சாய்ந்தமருதை சேர்ந்த கலாபூசணம் முபீதா உஸ்மான், ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் இவ்விருதுத் திட்டத்தின் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையினர், அவரது வீடு சென்று இவ்விருதை கையளித்துள்ளனர்.
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்ற முபிதா உஸ்மான் இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். இவர் தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக பணியாற்றியிருப்பதுடன் அரசாங்க தகவல் தினைக்களத்தில் பிரச்சார உதவியாளராகவும் பத்திரிகை தொடர்பு உத்தியோகத்தராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளுக்காக கடந்த 2008ஆம் ஆண்டு மத்திய கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாபூசணம் விருதையும் கடந்த 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி, கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முதலமைச்சர் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த முதல் பெண்ணாகவும் அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையிலும் இவர் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
முஸ்லிம் சமாதான செயலகத்தின் அம்பாறை பிராந்திய பணிப்பாளராக கடமையாற்றிய முபீதா உஸ்மான் சமூகங்களிடேயே நல்லுறவு, ஐக்கியம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் பொருட்டு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி பொது மக்களுக்கான நலன்சார் சேவைகளிலும் இவர் ஈடுபட்டு வருகின்றார்.