நீண்ட நெடிய போராட்டத்தினால் மூன்று தசாப்தம் கடந்து கிடைத்திருக்கும் உள்ளூராட்சி; சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் மகிழ்ச்சி!





தான் இழந்த உள்ளூராட்சி உரிமையை நீண்ட நெடிய போராட்டங்களின் பயனாக மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் சாய்ந்தமருது மண் மீண்டும் பெற்றிருப்பதையிட்டு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் பூரிப்படைகிறது.

சாய்ந்தமருதின் இந்த உரிமையை மீட்டெடுக்க, உரிய தருணத்தில் துணிச்சலுடன் களமிறங்கி உதவிய முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கு இவ்வூர் மக்கள் சார்பில் நன்றிப்பூக்களை காணிக்கையாக சொரிகின்றோம் என்றும் மறுமலர்ச்சி மன்றம் குறிப்பிட்டுள்ளது.
இது விடயமாக சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"இந்த போராட்டத்தின் உருவாக்கம் என்பது பல துயரமான காயங்கள் நிறைந்ததாகும். 2006ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கு முன்னதாக தமதூருக்கு தனியான நகர சபை கிடைத்து விட வேண்டும் என்று மறுமலர்ச்சி மன்றம் துடித்தது. எவரும் கண்டுகொள்ளவில்லை. காலம் தவறிப்போனது. சாய்ந்தமருதில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை தவிர யாருமே ஏற்றுக்கொள்ளாத கோரிக்கையாகவே அன்று அது இருந்தது. இதனை சாத்தியப்படுத்த நாம் எடுத்துக் கொண்ட சபதத்தினால் பல சவால்களை எதிரிகொண்டு, அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டியிருந்தது. அதற்காக மக்களை அணி திரட்டி போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன.
அவ்வேளையில், தீர்வு தரக்கூடிய ஒரு தலைவனாக அப்போதைய அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவை இனம்கண்டு சந்திப்புகளை மேற்கொண்டோம். அவரை சாய்ந்தமருது மண்ணுக்கு அழைத்து வந்து பிரகடனம் செய்தோம். அப்போது எமது சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளையும் அழைத்தோம். சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை முதன்முதலாக ஏற்றுக்கொண்ட ஓர் அரசியல் தலைமையாகவும் அதனை நிறைவேற்றித் தருவதற்கு முன்வந்த ஓர் அமைச்சராகவும் அதாஉல்லா அவர்கள் இருந்திட்டபோதிலும் அன்றைய பள்ளிவாசல் நிர்வாகம் எமது அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை.
அவ்வப்போது பல தரப்பினராலும் எமக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. அரசியல்வாதிகளின் அடிவருடிகள் என்றார்கள். எவ்வாறாயினும் மறுமலர்ச்சி மன்றத்திடம் 2008-2014 காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வழங்கிய வாக்குறுதியே எமது போராட்டங்களுக்கும் நகர்வுகளுக்கும் உத்வேகத்தை தந்திருந்தது. அதுதான் இன்று ஒரு தசாப்தம் கடந்து, யதார்த்தமாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் இப்போராட்டத்தில் ஒத்துழைத்த அனைத்து நல்லுள்ளங்களும் நன்றியுணர்வுடன் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர். இப்போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. நாளும் பொழுதும் பல்வேறு மட்ட கூட்டங்களும் சந்திப்புகளும் கோரிக்கையின் ஆவணப்படுத்தல்களும் துண்டுப்பிரசுரங்களை சுவரொட்டிகளும் சாட்சியமாகிய நினைவுகள் நெஞ்சில் நீங்காதவை. இக்கோசத்தினை மக்கள் மயப்படுத்துவதற்காக ஊடகவியலாளர் நூருல் ஹக் தலைமையில் 2008' மாகாண சபை தேர்தல் மற்றும் 2010' பொதுத் தேர்தல்களில் களமிறங்கிய வரலாறும் உண்டு.

ஒரு முழு ஊரினதும் கோரிக்கையினை சில தனி நபர்களாக, ஓர் அமைப்பினராக எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் ஊரின் ஒட்டுமொத்த கோரிக்கையாக அது வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் முன்னிறுத்தி, இதனை பள்ளிவாசல் பொறுப்பேற்க முன்வர வேண்டும் என்ற அழைப்பை ஏற்கச் செய்வதற்கே நீண்ட காலமாக சகிப்புத்தன்மையுடன் பல தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. அவை ஒவ்வொன்றும் மறைமுக யுத்தமாகவே இருந்தன.

மறுபுறம் மக்களை அணி திரட்டல், பொது அமைப்பினரையும் புத்திஜீவிகள், வர்த்தகர்கள், முக்கிய புள்ளிகள், அரசியல்வாதிகள் என்று பல தரப்பினரையும் தெளிவுபடுத்தி ஒன்றிணைத்தல், போராட்டங்களை முன்னெடுத்தல் என்று பின்வாங்காமல் முன்நகர்ந்தோம்.

சில அரசியல் தலைமைகளினால் காய்ச்சல் கோஷமாக பார்க்கப்பட்ட எமது சபைக் கோரிக்கையை, அவர்களே ஏற்றுக் கொண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வாக்குறுதியளிக்க வைக்குமளவுக்கு இச்செயற்பாடுகள் அமைந்திருந்தன. அல்ஹம்துலில்லாஹ். அந்த வாக்குறுதிகள்தான் எமது சாய்ந்தமருது நகர சபை போராட்டத்தை கூர்மைப்படுத்துவதற்கு மூலதனமாக அமைந்திருந்தன. அவ்வாறே, அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் இக்கோரிக்கையை பள்ளிவாசல் கையேற்க முன்வந்து, போராட்டங்களை நெறிப்படுத்தி, முன்நகர்த்தியமைதான் இன்றைய வெற்றியின் அடிநாதமாக அமைந்திருக்கிறது.

மறுமலர்ச்சி மன்றத்திடம் 2008-2014 காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வழங்கிய வாக்குறுதியும் நகர்வுகளும், சிராஸ் மீராசாஹிபின் மேயர் பதவி இழப்பும் அவர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசில் இணைந்தமை, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா 04 பிரிப்புக்கு தயாரானமை, கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசலின் தேர்தல் ஆணையாளருக்கான கடிதம், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பள்ளிவாசல் குழுவினர் கரு ஜயசூரியவுடன் சந்திப்பு, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் தனி நபர் பிரேரணை, மாகாண சபை உறுப்பினர் ஜெமீலின் கட்சித் தாவல், முன்னாள் அமைச்சர் றிஸாத்தின் பகிரங்க வாக்குறுதி, முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நேரடி தலையீடு, முன்னாள் பிரதமர் ரணிலின் வாக்குறுதி, ஹக்கீம், ஹரீஸ் ஆகியோருடன் பள்ளிவாசல் குழுவினர் தொடர் சந்திப்புக்கள், சாய்ந்தமருது ஷூரா கவுன்சில் அங்குரார்ப்பணம், தனியாக தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற ஷூரா கவுன்சிலின் கோரிக்கை, ஊடகவியலாளர் நூருல்ஹக் அவர்களின் 'யார் துரோகிகள்' நூல் வெளியீடு, 2017' நவம்பர் எழுச்சி போராட்டம், 18000 வாக்குகள் போனாலும் பரவாயில்லை எனும் ஹரீஸின் விடாப்பிடி, கல்முனை மாநகர சபை தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையில் சுயேட்சையாக போட்டியிட்டு, வெற்றியீட்டியமை, ரவூப் ஹக்கீமின் அழைப்பு, தோப்புக்கண்ட சம்பவம், மேயர் தெரிவு, சாய்ந்தமருது பிரிந்தாலும் கல்முனை பாதிப்புறாது என்று நிருபிக்கப்பட்டமை, சபைக் கோரிக்கை தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸினால் பந்தாடப்பட்டமை, ஜே.வி.பி. விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை, மயோன் முஸ்தபாவின் மீள் வருகை, சாய்ந்தமருது பள்ளிவாசல்- பஸில் ராஜபக்ஷ ஒப்பந்தம், மயோன் முஸ்தபா மஹிந்தவை அழைத்து வந்து கொடுத்த பகிரங்க வாக்குறுதி, மயோன் முஸ்தபா பஸீல் ராஜபக்சவை அழைத்து வந்து கொடுத்த வாக்குறுதி, விமலவீர திஸாநாயக்கவை பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து சந்தித்தமை, அலி சப்ரியை பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து சந்தித்தமை, பள்ளிவாசல் தரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்தியமை, பள்ளிவாசல் தரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ்வுடன் இணைந்து பிரதமர் மஹிந்தவை சந்தித்தமை, அதன் பேரில் பிரதமரின் அவசர உத்தரவு, கடைசியாக செயல் வீரன் அதாவுல்லாஹ்விடம் பொறுப்பை முழுமையாக ஒப்படைத்தமை என்று பல்வேறு கட்டங்களை தாண்டிய, வலிகள் நிறைந்த போராட்டமாக இப்பயணம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் இடம்பெற்ற போதிலும், அவை அனைத்தும் களையப்பட்டு இன்று முழுமையான வெற்றியினை கொண்டு வந்து சேர்துள்ளது.

இவை அனைத்திலும் சம்பந்தப்பட்ட அனைவரும் தனித்தனியாக நன்றிக்குரியவர்கள், இவை அனைத்திற்கும் மேலாக வல்லோனின் உதவி, எமது மக்களின் துஆக்கள், நேரடியான பங்களிப்புகள், பள்ளிவாசல் மற்றும் தோடம்பழ உறுப்பினர்களின் ஓயாத செயற்பாடுகள், வழிநடத்தல் குழுவின் காத்திரமான பங்களிப்புகள், நேரடியானதும் மறைமுகமானதுமான உதவிகள், சாய்ந்தமருது வர்த்தகர் சங்கம், உலமா சபை உள்ளிட்ட பொது அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், மீனவர் மற்றும் விவசாய சங்கங்கள், தனிப்பட்ட நபர்கள் என்று அத்தனை உள்ளங்களும் பெரும் நன்றிக்குரியவர்கள்.

இந்த சந்தர்ப்பம் எவரையும் வஞ்சம் தீர்க்கும் நேரமல்ல. எமது கல்முனை சகோதரனை பார்த்து ஏவம் கேட்கிற நேரமுமல்ல என்பதை மனதில் கொள்வோம். பொறுமையோடு அல்லாஹ்வை புகழ்வோம். வெற்றியை சுவைப்போம். எமது பிரிவினால் கல்முனை மண்ணுக்கும் மக்களுக்கும் ஒருபோதும் பாதிப்பு ஏற்படாது என்பதை மீளவும் அடித்து சொல்லுவோம். அவர்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் என்றும் சாய்ந்தமருது மக்கள் பக்கபலமாகவே இருப்போம். கல்முனை மக்களோடு சேர்ந்தே எமது வெற்றியை கொண்டாடுவோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -