஏமாற்று அரசியலையே தொடர்ந்து முன்னெடுத்த வண்ணம் உள்ளனர். இதை நாட்டு மக்கள் அனைவரும் மிக நன்றாகவே இப்போது புரிந்து வைத்திருக்கின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மேற்கொண்ட தவறை திருத்தி கொள்வதற்கு சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது.
அதே போல தமிழ், முஸ்லிம் மக்கள் இத்தேர்தலிலும் சஜித் தரப்பையே ஆதரிப்பார்கள் என்பது திண்ணம் ஆகும். அவர் ஒருவர் மாத்திரமே இந்நாட்டை இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் வழி நடத்த கூடிய. ஒரே ஒருவர் ஆவார். இவரின் வெற்றி நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கின்ற வெற்றி ஆகும். இவரின் மகத்தான வெற்றியில் அம்பாறை மாவட்ட மக்களும் பங்காளிகள் ஆதல் வேண்டும். அதற்காகவே உங்களின் பிரதிநிதியாக இத்தேர்தலில் போட்டியிட நான் முன்வந்து உள்ளேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -