சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 84 நாடுகளில் இதுவரை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் 3,286 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. வோஷிங்டனில் 10 பேரும், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். வேகமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளை தீவிரமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள், அந்தந்த நாடுகளிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கலிபோர்னியா மாநிலத்தில் இந்த வைரசுக்கு ஒருவர் உயிரிழந்தையடுத்து, அங்கு சுகாதார அவசர எச்சரிக்கையை கலிபோர்னியா மாநில ஆளுனர் பிரகடனம் செய்துள்ளார். வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்கிடையே கொரோனா வைரசை கட்டுப்படுத்தி, வைத்திய உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் $8.3 Billion ( சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் கோடி ரூபா ) நிதியொதுக்கபட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செனட் சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.